Published:Updated:

``மன அழுத்தங்கள், மௌனங்கள் நிரம்பிய வீடுகள்...'' - மனநல மருத்துவர்களின் லாக்டௌன் ஆலோசனை அனுபவங்கள்!

பயம்
பயம்

இந்த நெருக்கடியான சூழலில் மனநல மருத்துவர்களின் அனுபவங்களும் ஆலோசனை முறைகளும் எப்படியிருக்கின்றன?

கொரோனா ஊரடங்கால், ஊரும் வீதிகளும் வேண்டுமானால் அடங்கிக் கிடக்கலாம். ஆனால், வீடுகள் அப்படியில்லை. மனஅழுத்தங்களுடன் கூடிய சத்தங்களும் மனவலிகள் நிறைந்த மௌனங்களுமாய் நிரம்பியிருக்கின்றன இந்திய வீடுகள். மனநல ஆலோசகர்களுக்கு அதிகப்படியான புகார்களும் ஆலோசனைக் கோரிக்கைகளும் குவிந்து வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில் மனநல மருத்துவர்களின் அனுபவங்களும் ஆலோசனை முறைகளும் எப்படியிருக்கின்றன? கேட்டோம்.

மனநல மருத்துவர் வசந்த்
மனநல மருத்துவர் வசந்த்

மனநல மருத்துவர் வசந்த் பேசினார். ``நோய் பயத்தில்தான் பலரும் என்னை அணுகி ஆலோசனை கேட்கின்றனர். லேசான இருமல், காய்ச்சல் ஏற்பட்டாலே கொரோனா வந்துவிட்டது என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது, தனக்கு கொரோனா வருமோ என அஞ்சி தங்களைத் தாங்களே மனதால் வதைத்துக் கொள்கிறார்கள். நோய் குறித்த இந்த பயமும் கவலையும் தற்போது பலரிடமும் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. உண்மையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பே இருந்திருக்காது. பாதிப்புக்கான சூழலும் அமைந்திருக்காது. இருந்தாலும் பயம் மனக்கவலையாகி அவர்களைச் சோர்வடையச் செய்யும். உண்மையில் இந்த மனஅழுத்தமே அவர்களுக்கு உடல் பாதிப்பையும் கொண்டு வரும். பிறகு, அதை நினைத்தும் வருந்துவார்கள். இதைத் தவிர்ப்பதற்கு, இதுபற்றிய செய்திகளைக் கொஞ்ச காலத்துக்கு ஒதுக்கிவிடலாம்.

`பயம் வேண்டாம்.. அதுதான் உங்களைக் கொன்றுவிடும்!’- கொரோனாவில் இருந்து மீண்ட அரியலூர் பெண்

முன்னெச்சரிக்கையையும் முன்பயத்தையும் பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். பாதுகாப்பு, சுத்தம், ஆரோக்கியம் பேணுதல் எல்லாமே முன்னெச்சரிக்கை.. பலரும் அந்த எல்லையைக் கடந்து சிந்திப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இந்த முன்பயம் போன்றவை. அவர்களிடம் நாங்கள், கவனத்தை திசைதிருப்பச் சொல்லி ஆலோசனை கூறுகிறோம். அவர்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடலாம். எல்லாவற்றுக்கும் முன்பாக அவர்களிடம் நாங்கள் சொல்லும் முதல் ஆலோசனை, உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவேயில்லை என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள் என்பதே. அந்த நம்பிக்கை வந்துவிட்டாலே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றுவிடும்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

ஊரடங்கில் இருப்பதால், போரடிக்கும் மனநிலையில் பலர் பேசுகின்றனர். என்ன செய்வதென்று புரியாமல், எப்படி நேரத்தைக் கழிப்பதென்று தெரியாமல் குழம்புகின்றனர். இதேநிலை தொடரும்போது மனக்குழப்பமும் அழுத்தமும் ஏற்படும். அதற்குச் சிறந்த தீர்வு நம்மை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்கிறவற்றில் நமது கவனத்தைச் செலுத்துவதுதான். நண்பர்கள், உறவினர்களை கான்டாக்ட் லிஸ்டிலும், இணையத்தின் வழியாகவும் தேடி அவர்களுடன் தொடர்பில் இணைந்து நேரத்தைச் செலவழிக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தலாம். இவற்றின்மூலம் சிந்தனை பலவற்றில் திசை மாறுவதோடு தெளிவான எண்ணங்களுக்கும் அவை வழிவகுக்கலாம்.

`கவலையோ, மன அழுத்தமோ... வேண்டவே வேண்டாம்!' - கொரோனா அச்சத்தைப் போக்கும் இலவச கவுன்சலிங் மையம்

மது அருந்த முடியாமலிருந்தவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு எதிராகத் தங்கள் உடல்நிலையையும் மனநிலையையும் மாற்றத் தொடங்கினர். இதை ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கிறேன். குறிப்பாக, இந்த நபர்களுக்குக் கொடுக்கப்படும் முதல் சிகிச்சையே மன சிகிச்சைதான். குடி இல்லாமல் வாழ்வது எல்லோருக்கும் சாத்தியமே என்ற உண்மையை அவரது ஆழ்மனதில் பதியச் செய்துவிடுவதே சிகிச்சையில் பாதி வெற்றி. பலரும் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருகின்றனர். அதுவும் இந்தக் காலத்தில், நிறைய பேர் வித்டிராயல் அறிகுறிகளோடு அணுகி சிகிச்சையெடுத்து வருவதும் அவர்களுக்கு நான் உதவுவதுமே என் பணியில் மனநிறைவைத் தருகிற முக்கியமான அனுபவங்கள்.

மதுப் பழக்கம்
மதுப் பழக்கம்

உறவுச்சிக்கல் குறித்த மனநலப் புகார்கள் அதிகம் வருகின்றன. வீட்டிலேயே முடங்கியதால் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பல்வேறு உணர்வுகளையும் பரஸ்பரம் காட்டிக்கொள்ள வேண்டியதாக அமைந்திருக்கிறது. அதில் எதிர்மறை உணர்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதனாலேயே மன அழுத்தங்கள் கூடி, உறவுகளுக்கிடையே பிரச்னைகள் உண்டாகின்றன. கணவன் மனைவி தொடங்கி, ஒவ்வோர் உறவுமே சிரமமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.

`உறவுகள் மீதான ஏக்கம்.. வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள்!’ -உ.பி அரசின் அடுத்த முயற்சி

டெலி மெடிசின் எனப்படும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அதிகரித்திருக்கின்றன. அவை இன்னும் பரவலாக வேண்டும் என்பதுதான் எனது கருத்து. மருத்துவம் என்பதே நேரடியாக நோயாளியை அணுகி அவரது உடல்நல, மனநலப் பிரச்னையைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சமீப காலங்களில் பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மருத்துவர்களைச் சென்று சந்திந்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதில் ஒருவித சலிப்பு ஏற்படுகிறது. அவற்றுக்கு இந்த ஆன்லைன் வசதி உதவும், குறிப்பாக ஃபாலோஅப்களுக்கு. இப்போது இருப்பதைப் போன்ற நெருக்கடியான காலங்களில் ஆன்லைன் மருத்துவ வசதி ஒரு வரப்பிரசாதமே. பல பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் அணுகி என்னிடம் ஆன்லைன் ஆலோசனை பெறுகின்றனர். தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருப்பதாய் உணர்கிறேன்" என்றார்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் பேசினார். ``தனிமை மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. வீட்டில் ஏதாவது சூழல் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தினால் வெளியில் பயணித்து சூழலையும் மனநிலையையும் ஓரளவுக்கு மாற்றிக்கொள்ள வாய்க்கும். தற்போது அதற்கும் வழியில்லாது போயிருப்பதால் பலரும் தனிமையில் அதிகம் நேரம் செலவழிக்கின்றனர். கொஞ்சநேரத் தனிமை மனநலனுக்கு நல்லதுதான் என்றாலும் அதுவே அடிக்கடி தொடர்வது எந்த வகையிலும் நல்லதல்ல. இதனால் மன அழுத்தம் அதிகமாகிப் பலரும் வேதனையோடு என்னிடம் பேசுவார்கள். அவர்களை ஆசுவாசப்படுத்தி சூழல் ஏற்படுத்தியுள்ள சிக்கலையும் அதைச் சமாளித்துக் கடந்துசெல்ல வேண்டிய கட்டாயத்தையும் எடுத்துக் கூறுவேன். முடிந்தவரையிலும் வீட்டார்களோடு அனுசரித்துப் போகச் செய்வேன். இந்தச் சிகிச்சையே அவர்களுக்குக் காலப்போக்கில் நல்ல மாற்றங்களைத் தரும்.

அஞ்சிறைத்தும்பி - 26 :சொற்கள் நிரம்பிய தனிமை

வழக்கமான நாள்களைவிட இந்த நாள்களில் பலருக்கும் பலவிதங்களில் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. தம் உறவினர்கள், கொரோனா பாதிப்பு மிகுந்த ஊர்களில் மாட்டிக்கொண்டனர். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என முழுமையாக அறிந்துகொள்ள முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மனநல ஆலோசனை வழங்குகிறேன். இதில் முக்கியமான ஆலோசனையாக நான் வழங்குவது, அவர்களுக்கு நடந்துகொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது என்ற பிம்பத்தை உடைப்பதுதான். எனக்கு மட்டும்தான் இது எல்லாமே, எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்பதுபோன்ற மாய எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம், உங்களைப் போலவே பல ஆயிரக்கணக்கானோருக்கும் இதேநிலைதான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பேன்.

குழப்பம்
குழப்பம்

இந்த கொரோனா காலம், தீமைகள் மட்டுமே அல்ல ஏராளமான நன்மைகளையும் செய்திருக்கிறது. என்னிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வயதான தந்தை எனக்கு போன் செய்து தன் மகன் தன்னிடம் சொன்னதை அப்படியே சொன்னார். ``அப்பா, கொரோனா ஒரு வகையில் நமக்கு நல்லதுதான் செய்திருக்கிறது. கொரோனா வந்ததால்தானே நீங்கள் எங்களோடு வீட்டிலிருக்கிறீர்கள். கொரோனா வந்ததால்தானே மது குடிக்காமல் இத்தனை நாள்கள் இருந்தீர்கள். இனிமேலும் இப்படியே உங்களால் இருக்க முடியும் அப்பா!" என்று மகன் சொன்னதும் தந்தையும் மகனும் கட்டியணைத்துக் கொண்டு மனதார அழுது தீர்த்தார்களாம். இப்படி எத்தனையோ வீடுகளில் எத்தனையோ குடும்பங்களில் பல்வேறு நல்ல மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது இந்தக் கொரோனா ஊரடங்கு காலம்.

`ஆன்லைனில் ஆலோசனை; நேரில் இலவச சிகிச்சை!’ -காரைக்குடியைக் கலக்கும் மருத்துவர் #lockdown

தொலைபேசி, இணையவழி ஆலோசனைகள் அத்தியாவசியமில்லை என்றாலும் அவை அவசியம்தான். மனநல மருத்துவராக நோயாளியின் முழுப் பிரச்னையையும் தெரிந்துகொள்ள அவரை நேரடியாகச் சந்தித்து ஆலோசிப்பதே சிறந்தது. அவர் சொல்கிற பிரச்னைகளையும் தாண்டி அவரது உடல்மொழி, அங்க அசைவுகள், உடல் பாதிப்புகள் என எல்லாவற்றையும் வைத்தே அவரை முழுமையாக ஒரு மருத்துவரால் உணர முடியும். அதற்கு நேர்முக ஆலோசனையே தகுந்த தீர்வு. அதே நேரம் போன் கால், வீடியோ கால் உள்ளிட்ட ஆன்லைன் ஆலோசனைகள் சேவை மனம் பொருந்திய மருத்துவருக்கும், அவரை நம்பி தன்னை ஒப்படைக்கிற நோயாளிக்கும் மிகப்பெரிய ஊடகம். என்னால் மறக்கவே முடியாத ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

உளவியல் சிக்கல்
உளவியல் சிக்கல்
கொஞ்ச நேரத்தில் தற்கொலைக்குத் தயாரானாவர் அதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் எனக்கு போன் செய்தார். அவர் விவரத்தைச் சொன்னதும், பொறுமையாக அந்த நேரத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். தற்கொலை முடிவிலிருந்து விலகச்செய்தேன்.
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

என்னுடைய தொலைபேசி எண் வைத்திருந்த ஒருவர். சிகிச்சைக்கு அதிகம் வந்திருந்தாக எனக்கு நினைவில்லை. வீட்டில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். வீட்டைவிட்டுப் புறப்பட்டு ஒரு ஹோட்டல் அறையை புக் செய்து அதில் தங்கியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் தற்கொலைக்குத் தயாரானாவர் அதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் எனக்கு போன் செய்தார். அவர் விவரத்தைச் சொன்னதும், பொறுமையாக அந்த நேரத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். தற்கொலை முடிவிலிருந்து விலகச்செய்தேன். சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது மிகவும் நலமாக உள்ளார். இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன், அந்த ஒரு நிமிடம் நான் ஏதோ பிஸியில் போன் எடுக்காமல் விட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே இயலவில்லை. என்னால் ஓர் உயிர் இறுதி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பது வாழ்நாள் முழுவதும் நான் நினைத்துப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சுவிடும் சம்பவம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு