கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறை பயன்படுத்தப்படுகிறது. குறைவான நேரத்தில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ரேபிட் டெஸ்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பல குளறுபடிகள், தவறான முடிவுகள் பெறப்பட்டதால் அதை நிறுத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது.

தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் சளி மாதிரிகளைச் சேகரித்து பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்வதற்கு தனியார் ஆய்வகங்களில் ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முடிவுகளை அறியவும் ஓரிரு நாள்கள் ஆகின்றன. ஆனால், எளிய சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தைக் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அண்மையில் அகமதாபாத்தில் ஒரு பொது மருத்துவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவு நெகட்டிவ். உடன் பணியாற்றிய மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து நெஞ்சகப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்துகொண்டார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் நுரையீரலில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
கொரோனா பெருந்தொற்று பரவும் சூழலில் சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் முக்கியத்துவம் பெறுகிறது.ரேடியாலஜிஸ்ட் ஜெ.சக்கரவர்த்தி
தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து 125 மருத்துவர்கள் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டதில் அவர்களில் 73 பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டது.
கொரோனா பரிசோதனைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனையே போதுமானதா என்று ரேடியாலஜி மருத்துவர் ஆனந்த்குமாரிடம் கேட்டோம்:
"கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அறிவதற்கு, நுரையீரல் பாதிப்பின் அளவை அறிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். அதனால்தான் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் அனைவருக்கும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சி.டி.ஸ்கேன் என்பது கொரோனா தொற்று இருக்குமா என்று காட்டும் குறியீடு மட்டுமே. ஸ்கேனில் நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும் சிலருக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடும். சி.டி.ஸ்கேன் பரிசோதனையின்போது கதிர்வீச்சு வெளியாகும் என்பதால் அனைத்து நோயாளிகளையும் அந்தப் பரிசோதனைக்குட்படுத்துவது சாத்தியமில்லாதது.
ஆர்.டி.பி.சி.ஆர் மட்டுமே கோவிட்-19 நோய்க்கு முறையான பரிசோதனை முறை. நோயின் தீவிரத்தைப் பரிசோதிக்க சி.டி.ஸ்கேன் செய்யலாம்" என்றார் அவர்.
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்களுக்கும் சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் நோய் கண்டறியப்படுகிறது என்ற வாதத்தை முன் வைக்கிறார் ரேடியாலஜி மருத்துவர் ஜெ.சக்கரவர்த்தி.
"ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையிலும் 40 முதல் 50 சதவிகிதம் தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு சி.டி ஸ்கேன் செய்வது அவசியம்.

சில நிமிடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு சில நிமிடங்களில் முடிவும் தெரிந்துவிடும். குறைவான நேரத்தில் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.
சி.டி.ஸ்கேனின் மூலம் நோயின் தீவிரத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அதற்கான குறியீடுகள் ஸ்கேன் முடிவில் இடம்பெற்றிருக்கும். பாதிப்பின் அளவுக்கான ஸ்கோர் 20 அல்லது அதற்குக் கீழ் இருந்தால் மிதமான பாதிப்பு, 20-க்கு மேல் இருந்தால் தீவிரமான பாதிப்பு, 30-க்கும் மேல் இருந்தால் மிகவும் தீவிரமான பாதிப்பு என்று புரிந்துகொள்ளலாம். பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப சிகிச்சையும் அளிக்க முடியும்.
நோயாளிக்கு நோயின் பாதிப்பு குறைந்துள்ளதா, முழுவதும் குணமடைந்துவிட்டாரா, க்வாரன்டீன் காலத்தை அதிகரிக்க வேண்டுமா என்றெல்லாம் முடிவுக்கு வருவதற்கு சி.டி.ஸ்கேன் முடிவு அவசியம். நோயின் தீவிரத்தை அறிந்துகொள்வதற்கும், சிகிச்சைக்கு 15 முதல் 20 நாள்களுக்குப் பிறகும் சி.டி.ஸ்கேன் எடுப்பது நல்லது. ஸ்கேன் பரிசோதனையின்போது வெளிப்படும் கதிர்வீச்சு மிகவும் குறைவான அளவாகவே இருக்கும்.

அதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. கொரோனா போன்ற பெருந்தொற்று பரவும்போது சூழலில் சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் முக்கியத்துவம் பெறுகிறது
ஸ்கேனில் நெகட்டிவ் என்று முடிவு வந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுவது மிகவும் அரிய நிகழ்வு. வெறும் 7 முதல் 10 சதவிகிதம் வாய்ப்பே அதற்கு உள்ளது" என்றார் அவர்.