Election bannerElection banner
Published:Updated:

COVID19: `இம்முறை குழந்தைகள், இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!' - நிபுணர்கள் சொல்வது என்ன?

A boy wearing a face mask
A boy wearing a face mask ( AP Photo / Anupam Nath )

முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவில் தற்போது, ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத், அகமதாபாத், சூரத் போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள இடங்களில் கோவிட் மரணங்கள் அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையைவிட அதிகம் உள்ளதாக செய்திகள் வருகின்றன.

உண்மையில், இந்தக் கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவின் நிலை என்ன, தடுப்பூசிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது குறித்துப் பேச காந்தி நகர், `இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த்'தின் மேலாளர், திலீப் மவலான்கர் மற்றும் தொற்றுநோய் நிபுணர் சன்கீத் மன்காட் இவர்களிடம் கலந்துரையாடினோம்.

People queue up for COVID-19 vaccine in Mumbai, India
People queue up for COVID-19 vaccine in Mumbai, India
AP Photo / Rafiq Maqbool

``கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகளை உங்கள் ஆய்வில் கண்டறிந்தீர்கள்?"

``முதல் அலையைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பங்களுக்குள்ளாக பெரிய அளவிலான தொற்று பாதிப்பு இல்லை. இது எங்கள் குழுவின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு. ஆனால், தற்போது இரண்டாவது அலையில் நாங்கள் பார்க்கும் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களில் முதலாவது விஷயம், மேலே இருக்கும் விஷயத்தின் தலைகீழ். அதாவது, தற்போது ஒரு நபருக்கு கொரோனா தொற்று வந்தால் அவரது குடும்பத்தில் பெரும்பாலும் ஒரு நபரைத் தவிர, அனைவரும் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இது தொடர்பான ஆய்வை மறுபடியும் மேற்கொள்ள தகவல்கள் வேண்டி அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளோம்.

இரண்டாவது மாற்றம், அதிக அளவிலான எண்ணிக்கை. முதல் அலை கடந்த வருடம் மார்ச் - ஏப்ரலில் தொடங்கியது. செப்டம்பரில் உச்சத்தை எட்டியது. இந்த வருடம் இரண்டாவது அலை பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கி முதல் அலையைவிட அதிக எண்ணிக்கயிலான தொற்றுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது இன்னும் உச்சம் பெறவில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மூன்றாவது, முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

நான்காவது, முதல் அலையைவிட கிராமப்புறங்களில் இந்த முறை அதிக அளவில் தொற்று பரவி வருகிறது”.

``நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது நீங்கள் கவனித்த மாற்றங்கள் என்னென்ன?"

``மேலே குறிப்பிட்டதுபோல, முதல் அலையைவிட அதிக அளவிலான எண்ணிக்கை மற்றும் குடும்பங்களுக்குள்ளேயே அதிகம் பரவுவது. இதில் பாதிக்கப்படும் குழந்தைகள், இளைஞர்களில் நிமோனியா பாதிப்பும் அதிகம் உள்ளது. இது நுரையீரலை கடுமையாகப் பாதிப்படையச் செய்யக் கூடியது.

இதுமட்டுமல்லாமல், கடுமையான வயிற்றுப் போக்கு, நீரிழப்பு, பல உறுப்புகள் செயல்படாமல் போவது போன்ற பிரச்னைகளும் ஏற்படும். முதல் அலையில், குழந்தைகள் இந்த அளவில் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், தற்போது 35 - 45 வயதுக்குள்ளான தாய்மார்கள் பாதிக்கப்பட்டு, பிறகு குழந்தைகளுக்கும் பரவுவது அதிகரித்துள்ளது.”

COVID-19
COVID-19
AP Illustration/Peter Hamlin

``தற்போது, எண்ணிக்கை அதிகரித்தற்கான காரணம் என்ன?"

``கொரோனா அலை என ஆரம்பித்து, ஒரு வருடம் கடந்துவிட்டது. மனிதன் ஒரு சமூக விலங்கு. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோது திருமண நிகழ்ச்சி, மற்ற கூட்டங்கள் என எல்லாமே வழக்கம் போலவே மீண்டும் நடந்தது. இதில் நாம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கைகளைச் சுத்தப்படுத்துதலை எல்லாம் மறந்தே போனோம்.

தடுப்பூசி அறிமுகமானதும், அது மட்டுமே நமக்கு பாதுகாப்பு என்பது போன்ற தவறான புரிந்துணர்வு கொண்டனர் சிலர். இந்த அனைத்துக் காரணிகளும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு முக்கியமானதாக அமைந்துவிட்டன.”

``தற்போது இளைஞர்களுக்கு ரத்த பாதிப்பு (blood condition), நிமோனியா பாதிப்பு அதிகம் இருப்பதுபோல, வயதானவர்களிடம் அதிகம் தென்படுவதில்லையா?"

``பாதிக்கப்பட்ட வயதானவர்களிடமும் நாங்கள் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளான பல பரிசோதனைகளையும் மேற்கொள்கிறோம். வைரஸ் மரபு ரீதியாக எதுவும் மாற்றம் அடைந்துள்ளதா, புதியதாக ஏதேனும் பண்புகளை பெற்றுள்ளதா, வேறு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தெல்லாம் விரிவான டி.என்.ஏ. ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுதான்.

முதல் அலையின்போது இருந்த வுகான் வைரஸ்தான் தற்போதும் இருக்கிறதா அல்லது இது வேறா, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்காவின் கலவையா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

corona
corona

``தற்போதுள்ள கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது என்பது தெரிகிறது. அதற்காக அதன் பண்புகள் முழுவதுமாக மாற்றமடையாது இல்லையா? இப்போது அதன் வீரியத்தைதான் நாம் பார்க்கிறோமா?"

``இன்னும் உச்சத்தை எட்டாத நிலையிலேயே இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. நிச்சயமாக வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. ஆனால், அதன் தீவிரம் சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்தியாவில் கிட்டத்தட்ட 20% மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்மிடம் தற்போது தடுப்பூசி மருந்துகளும் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டியும் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவது கவலையளிக்கிறது.

நம் மருத்துவமனைகளின் இடவசதியையும் இங்கு கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை மரணங்கள் என்ற கணக்கு மட்டுமே வெளியில் வந்து கொண்டிருக்கிறதே தவிர, பாதிக்கப்பட்ட எத்தனை பேர் முறையான மருத்துவமனை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. பல இடங்களில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இதனாலேயே பலர் மருத்துவமனைகளில் வெளியில் கூட்டமாகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதனால், மருத்துவமனைகளின் வசதி, அங்கு நோயாளிகள் சிகிச்சைக்கு போதுமான இடம் இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் கவனம்கொள்ள வேண்டியது மிக அவசியம். எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப மருத்துவமனைகளில் இடம் இல்லை என்றால் அது மக்களின் வாழ்வை சிக்கலில் முடிக்கும்.

அதேபோல, பரிசோதனைக் கூடங்களின் பற்றாக்குறையும் முக்கியக் காரணியாக அமைகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, முன்பு ஒரு நாளைக்கு 800 - 1,000 என்று இருந்தது. இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 5,000 - 10,000 என்று மாறியிருக்கிறது. இதன் பரிசோதனை முடிவுகள் வரவும் தாமதமாகும். மக்கள் பரிசோதனை முடிவுகளுக்கு மீண்டும் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்குள்ளேயே பலருக்கு தொற்றின் தீவிரம் அதிகமாகிவிடுகிறது.”

herd immunity
herd immunity

``தடுப்பூசிதான் சிறந்த தீர்வு எனும்போது பரவல் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமா?"

``தடுப்பூசியின் நோக்கத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தனிநபர்களின் பாதுகாப்பு, இன்னொன்று மந்தை எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) அதிகரிப்பது. இதில் தற்போது இந்தியா தேர்ந்தெடுத்திருப்பது வயதானவர்களை காப்பது. மக்கள்தொகை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகளும் இதையேதான் தேர்ந்தெடுத்துள்ளன. நாம் முதலில் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களைத் தடுப்பூசி செலுத்த தேர்ந்தெடுத்தோம். தற்போது 45 வயதுக்கும் மேல் உள்ளவர்கள். அடுத்ததாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும். நீங்கள் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்குமே தடுப்பூசி போட்டாலும் பரவல் என்பதைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில், தற்போது அது அதிகம் நிகழ்ந்துகொண்டிருப்பது இளைஞர்கள் மத்தியில்தான். எனவே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி முக்கியமாகிறது.

எங்களது ஆய்வின்படி, இந்தியாவின் 740 மாவட்டங்களில் கொரோனா பரவலும் அதனால் மரணமும் அதிகம் இருப்பது 50 மாவட்டங்களில்தான். முறையற்ற பரவல் நிலையில், இதில் மாற்றங்களும் நிகழக்கூடும். பரவல் அதிகமுள்ள இடங்களில் 15-18 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கூட்டு எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) பெற முடியும்.

அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதைவிட, அடர்த்தி அதிகம் உள்ள இடங்களான மும்பை, டெல்லி, அஹமதாபாத், சூரத் போன்ற இடங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். இந்தியா 100 மில்லியன் தடுப்பூசிகளைக் கைகொண்டது. இதுபோன்ற குறிப்பிட்ட எண்ணிக்கை (Limited Vaccines) மட்டுமே நமக்கு இருக்கும்போது அந்த நேரத்தில் எண்ணிக்கை அதிகம் இருந்த மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா இந்த மாநிலங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Manish Swarup

ஆனால், பரவல் அதிகம் இல்லாத அனைத்து மாநிலங்களுக்கும் செயல்படுத்தலாம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில், நம்மிடம் அந்த அளவிற்கு தடுப்பூசிகள் இருப்பு இல்லை. தற்போது இளைஞர்களிடத்தில் பரவல் அதிகம் எனும் போது இவர்களது எண்ணிக்கை மட்டும் 100 கோடிக்கும் அதிகம். இவர்களுக்கான டோஸ் 200 கோடிக்கும் அதிகம் தேவைப்படுகிறது.

இவ்வளவு எண்ணிக்கையிலான டோஸ் தற்போது எந்த நாடுமே உற்பத்தி செய்யவில்லை. இதற்கு எப்படியும் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகலாம். ஆனால், அதற்குள் வைரஸ் உருமாற்றம் அடைந்து அதன் பண்புகளை மாற்றிக்கொள்ளும். அப்போது, அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறைவான வீரியத்தைக் கொண்டவையாக இருக்கும்.

இதனால்தான், பரவல் அதிகம் உள்ள இடங்களில் இளைஞர்களை மட்டும் கவனத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிறோம். இதே முறையை, 1970-களில் சின்னம்மை பரவலின்போது அதை ஒழிக்க கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முறையை `Ring Vaccination' என்பார்கள். இதையே கொரோனாவை ஒழிக்கவும் இப்போது பரிந்துரைக்கிறோம்.”

``கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க SMS (Sanitising-Mask-Social distancing)... இதைத்தவிர என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறீர்கள்?"

social distance
social distance
தமிழகத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு இருக்கிறதா... கள நிலவரம் என்ன?

``கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க SMS-ஐ மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோயை பூமியில் இருந்து விரட்டி அடிக்கத் தடுப்பூசி அவசியமான ஒன்று. நிச்சயம் தடுப்பூசி கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நோயின் தீவிரத்தை குறைக்கவும், நுரையீரல் தொற்று, மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுவது போன்றவற்றில் இருந்து தற்காக்கவும் இது உதவும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது. தொற்றுக்கு எதிராகப் போராட நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால் SMS மட்டுமல்ல, SMSV (Sanitising-Mask-Socialdistancing-Vaccination) என்பதுதான் இப்போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

அதேபோல, காற்றோட்டம் அதிகமில்லாத சூழலிலும் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. எனவே, நல்ல காற்றோட்டம் என்பது முக்கியம். டபுள் மாஸ்க்கிங், N95 மாஸ்க் உபயோகிப்பது, கூட்டம் கூடாதிருப்பது போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் லாக்டௌன்.

மீண்டும் லாக்டௌன் என்பது நிச்சயம் வேதனைக்குரியதுதான். ஆனால், மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். எனவே, மாஸ்க், சோஷியல் டிஸ்டன்சிங், சானிட்டைசிங், தடுப்பூசி இவற்றை தீவிரமாக கடைப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.”

IndiaSpend
IndiaSpend

Source:

- Govindraj Ethiraj / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)

தமிழில்: ச.ஆனந்தப்பிரியா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு