Election bannerElection banner
Published:Updated:

புத்தம் புது காலை : உடலுக்குள்ளே ஒரு உயிர்த்தெழுதல்... கல்லீரல் என்ன செய்கிறது?! #WorldLiverDay

World liver day - கல்லீரல்
World liver day - கல்லீரல்

தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு உறுப்புக்கு எதற்கு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு மனிதர்களின் பழக்கவழக்கம்தான் காரணம் என்கிறது மருத்துவம்.  

ஒட்டவெட்டினாலும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை நமது நகமும், தலைமுடியும். ஆனால், நமது உடலுக்குள் இயங்கும் மூளை, இருதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் எதிலும் இந்த மாயாஜாலம் நிகழாவிட்டாலும் நமது கல்லீரல் இப்படி வளரக் கூடியது என்பது தெரியுமா?

ஆம்.. கல்லீரலில் 70-80%த்தை எடுத்துவிட்டால் கூட, பல்லியின் வாலைப் போலவே சில நாட்களில் மீண்டும் உயிர்த்தெழும் ஆற்றல் மிக்கதுதான் கல்லீரல். பொதுவாக நமது மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் வளருமே தவிர, கல்லீரலைப் போல எந்தவொரு உறுப்பும் மீண்டும் உயிர்த்தெழுவதில்லை என்பதுதான் இதன் சிறப்பு.

ஆக, பல்லியின் வால் அறுந்தால் திரும்ப முளைத்து விடுவதுபோல முளைத்துவிடும் இந்த கல்லீரலுக்கு ஏன் மாற்று அறுவைசிகிச்சை (liver transplantation) மேற்கொள்கிறார்கள் இந்த மருத்துவர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

கல்லீரல்!

நமது உடலின் மிகப்பெரிய, மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஒரேசமயத்தில் ஏறத்தாழ 500 வேலைகளை செய்யும் ஒர்க் ‌ஷாப் இது. உணவு செரிக்க பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்து தான் நமக்குக் கிடைக்கின்றன. நாம் உட்கொள்ளும் உணவின் ஆற்றலை சேர்த்து வைப்பதுடன், டயட், உண்ணாவிரதம் என இருக்கும்போது, சேமித்து வைத்த ஆற்றலை உடலுக்குக் கொடுத்து உதவும் பேங்க் கூட இந்தக் கல்லீரல்தான்.

Liver
Liver

இரத்த அணுக்கள், நோயெதிர்ப்பு புரதங்கள், ஹார்மோன்கள், enzymes எனப்படும் நொதிகள், பித்தம் ஆகியவற்றின் தயாரிப்பு நிலையம் இதுதான். மருந்துகள், மது, தொற்றுக்கிருமிகள், நச்சுப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்யும் ரிஃபைனரி ஒர்க்‌ஷாப் எல்லாமே இந்தக் கல்லீரல்தான்.

இப்படி கல்லீரல் செய்யாத வேலை எதுவுமே இல்லை என்பதாலேயே, மற்ற உறுப்புகள் போல அல்லாமல், இதற்கு தட்டுகள் போன்ற வடிவமைப்பையும், தட்டுகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலையும், அதற்கு உதவிட குருத்தணுக்கள், ஃபைப்ரினோஜன் போன்றவற்றையும் கல்லீரலுக்கு அளித்துள்ளது இயற்கை.

ஆனால், இப்படித் தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு உறுப்புக்கு எதற்கு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு மனிதர்களின் பழக்கவழக்கம் தான் காரணம் என்கிறது மருத்துவம்.

ஆம்… தற்காலிகமாக கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நோய்த்தொற்று, அதற்குச் சாப்பிடும் மருந்துகளின் வீரியம், அறுவைசிகிச்சை போன்றவற்றிலிருந்து முற்றிலும் மீண்டெழும் கல்லீரலின் திசுக்கள், சில நிரந்தர எதிரிகளான நீண்டகால குடிப்பழக்கம், ஹெபடைடிஸ் பி, சி கிருமித்தொற்று, உடற்பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை நோய்களால் உண்டாகும் NAFLD (Non Alcoholic Fatty Liver Disease) என்ற கல்லீரல் வீக்கம், இவற்றின் காரணமாக ஏற்படும் Cirrhosis என்ற கல்லீரல் சுருக்கம் ஆகியன, எப்படி ஒரு ரப்பர் பேண்ட் ஒருகட்டத்தில் தனது எலாஸ்டிக்தன்மையை இழந்துவிடுகிறதோ, அதேபோல ஒருகட்டத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையை இழக்கச் செய்வதால்தான் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

புத்தம் புது காலை : உடலுக்குள்ளே ஒரு  உயிர்த்தெழுதல்... கல்லீரல் என்ன செய்கிறது?! #WorldLiverDay

அதிலும் இந்த liver transplantation அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் மூவரில் இருவர் மதுவின் பாதிப்பால் என்றால், ஒருவர் வாழ்க்கைமுறை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது தான் வேதனை. உண்மையில் குப்பை உணவுகளால் ஏற்படும் உடற்பருமன், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம், தொடர்ந்த மதுப்பழக்கம் ஆகியன உடலில் உயிர்த்தெழும் எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பதுதான் கல்லீரல் நமக்குக் கற்றுத் தரும் பாடம்!

ஆம்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அது மது என்றாலும்... உணவென்றாலும்..!

#உலக கல்லீரல் தினம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு