Published:Updated:

`ஸ்லோவா லேண்ட் ஆகணும்' - போதைப்பழக்கத்தை நிறுத்த நிபுணர்களின் யோசனைகள்!

போதை
போதை

"போதை குறித்த விழிப்புணர்வு முதலில் தேவை. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அப்போதுதான் போதையின் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்."

'நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்' தொடங்கி 'இன்னியோட சரக்கை நாம விட்டுடுவோம்டா' என லேட்டஸ்ட் வெர்ஷன்வரை சினிமா பாடல்களிலும்கூட மதுவிலக்குத் தீர்மானங்கள் தொடர்கின்றன. ஆனால், விருந்தும் மருந்தும் போல இந்த ரிசல்யூசன்களும் மூன்று நாளைக்குத்தான். மற்றவற்றைக் கூடச் செய்துவிடலாம். ஆனால், இந்தப் போதைப்பழக்கத்தை விடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமற்றுப் போகிறது.

போதை
போதை

சிகரெட், மது, புகையிலை இன்னும் பிற வஸ்துகள் எல்லாம் உடலையும் மனதையும் நொடித்து மழுங்கடிக்கச் செய்வன. கட்டுக்கோப்புடன் அளவாகப் பயன்படுத்தினாலே பாதிப்பு நிச்சயம். அளவுமீறிச் செல்லச் செல்ல மரணம்கூட நிகழலாம். இப்படி போதைக்கு அடிமையானவர்கள் மீளமுயன்றாலும் தோற்கிறார்கள். வைராக்கியத்தோடு இருப்பவர்களாலும் சில நாள்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இவர்கள் மீண்டு வருவது எப்படி?

இதுகுறித்துப் பேசினார், மத்திய போதைத்தடுப்பு முன்னாள் உதவி ஆணையரும் சுங்கத்துறையின் தற்போதைய உதவி ஆணையருமான வெங்கடேஷ் பாபு. இவர் போதைப் பழத்தை விடுவது குறித்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல் தொடர்ந்து மேடையில் பேசி கின்னஸ் சாதனை புரிந்தவர்.

"போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் பேர்வரை மீளவே முடிவதில்லை. அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ரொம்பவே பாதிப்பு அடைகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத்தொடங்கி பின்னாளில் இவை இல்லாமல் வாழவே முடியாது என்ற மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் சிந்தனைத் திறனும் மங்கிப் போய்விடும் வாய்ப்பும் அதிகம்" என்றார்.

"போதை குறித்த விழிப்புணர்வு முதலில் தேவை. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அப்போதுதான் போதையின் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். பள்ளியிலேயே குழந்தைகளுக்குப் பாடமாக இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். அந்த வயதில் ஏற்படுகிற விழிப்பு காலத்துக்கும் நிலைக்கும்.

போதை
போதை

முதலில் தனிமையைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் சமூகத்தோடு சேர்ந்து இருக்கும்போது போதை வஸ்துகளை உபயோகிக்க மாட்டார்கள். குடும்பத்துடன் உரையாட வேண்டும். குடும்ப உறுப்பினர்களும் அவர்களோடு நிறைய பேசி, உடனிருந்தபடியே அவர்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். போதையை விடுத்து பிடித்த வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்போது இயல்பாகவே எல்லாம் சரியாகும். ஆனால், அதில் ஓர் உளவியல் சிக்கல் இருக்கிறது.

தொடக்கத்தில் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டவர்கள், நினைத்தவுடன் பழக்கத்திலிருந்து விடுபட்டு அடுத்தடுத்து நகர்ந்துவிடுவார்கள். மீண்டும் அதைத் தொடுவதற்கு நினைக்க மாட்டார்கள். ஆனால், போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டவர்கள், மீண்டும் போதையைத் தொட்டால் முன்பைவிடத் தீவிரமாகிவிடுவார்கள். இது பலரது உளவியலாக உள்ளது. எனவே, உடலுக்கும் மனதுக்கும் கேடு செய்யும் போதைப் பழக்கத்திலிருந்து அகன்று வர முயல்வது தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நல்லது" என்றார் வெங்கடேஷ் பாபு.

இதை உளவியல் மூலமும் மருத்துவம் மூலமும் அணுகும் விதத்தைக் கூறினார், மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

"போதைப் பழக்கத்திலிருந்து மீளும் டீ-அடிக்ஷன் (De-Addiction) வழிமுறையில் இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. டீ-டாக்சிஃபிகேஷன் (De-Toxification). அதாவது, போதையிலிருந்து விடுபடுவற்கு நாம் செய்கிற மருத்துவ முறைகள். இது குறிப்பிட்ட கால வழிமுறைகள் மட்டுமே. அடுத்தகட்டம், மீண்டும் போதைக்குள் சென்றுவிடாமல் இருக்க நாம் செய்துகொள்ளும் சுயகட்டுப்பாட்டு முறை. இது தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டியது" என்றார்.

ஸ்வாதிக் சங்கரலிங்கம்
ஸ்வாதிக் சங்கரலிங்கம்

போதையிலிருந்து வெளியேறுவதற்கான வழிமுறை குறித்து அவர் கூறும்போது, "முதலில், உடனே போதையை விட்டுவிட வேண்டும் என நினைப்பது சரியல்ல. இதனால், ஓய்வின்மை, இதயத்துடிப்பு அதிகரித்தல், அதிகம் வியர்த்தல் எல்லாம் ஏற்படும். பிறகு, நம்மால் போதையை விடவே முடியாது போல என நம்பிக்கையின்மை ஏற்படும். போதை நம் உடலைப் பழக்கப்படுத்தியிருக்கும். அதிலிருந்து சிறிது சிறிதாகத்தான் வெளிவர வேண்டும். வடிவேலு சொல்வது மாதிரி 'ஸ்லோவாகத்தான் லேண்ட் ஆகணும்.' இதற்கு அதிக நாள்கள் எடுக்கும்" என்றார்.

புகை, மது இவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் தனது பணியில் கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

"புகையால் கேன்சர் வரும். மதுவால் கல்லீரல் கெடும். இன்னும் எண்ணற்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். எனக்குத் தெரிந்த ஒருவர், அதிகம் குடித்ததில் அவர் நரம்பு பாதித்து மூளை செயலிழந்தது. அவரால் எதையும் நினைவு வைத்துக்கொள்ள முடியாமல் போனது. போதையை விட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், அவரது மூளை சரியாகாமல் போய்விட்டது. இதுபோன்ற மிகவும் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்" என்றார்.

வெங்கடேஷ் பாபு
வெங்கடேஷ் பாபு

மீளும் வழிமுறைகள் கேட்டோம். "முதலில் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். நாம் அடிமை ஆகியிருக்கிறோம் என்று உணர வேண்டும். அப்போதுதான் மீள வேண்டும் என்ற எண்ணம் வரும். தனியாக முயற்சி செய்தால் மறுபடியும் போதைக்குள்ளே போகத் தோன்றும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்களுக்கான குழுக்களோடு சேர்ந்துகொள்ளலாம்.

எந்தச் சூழலில் மது அருந்தும் எண்ணம் வருகிறதோ அந்தச் சூழலைத் தவிர்க்க வேண்டும். மாலை 6 மணிக்குமேல் போதை எண்ணம் வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் கோயிலுக்குச் செல்லலாம், குழந்தைகளோடு இருக்கலாம். இந்தச் சூழலில் போதைக்கான எண்ணம் வராது" என்றார்.

போதை பழக்கம்... மனநலம் பாதிப்பு... 30 மாதங்களுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த வாலிபர்!
அடுத்த கட்டுரைக்கு