Published:Updated:

தமிழ்நாட்டில் தொடங்கிய கோவாக்ஸின் பரிசோதனை எப்படி நடத்தப்படுகிறது? - நிபுணர் விளக்கம்

COVAXIN
COVAXIN

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்களின் உடல்களில், நாம் எந்த நோய்த்தொற்றுக்காகத் தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளோமோ, அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகின்றனவா என்பதைக் கண்டறிவதே பேஸ்-2 பரிசோதனையின் முக்கிய நோக்கம்.

ந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கோவாக்ஸின் (COVAXIN) கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

ஆராய்ச்சியில் பல கட்டங்களைத் தாண்டியுள்ள இம்மருந்து தற்போது மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படுகிறது. இந்த இறுதிக்கட்ட பரிசோதனையை நடத்த பீகார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

COVAXIN
COVAXIN

இந்த வரிசையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரிக்கு கோவாக்ஸினை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரண்டு தன்னார்வலர்களுக்கு இம்மருந்தைச் செலுத்தி சோதனையையும் தொடங்கியுள்ளது இந்தக் கல்லூரி. தமிழகத்தில் இந்தப் பரிசோதனை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின், மருந்தியல் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் சத்யஜித் மொஹபத்ரா மற்றும் துறை துணைப் பேராசிரியர் மெல்வின் ஜார்ஜ் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது.

கோவாக்ஸினை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் இந்த இறுதிக்கட்ட ஆய்வு பரிசோதனைகள் குறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின், மருந்தியல் ஆராய்ச்சி துறை துணைப் பேராசிரியர் மெல்வின் ஜார்ஜிடம் பேசினோம்.

பேராசிரியர் சத்யஜித் மொஹபத்ரா
பேராசிரியர் சத்யஜித் மொஹபத்ரா
பேராசிரியர் மெல்வின் ஜார்ஜ்
பேராசிரியர் மெல்வின் ஜார்ஜ்

"கோவாக்ஸின் தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளில் மனிதர்கள் மீது நடத்தப்படும் பேஸ்-1 (Phase-1) ட்ரையல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. ஏதேனும் ஒரு நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால், அம்மருந்தை பல்வேறு வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே அதற்கான காப்புரிமை தருவார்கள். இந்தக் காப்புரிமை பெறுவதற்கான இறுதிக்கட்ட பரிசோதனைதான் கண்டறியப்பட்ட மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி நடத்தப்படும் சோதனை. இந்தச் சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறும். பேஸ்-1 (Phase-1), பேஸ்-2 (Phase-2) மற்றும் பேஸ்-3 (Phase-3) பரிசோதனைகள்.

கொரோனா:`1,077 பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து!’ - பாசிட்டிவ் பகிரும் ஆக்ஸ்போர்டு

இதில் பேஸ்-1 ட்ரையலில் 300 - 400 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் உடல்களில் தடுப்பு மருந்து செலுத்தப்படும். பின்னர் அவர்களின் உடலில் நடக்கும் மாற்றங்கள் பதிவுசெய்யப்படும். உடலில் செலுத்தப்பட்ட மருந்து ஏதாவது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்றும் பரிசோதிக்கப்படும். இந்த பேஸ்-1 ட்ரையலுக்கு எந்த விதமான நோய்த்தொற்றும், உடல் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான நபர்களே தேர்வுசெய்யப்படுவார்கள். அடுத்ததாக நடத்தப்படும் பேஸ்-2 ட்ரையலுக்கு ஆரோக்கியமான 600 - 700 நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இவர்களுக்கும் உடலில் இந்த மருந்து செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்படும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்களின் உடல்களில், நாம் எந்த நோய்த்தொற்றுக்காகத் தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளோமோ, அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகின்றனவா என்பதைக் கண்டறிவதே பேஸ்-2 பரிசோதனையின் முக்கிய நோக்கம்.

COVAXIN
COVAXIN

பேஸ்-2 ட்ரையலுக்கு பின் பேஸ்-3 ட்ரையல் மேற்கொள்ளப்படும். இதில் 5,000 - 10,000 எண்ணிக்கை வரையிலான நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களின் உடல்களில் தடுப்பு மருந்தைச் செலுத்தி சோதனை நடத்தப்படும். இந்தச் சோதனையில் ஆரோக்கியமான நபர்களுடன் சேர்த்து உடல்நல குறைபாடு உள்ளவர்களில் சிலரும் உட்படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் பேஸ்-3 ட்ரையலில் கலந்துகொண்ட நபர்களின் உடல்களில் உருவாகி, இந்த இறுதிக் கட்ட சோதனையும் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் உருவாக்கிய தடுப்பு மருந்துக்கு 'காப்புரிமை' கிடைக்கும். பின்னர் இந்த மருந்து அதிகாரபூர்வமாக மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் பேஸ்-1 ட்ரையல் இருவருக்கு நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தன்னார்வலராக இந்த பரிசோதனைக்கு முன்வந்தார்கள். 18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்கு முன்பு அவர்களுக்கு ரத்த டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட், கொரோனா டெஸ்ட் என்று பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித நோய்த்தொற்று மற்றும் உடல்நல குறைபாடுகளும் இல்லை என்றால் மட்டுமே சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

vaccine
vaccine

பேஸ்-1 ட்ரையலில் தன்னார்வலர்களுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, அவர்கள் சில மணிநேரம் மருத்துவமனையிலேயே அப்செர்வேஷனில் வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படாத பட்சத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். முதல் தடுப்பூசி போடப்பட்ட 14 நாள்களுக்குப் பிறகு இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இப்போதும் அதேமாதிரி சில மணிநேரம் அப்செர்வேஷனில் வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதன் பிறகு 28, 42, 104, 194-வது நாள்களில் தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர்களை மருத்துவமனைக்கு வரச்சொல்லி, அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன... கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா என்று பரிசோதிக்கப்படும்.

அமெரிக்கா: `சாலட் சாப்பிட்ட 600 பேர்’ - கொரோனாவுக்கு நடுவே மக்களை அச்சமடைய வைத்த நோய்

பேஸ்-1 ட்ரையல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில மாதங்களிலேயே பேஸ்-2 ட்ரையல் தொடங்கிவிடும். இந்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் வெற்றிபெறும் பட்சத்தில் பேஸ்-3 ட்ரையல் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகளில் தன்னார்வலராக உள்ளவர்கள், இதற்காக ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வந்து செல்ல ஆகும் தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

கோவாக்ஸின்
கோவாக்ஸின்

பொதுவாக, ஒரு தடுப்பு மருந்து இந்த எல்லா கட்ட பரிசோதனைகளையும் கடந்து அதிகாரபூர்வமாக மக்களின் பயன்பாட்டுக்கு வர ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிடும். ஆனால், அந்த மருந்தின் அத்தியாவசியத்தைப் பொறுத்துச் சம்பந்தப்பட்ட மருந்துக்கு விரைவில் காப்புரிமை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். கொரோனாவுக்கு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்துக்கான இறுதிக்கட்ட பரிசோதனைகள் இந்தியா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கான ரிசல்ட் இந்த ஆய்வின் இறுதியில்தான் நமக்குத் தெரியவரும்" என்றார் பேராசிரியர் மெல்வின் ஜார்ஜ்.

தொடக்கம் உண்டெனில் நிச்சயம் முடிவும் உண்டு. பல மாதங்களாக நம்மைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவுக்கான முடிவாக இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்து இருக்கும் என்று நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு