Published:Updated:

இரண்டு டோஸுக்குப் பிறகும் கோவிட் தொற்று; அதிகரிக்கும் மக்களின் சந்தேகங்கள்; நிபுணர்கள் சொல்வது என்ன?

A health worker administers the vaccine
A health worker administers the vaccine ( AP Photo / Mahesh Kumar A )

கோவிட்-19 தொற்றுக்கு கண்டறிந்ததுபோல் எந்த நோய்க்கும் இவ்வளவு வேகமாகத் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. பல நாடுகளில் நடைபெற்றுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கோவிட்-19 தடுப்பூசி ஒரு தோல்வி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தோல்வியடைய வாய்ப்பும் இல்லை.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் தடுப்பூசி குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை. இதுதொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் 2,382 காவல்துறையினர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் தொற்றுக்கு ஆளானவர்களில் 93 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதுதான்.

covid-19 infection
covid-19 infection

இந்தியாவில் தற்போது வழங்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்குமே `அவசர கால பயன்பாடு' என்ற அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உலகளவில் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இந்த அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவது தொடர்ந்து பேசு பொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகள் குறித்து நடைபெறும் ஆய்வுகள் குறித்த தரவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேசிய தடுப்பூசித் திட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மருத்துவர் ஜேக்கப் புலியெல் தாக்கல் செய்த மனுவில் அவர் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அப்போது, இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோ டெக் ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசி குறித்த தரவுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும் போதிய அளவு பரிசோதனைக்குட்படுத்தாத இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தடுப்பூசி செயல்திறன் பற்றிய தரவுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி. அவர் மேலும் கூறுகையில், ``தற்போது அரசாங்கம் விற்றுக் கொண்டிருக்கும் தடுப்பூசி 100% செயல்திறன் உடையது அல்ல. நூறு சதவிகிதம் நோயைத் தடுக்கக்கூடிய தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோவாக்சின் தடுப்பூசியானது `இன்ஆக்டிவ்' (inactive method) என்னும் முறையில் வைரஸை செயலிழக்கச் செய்து அதன் மூலம் உருவாக்கப்படுகிறது. சீனாவிலும் இதே முறையைப் பயன்படுத்தி தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வைரஸை செயலற்றுப் போகச் செய்யும் முறை வெளிப்படையாக விளக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

இம்முறையில் தடுப்பூசி தயாரிக்கும்போது வைரஸ் முழுவதும் கொல்லப்படாவிட்டால் எஞ்சி இருக்கும் வைரஸ் மூலமாகக்கூட தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தடுப்பூசியே நோய்க்குக் காரணமாக மாற வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் கே.கே அகர்வாலின் மரணம்தான் தடுப்பூசி குறித்து அதிக கேள்விகளை எழுப்புகிறது.

இரண்டாவது அலையில் தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்கள் கோவிடால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள்கூட தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவில்லையா? உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிக்கும்போது இந்தத் தடுப்பூசிகள் எந்தப் பலனும் அளிப்பது இல்லை. இவ்வாறு தடுப்பூசி செலுத்திய பின்னும் நோய்த்தொற்று ஏற்படுவதை `பிரேக் த்ரூ இன்ஃபெக்ஷன்' (breakthrough infection) என்போம். இதுகுறித்து இதுவரை இந்தியாவில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தும் அரசு, அதன் செயல்திறன் பற்றிய தரவுகளையும், தயாரிக்கும் முறையையும் ஒளிவுமறைவற்று தெரிவிக்க வேண்டும்.

கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றி முழுமையாக ஆய்வுசெய்து அதன் முடிவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

 infection
infection
தடுப்பூசி விவகாரம்:`மாநிலம் VS ஒன்றிய அரசு என்றாகிவிட்டது' -கேரள முதல்வருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

இதுபற்றி இன்டர்னல் மெடிசின் மருத்துவர் ரோஸ் ரெய்ச்சலிடம் பேசினோம்:

``கோவிட்-19 தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தி குறைந்தது 15 நாள்களுக்குப் பிறகுதான் போதுமான அளவு ஆன்டிபாடி உருவாகி நோய்த்தொற்று ஏற்பாடாமல் தடுக்கும். 15 நாள்களுக்கு முன்பாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் நோய் பாதிப்பு ஏற்படும். இப்போது இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள் 100 சதவிகிதம் செயல்திறன் மிக்கவை அல்ல. 70 - 80 சதவிகிதம் செயல்திறன் உள்ளவை என்றுதான் தெரிவித்திருக்கின்றனர். அதனால் மீதமுள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாது என்பதில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுதான் தடுப்பூசி போட அறிவுறுத்துவதன் நோக்கம். தடுப்பூசியின் 70 சதவிகிதம் செயல்திறன், உடலில் வைரஸின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது, உடலில் வேகமாக வைரஸ் பெருகுவது உள்ளிட்டவைதான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சிலர் உயிரிழப்பதற்கான காரணங்கள்.

புதிய வேரியன்ட் சிக்கல்!

Internal medicine expert Dr.Rose Rachel
Internal medicine expert Dr.Rose Rachel

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. இந்தக் குறுகிய காலகட்டத்தில் தடுப்பூசி செயல்திறன் பற்றிய முடிவுக்கு வருவது சாத்தியமற்றது. உருமாறிய வைரஸ்களுக்கு எதிராகத் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசி செயலாற்றுகிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவுகள் வந்தால்தான் உருமாறிய வைரஸுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா என்று தெரியும்.

புதிய தடுப்பூசி

சார்ஸ் கோவி-1, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறிய முடியாத நிலை உள்ளது. உருமாறுவது, செயல்திறன், பாதுகாப்பு திறன், போதுமான தரவுகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களால் தடுப்பூசி கண்டறியப்படுவது இன்னும் சாத்தியப்படவில்லை. எந்த நோய்க்கும் எதிராக 100% செயல்திறன் மிக்க தடுப்பூசியைக் கண்டறிய குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கவே முடியாது.

corona virus
corona virus

தோல்வியடையுமா?

கோவிட்-19 தொற்றுக்கு கண்டறிந்ததுபோல் எந்த நோய்க்கும் இவ்வளவு வேகமாகத் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. பல நாடுகளில் நடைபெற்றுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கோவிட்-19 தடுப்பூசி ஒரு தோல்வி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தோல்வியடைய வாய்ப்பும் இல்லை.

காரணம், 90 சதவிகிதத்துக்கும் மேல் செயல்திறன் மிக்க தடுப்பூசிகள் உள்ளதாகப் பிற நாடுகளின் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்தவரை நேர்மறையான விளைவுகள்தான் தெரிகின்றன. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கக் கூடாது" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு