Published:Updated:

``எமெர்ஜென்ஸி... மதுக்கடைகளை மூடுங்கள்...!'' அரசுக்கு மருத்துவரின் 5 ஆலோசனைகள்

``மதுக்கடைகள் திறப்பு கொரோனா மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தலாம்" - எச்சரிக்கும் செயற்பாட்டாளர்கள்.

மருத்துவர் சாந்தி

கோவிட் - 19 கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் என்னதான் தீவிரம் காட்டினாலும், ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் நடவடிக்கைகள் யாவும் பின்னோக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

இனி வரும் நாள்களில் அரசு எந்த விஷயங்களிலெல்லாம் முன்னோக்கிச் செயல்பட வேண்டும்? மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தியிடம் கேட்டோம்.

``கோயம்பேடு சந்தையை முதல் நிலையிலேயே மூடாமல் விட்டது, கொரோனா பரிசோதனை எண்ணிக்கையைத் தொடக்கத்திலேயே அதிகரிக்காமல் விட்டது, ரேபிட் கிட் வாங்குவதில் ஆர்டர் கொடுக்கும்போதே தரம் குறித்து யோசிக்காமல் விட்டது எனத் தொடர்ச்சியாக அரசு நிறைய தவறுகள் செய்திருக்கிறது. அதன் விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துவருகிறோம். இவற்றை சரிசெய்வதற்காக, அரசு இப்போது கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவது, அதிகளவு பரிசோதனைகள் செய்வது, ரேபிட் கிட்ஸை உபயோகிக்காமல் இருப்பது என்றிருக்கிறது. இருப்பினும், தவறுகள் தவறுகள்தான்.

இதுவரை செய்த தவறுகளை, சரிசெய்வது ஒருபக்கமென்றாலும் இனி தவறு செய்யாமல் இருப்பதும் ரொம்பவும் முக்கியம். நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நோயாளிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த,

இனி வரும் நாள்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமையும்கூட. உடனடியாக அரசு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் இருக்கின்றன.
2
மருத்துவர் குழு

திறமைவாய்ந்த மருத்துவர் குழு

கொரோனா வைரஸ், உலகத்துக்கு ரொம்பவும் புதிது. இதன் தன்மை, இப்போதுவரை நமக்குத் தெரியாது. ஆகவே, இதை எதிர்கொள்வதற்கான ஸ்ட்ராட்டஜிக்கள், மாறிக்கொண்டே இருக்கின்றன. முதலில் கை கழுவினால் போதும் என்றோம், பின் மாஸ்க் அணிவது வந்தது, அதன் பின் சமூக விலகல், இப்போது லாக்டௌன் என மாறிக்கொண்டே இருக்கிறது. நோயாளிகளைக் கையாள்வதிலும்கூட, ஸ்ட்ராட்டஜி மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொண்ட நாம், இப்போது `வீட்டிலிருந்தே பரிசோதனை' என்ற முறைக்குள் செல்கிறோம். புதிதான ஒரு வைரஸ் பரவுதலின்போது, இப்படியான விஷயங்கள் ஏற்படுவது இயல்புதான்.

சூழலை சரியாக அணுக, நமக்கு தொற்றுநோயியல் வல்லுநர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் அதிகளவில் தேவை. ஏனெனில் தேவைக்கேற்ப, ஸ்ட்ராட்டஜியை சரியான நேரத்தில் மாற்ற அவர்களால்தான் முடியும்.
மருத்துவர் சாந்தி
ஆகவே அரசு உடனடியாகத் தேர்ந்த, திறமைவாய்ந்த குழுக்களை நியமித்து, அவர்கள் அறிவுரைக்கேற்ப ஒளிவுமறைவின்றி செயல்பட வேண்டும்.
3
நிதி

நிதி அவசியம்!

கொரோனா காலத் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிக்கான நிதியை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காரணம், நிதி இருந்தால்தான் மருத்துவப் பணியாளர்களுக்கான கவச உடைகள், முதல்நிலை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களையெல்லாம் அரசால் வழங்க முடியும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இந்தப் பாதுகாப்பு கவசங்களின் தேவையும் அதிகரிக்கும். ஆகவே அந்த அவசர சூழலுக்கு அரசு தயாராக இருக்க வேண்டும். பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு அறிவுறுத்தப்படும் விஷயங்களை, இலவசமாகவோ குறைந்த விலையிலேயோ தருவதற்கும் நிதி தேவை. இதேபோல நிவாரணப் பொருள்கள் வழங்குவது, நோயாளிக்கான பராமரிப்பு, மாஸ்க் விநியோகம் என அனைத்தையுமே நடைமுறையில் சாத்தியப்படுத்த நிதி தேவை.

தமிழக அரசு, இந்த நிதியை மத்திய அரசிடமிருந்து பெற முயல வேண்டுமே தவிர, பொதுமக்களிடமிருந்தே பெற முயலக்கூடாது. இதை நான் குறிப்பிடக் காரணம், நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்கத்தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம் எனச் சொல்கிறார்கள். ஏற்கெனவே எளியோரின் வாழ்வை சிக்கலுக்குள்ளாக்கி லாக்டௌனுக்குள் இருக்கிறோம் நாம். அப்படியிருக்கும்போது, எளியோரின் குறைந்தபட்ச வருவாயையும், மதுக்கடைகள் மூலம் பெற்று, அதையே நிவாரணத்துக்குத் தருகிறோம் என்று சொல்வது, எவ்வளவு மோசமான போக்கு தெரியுமா..!?

கொரோனா நிதி: எம்.பி.க்கள் சம்பளம் - 36 பேருக்குத் தரலாம்; பிறர் விட்டுத்தரலாம்! #VikatanExclusive
4
மதுவிலக்கு

மதுக்கடைகளை மூட வேண்டும்

மதுக்கடைகளை இப்போதைக்குத் திறக்கக் கூடாது. காரணம், மது அருந்துவதால் கொரோனா மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. `உலகம் தழுவிய அளவில், மதுக்கான தடையை ஒவ்வொரு நாட்டு அரசும் விதிக்கலாம்' என அவர்களே அறிவுறுத்தியும் உள்ளனர்.

கொரோனா நோயாளிகளைக் கையாள்வதில் இந்தியாவின் ஒரே ஆறுதல், நம்மிடையே உள்ள நோயாளிகளில் முதல்நிலை பாதிப்புள்ளவர்கள்தான் அதிகம். அதனால்தான் இங்கு குணப்படுத்தும் விகிதம் அதிகமாக உள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படும்போது, தீவிர பாதிப்போடு மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகரிப்பர். அது, சிகிச்சையைப் பாதிக்கும். மருத்துவ அவசர நிலையைக்கூட ஏற்படுத்தலாம். ஆகவே அரசு இப்போதே விழிப்பது அவசியம்.

`ஊரடங்கு நீடித்தால் கொரோனா இறப்பைவிட பசி இறப்பு அதிகமாகிவிடும்!’ - இன்ஃபோசிஸ் நிறுவனர் எச்சரிக்கை

இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, மதுக்கடைகள் திறக்கப்படும்போது அங்கு கூட்டம் அலைமோதி தொற்று பரவும் விகிதம் மிக மிக அதிகரிக்கும். மதுக்கடைகளில், `சமூக இடைவெளி பின்பற்றப்படும் - பார் அனுமதி இல்லை' என்றெல்லாம் கூறி தங்களின் செயலை நியாயப்படுத்த முயல்கின்றனர் அரசு அதிகாரிகள். இப்படிச் சொல்பவர்கள், கடந்த இரண்டு மாத லாக்டௌன் காலகட்டத்தில், மக்களை வீட்டுக்குள் இருக்க வைக்க எவ்வளவு போராடினோம் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன். `நிதானத்திலிருந்த மக்களைக் கட்டுப்படுத்தவே அவ்வளவு போராட்டமாக இருந்தபோது, நிதானமில்லா 'குடி'மக்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு சிரமமானதாக மாறும் என்று யோசிக்க வேண்டும்.

`மது கிடைக்காததால், குடிக்கு அடிமையானவர்கள் பலரும் உடல்நல ரீதியாகச் சிரமப்படுகிறார்கள். அதனால்தான் கடைகளைத் திறக்கிறோம்' என அமைச்சரொருவர் கூறுகிறார். 40 நாள் மது இல்லாமல் வாழ்ந்து காட்டிய இந்தியாவின் 'குடி'மக்களுக்கு, ஆல்கஹால் குறித்த தூண்டுதலை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் நோயாளியாக்க முயல்கின்றனர். மது, புகை போன்றவற்றிலிருந்து விடுபட, அதற்கான தூண்டுதலைத் தராமல் இருப்பது அவசியம். `தூண்டுதல் ஏற்பட்டால்கூட, அதை எப்படிக் கையாள வேண்டும்' என்பதைக் கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து மீண்டுவிடலாம். அந்தவகையில் மது அருந்துபவருக்கு, அந்தத் தூண்டுதலைக் கையாளத்தான் அரசு சொல்லித் தர வேண்டுமே தவிர, மதுவையே தரக்கூடாது. தற்காலிக பிரச்னையைத் தவிர்க்க, நிரந்தர பிரச்னையைத் தருவது தவறு.

மொத்தத்தில், மதுக்கடைகளை மூட வேண்டும்.
5
இறப்பு விகிதம்

இறப்பு விகித கணிப்பில் கவனம்!

வருங்காலத்தில், கொரோனாவின் இறப்பு விகிதம் இந்தியாவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இப்போதும் இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது. உதாரணத்துக்கு, குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம் 5.4 சதவிகிதம். தமிழகத்தில் இது பூஜ்ஜியத்தை ஒட்டிதான் இருக்கிறது. ஒரே நிலப்பரப்பில், இரு வேறு மாநிலங்களில் இவ்வளவு வேற்றுமை தெரிகிறது எனும்போது, இங்கும் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதற்காக இங்கு இறப்பு விகிதம் அதிகரிக்கும் என நான் சொல்லவில்லை. அதிகரித்துவிட்டால், என்ன செய்வதென நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையோடு, சூழலை அனுகுவது அவசியம்.

பெரும்பாலும் தீவிரமாக வருபவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு ஒற்றுமை இருக்கும். அது என்னவென்பதை அரசு இப்போதிருந்தே கணிக்கத் தொடங்க வேண்டும்.

இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில், 45 வயதுக்குட்பட்டவர்களில் 14 % பேர் இருப்பதாகச் சொல்கிறது ஒரு தரவு. கொரோனா விஷயத்தில், இளைய சமூகத்தைக் காக்க வேண்டியது அவசியம்.
மருத்துவர் சாந்தி

மேலும் இந்த விஷயத்தில் இறப்பு விகிதத்துக்குள் எந்த வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை அரசு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை நாம் காக்க வேண்டும்.

6
தனிமைப்படுத்துதல்

நலிவுற்றோரைத் தனிமைப்படுத்துதல்!

கொரோனா வைரஸை எதிர்கொள்ள, அடுத்த கட்ட ஸ்ட்ராட்டஜியாக குழு நோய் எதிர்ப்பு சக்தியை சிலர் முன்னிறுத்துவத்துவதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை அரசு இதுகுறித்து யோசிக்குமாயின், அதைச் சாத்தியப்படுத்த முயலும்முன் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகமுள்ள நலிவுற்றோரை (Vulnerable People) அடுத்தடுத்த மாதங்களில் தனிமைப்படுத்த அரசு முயல வேண்டும்.

அதற்கான முயற்சிகளை இப்போதே செய்யத்தொடங்குவது அவசியம்.

இந்த ஐந்தையும் மேற்கொள்ளும் பட்சத்தில், வரும்காலத்தில் சிக்கல்களை நம்மால் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசு அதிகாரிகளே, சமீபகாலமாக `இந்த நோய்ப்பரவுதலை நம்மால் தடுக்கவே முடியாது. என்ன ஆனாலும் பரவத்தான் செய்யும்' எனச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இது உண்மையும்கூட. வைரஸ் பரவத்தான் செய்யும். சூழலுக்கு நாம் தயாராக வேண்டியது மிகவும் அவசியம்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு