Published:Updated:

குழந்தைகளிடம் தொடங்கியுள்ள கோவிட் தடுப்பூசி பரிசோதனைகள்; பாதுகாப்பானவைதானா? விளக்கும் நிபுணர்கள்

COVID-19 vaccine delivery system in New Delhi
COVID-19 vaccine delivery system in New Delhi ( AP Photo/Altaf Qadri )

தடுப்பூசிகளை இதுபோல் பரிசோதிப்பது வழக்கமாகவே நடப்பதுதான். எப்போதுமே இப்படித்தான் ஒவ்வொரு கட்டப் பரிசோதனையும் முடிந்து இறுதியாகக் குழந்தைகளிடம் இந்தப் பரிசோதனை நடக்கும்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 2 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்குக் கீழிருக்கும் 525 குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதிக்கும்.

இந்நிலையில், பொதுமக்களிடையே ஒருவித அச்சமும் குடிகொண்டுள்ளது. குழந்தைகளிடம் மருந்து குறித்த பரிசோதனையை மேற்கொள்வது பாதுகாப்பனதுதானா என்ற விமர்சனங்களும் ஆங்காங்கே எழுந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்த அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதற்காக, குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசினோம்.

Vaccines
Vaccines
AP Illustration/Peter Hamlin

அவர், ``தடுப்பூசிகளை இதுபோல் பரிசோதிப்பது வழக்கமாகவே நடப்பதுதான். எப்போதுமே இப்படித்தான் ஒவ்வொரு கட்டப் பரிசோதனையும் முடிந்து இறுதியாகக் குழந்தைகளிடம் இந்தப் பரிசோதனை நடக்கும். அதனால் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை. எந்தவொரு பரிசோதனையையும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் சம்மதத்துடன்தான், இந்தப் பரிசோதனை நடைபெறும். சின்ன பக்கவிளைவு ஏற்பட்டாலும், அதை நிறுத்திவிடுவார்கள். ஏற்கெனவே 18 வயதுக்கு மேல் உள்ளோருக்கு தடுப்பூசி போடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் போடப் போகிறார்கள் அவ்வளவுதான்" என்று கூறினார்.

பொதுமக்களில் ஒரு தரப்பினருக்கு, குழந்தைகளுக்கு கட்டாயம் கோவிட் தடுப்பூசியைச் செலுத்தியே ஆக வேண்டுமா என்ற அச்சம் இருக்கிறது. குழந்தைகளிடையே கோவிட்-19 பெரியவர்களிடையே நிகழ்வது போல், அதிக உயிரிழப்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. இந்த விகிதம் குறைவாக இருந்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

COVAXIN
COVAXIN

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடைய உடல், கோவிட் தடுப்பூசிக்கு வெவ்வேறு விதமாகச் செயலாற்றுமா?

குழந்தைகளுடைய நோய் எதிர்ப்பாற்றல் புதிதாக வளர்ந்துகொண்டிருப்பது. அது, இதுபோன்ற தொற்றுநோய்களை இதற்கு முன் பார்த்திருக்காது. ஆகவே, தடுப்பூசி அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலில் பெரியவர்களிடையே இருப்பதைவிடக் கணிசமாகச் செயலாற்றும் என்று சொல்லப்படுகிறது. ஃபைஸர் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ளோருக்குச் செலுத்தியபோது, அவர்களுடைய உடலில் வைரஸ் கிருமிகளைத் தடுக்கும் ஆன்டிபாடிகள் 16 - 25 வயது வரை உள்ளோரிடம் உருவானதைவிட அதிகமாகவே உருவாயின. மேலும், 12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கும் இதேபோன்ற நேர்மறை விளைவுகள்தான் இருக்கும்.

அவர்களுடைய உடலில் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் இப்படித் தீவிரமாக உருவாவதால், பெரியவர்களைவிட குழந்தைகளிடையே தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு காய்ச்சல் ஏற்படக்கூடும். அதன்மூலம், அவர்களுடைய உடலில் எதிர்ப்பாற்றல் செயல்படத் தொடங்குவதோடு, இதர பக்கவிளைவுகளையும் அது குறைத்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தத் தடுப்பூசிகள் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.

முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்

இதுகுறித்துப் பேசிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ``குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றால், அதற்குக் குழந்தைகளிடையே பரிசோதனை செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் பயன்படுத்தக் கூடாது. ஒரு தடுப்பூசியை முதலில், பெரியவர்களில் பெரும்பகுதி மக்கள் தொகைக்குச் செலுத்தி, எவ்வித பாதிப்பும் இல்லையென்பதை உறுதி செய்வார்கள். அதன்மூலம், ஆராய்ச்சியில் மட்டுமன்றி நடைமுறைப் பயன்பாட்டிலும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகே குழந்தைகளிடம் அந்தத் தடுப்பூசியைப் பரிசோதிப்பார்கள்.

பாரத் பயோடெக் மட்டுமன்றி, அமெரிக்காவில் ஃபைஸர் நிறுவனமும் இதைச் செய்துள்ளது. போலியோ சொட்டு மருந்து அறிமுகமானபோதும்கூட, குழந்தைகளிடம் பரிசோதித்த பிறகே பெருவாரியான குழந்தைகளுக்குச் செலுத்தத் தொடங்கினார்கள். பெற்றோர்கள் அனுமதியளித்த பிறகே குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை நடைபெறும். இது வழக்கமான செயல்முறைதான் அஞ்சத் தேவையில்லை" என்று கூறினார்.

மேலும், பலகட்ட பரிசோதனைகளுக்குப் பின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான், இப்போது 18 வயதுக்குக் கீழே இருக்கும் குழந்தைகளிடையே தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில், தடுப்பூசிக்கு முக்கியமான பங்கு உண்டு. ஜூலை 2020-ம் ஆண்டின்போதே 12 வயதுக்கும் மேற்பட்டோரிடையே ஃபைஸர் நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டது. சுமார் 3,000 குழந்தைகளில், 2,259 குழந்தைகள் 12 வயதிலிருந்து 15 வயதுக்குள் இருந்தவர்கள். 754 குழந்தைகள் 16 மற்றும் 17 வயதைச் சேர்ந்தவர்கள். 2021-ம் ஆண்டு மார்ச் மாதம், ஃபைஸர் நிறுவனம் தன்னுடைய கோவிட் தடுப்பூசியை 11 வயதுக்கும் கீழே இருந்த குழந்தைகளிடையே செலுத்தத் தொடங்கியது.

A health worker prepares a Pfizer coronavirus vaccine
A health worker prepares a Pfizer coronavirus vaccine
AP Photo/Alvaro Barrientos

ஆனால், இந்தியாவில் குழந்தைகள் மீது தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. இந்தத் தடுப்பூசி முதல் கட்டமாக 525 குழந்தைகளுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். 28 நாள்களுக்குள் இரண்டு டோஸ்களும் கொடுக்கப்படும். மேலும், பக்க விளைவுகள், அவர்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் அனைத்துமே தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. டெல்லி மற்றும் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், நாக்பூரில் இருக்கும் மெடிட்ரினா மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகிய இடங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதியிலிருந்து பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளிடையே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளோடு, கூடுதலாக ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி-யோடு சேர்த்து மூன்று தடுப்பூசிகள் இருக்கின்றன. இதில், தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மட்டுமே குழந்தைகளிடம் தன்னுடைய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு