Published:Updated:

ஜனதா கர்ஃபியூ... இந்த மூன்று காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது! #JanataCurfew

ஜனதா கர்ஃப்யூ
ஜனதா கர்ஃப்யூ

ஜனதா கர்ஃபியூ உத்தரவை ஆதரித்து கமல்ஹாசன், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், மாதுரி தீக்ஷித், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சீனா, இத்தாலியைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஊடுருவிப் பலரையும் பதற்றமடைய வைத்திருக்கிறது கொரோனா வைரஸ். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அலுவலகம் செல்பவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலைபார்ப்பதற்கான வசதிகள் எனப் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருந்தாலும், நோய் பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுதான் 'ஜனதா ஊரடங்கு உத்தரவு'.

PM Modi
PM Modi

அதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இந்தியர்கள் அனைவரும் தங்களின் வீட்டைவிட்டு வெளியே எங்கும் போகக்கூடாது என்பதுதான் இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு. மேலும், "இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட இரண்டு முக்கியமான விஷயங்களைப் பின்பற்றவேண்டியது அவசியமாக உள்ளது. அதுதான் தீர்மானித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல். வயதானவர்கள் நிச்சயம் இந்நாளில் வெளியே வரக்கூடாது. மற்றவர்கள் தேவையின்றி அனாவசியமாக வெளியே வரக்கூடாது.

கொரோனா வைரஸ் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. ஒட்டுமொத்த நாடும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், மார்ச் 22, மாலை 5:00 மணிக்கு, இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒத்துழைக்கும் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதற்காக, மக்கள் தங்கள் வீடுகளின் வளாகத்துக்குள் நின்றபடி கைகளைத் தட்டி அல்லது தங்கள் வீட்டுப் பாத்திரங்கள் மூலம் சத்தம் எழுப்பி நன்றி தெரிவிக்கலாம்" என்று வலியுறுத்தினார் மோடி.

Corona Virus
Corona Virus

ஜனதா கர்ஃபியூ உத்தரவை ஆதரித்து கமல்ஹாசன், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், மாதுரி தீக்ஷித், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும், நோய் பரவாமல் இருக்க, குவாரன்டைன் பற்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி பலரும் பாசிட்டிவ் குறிப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்த ஒருநாள் ஊரடங்கு உத்தரவை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதற்காக உழைப்பாளர்களுக்கு ஊதியம் வழங்குவதைத் தவிர்க்கக்கூடாது எனவும் பிரதமர் மோடி கூறியிருந்தாலும், தினக்கூலிக்கு வேலைசெய்யும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வாதாரம் இந்த ஒரு நாளில் பாதிப்படைவது தவிர்க்க இயலாத நிலையில் உள்ளது. இப்படி ஏராளமான சிக்கல்களையும் மீறி ஊரடங்கு முயற்சியைப் பின்பற்றப்போகிறது இந்தியா.

Social Distancing
Social Distancing

இந்நிலையில், ஜனதா கர்ஃபியூ குறித்துப் பலரும் பலவகையான வதந்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். கைகளைத் தட்டுவதன் மூலம், வைரஸ் இறந்துவிடும் என்ற செய்திகள் ஒருபுறமும், 14 மணிநேரம் வெளியில் செல்லாமல் இருந்தால் கொரோனாவின் ஆயுட்காலம் முடிந்து வைரஸ் தானாகவே இறந்துவிடும் எனவும் ஃபார்வேர்டுகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் இந்த கர்ஃபியூ முயற்சி, எந்த அளவுக்கு கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்ளப் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம். "கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்ற வதந்தியை நம்பியாவது அனைவரும் வீட்டுக்குள் இருக்கட்டுமே..." என்றபடி பேசத் தொடங்கினார் ஃபரூக். "இதுபோன்ற காலகட்டங்களில் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை நாம் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம்.

Quarantine
Quarantine

ஆனால், கைதட்டினால் வைரஸ் அழிந்துவிடும் என்ற ஃபார்வேர்டு மெசேஜ்கள் எல்லாம் வதந்தியே. கைதட்டுவதாலோ பாத்திரங்கள் மூலம் ஓசை எழுப்புவதாலோ இந்த வைரஸ் அழிந்துவிடாது. வதந்திகளை விட்டொழிப்போம்.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், கோவிட் - 19 வைரஸ் ப்ளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் மெட்டீரியல்களில் மூன்றிலிருந்து நான்கு நாள்கள்வரை வாழும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஊரடங்கு உத்தரவின்போது 14 மணிநேரத்தில் வைரஸ் அழிந்துவிடும் என்கிற கோட்பாட்டில் உண்மை இல்லை.

Doctor Faruk
Doctor Faruk

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், 14 மணி நேரம் இன்குபேஷன் நேரத்துக்குப் பிறகுதான் நோய்த்தொற்றைப் பரப்ப முடியும். ஆகவே, இந்த 14 மணிநேரத்தில் எத்தனை பேர் இன்குபேஷன் பீரியடில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இந்தக் கால அவகாசம் முடிந்தபிறகும்கூட பாதிக்கப்பட்டவர் இருமலாம், தும்மலாம். அதன்மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவலாம்.

என்றாலும், பிரதமர் சொல்வதைப்போல 14 மணிநேரம் வெளியில் எங்கும் செல்லாமல் இருப்பதன் மூலம், சோஷியல் டிஸ்டன்ஸிங்கை தேசம் முழுக்க ஒரே நேரத்தில், நீண்ட நேரத்துக்கு செயல்படுத்துவது என்ற வகையில் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்கு அது கைகொடுப்பதாக அமையும்" என்கிறார் ஃபரூக்.

Social Distancing
Social Distancing
கூட்டமில்லாத ரயில் நிலையங்கள்... வெறிச்சோடிய மெரினா கடற்கரை... கொரோனாவும் சென்னையும்..! #SpotVisit

ஒரு தேசியப் பேரிடருக்கு எதிராக மக்களின் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது, தேசம் முழுக்க ஒரு நாள் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை செயல்படுத்துவதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை முடிந்தவரை வலுவிழக்கச் செய்வது, ஒருவேளை வரும் நாள்களில் கொரோனாவுக்கு எதிராக தேசிய அளவில் முழுமையான தனிமைப்படுத்துதலைச் செயல்படுத்தவேண்டி வந்தால், அதற்கான முன்னோட்டமாக இதை மக்களுக்குப் பழக்குவது என... இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் இந்த ஜனதா கர்ஃப்யூ முக்கியத்துவம் பெறுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு