Published:Updated:

கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவுக்கு எப்போது கிடைக்கவரும்? #Covid19FAQ

மருந்து முதல் இரண்டாம் தொற்றுவரை கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார், தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்.

கொரோனா வைரஸ் பற்றி ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. தகவல்களைக் கேட்கும் நமக்கு, அதுபற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழும்.

Dr.Ram Gopal Krishnan
Dr.Ram Gopal Krishnan

சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகள், தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்.

1. கொரோனா சிகிச்சைக்காகப் பல மருந்துகளின் பெயர்கள் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன. இது, முன்னேற்றமா... தடுமாற்றமா?

இரண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்து பயனற்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பயன்பாட்டை நிறுத்தும்படி உலக சுகாதார நிறுவனமும் அறிவித்துவிட்டது. ரெம்டெஸிவிர் (Remdesivir) மருந்து ஓரளவு வேலைசெய்கிறது. உயிரிழக்கும் ஆபத்தை 5 சதவிகிதம் குறைக்கிறது.

Covid drugs
Covid drugs

டெக்ஸாமெத்தாஸோன் (Dexamethasone) மருந்துதான் சற்று ஆறுதலளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் இறப்பைத் தடுப்பதில் சிறந்து செயலாற்றுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஃபேவிபிராவிர் (Favipiravir) மருந்தின் செயல்திறனைப் பற்றிய தரமான ஆய்வுகள் எதுவும் இல்லை. அதிக விலைகொண்ட இந்த மருந்தை நோயாளிகளிடம் தகுந்த ஆராய்ச்சிசெய்து நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா?

ஒருவருக்கு கோவிட்-19 தாக்கி குணமடைந்துவிட்டார் என்றால், 3 - 6 மாதங்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். ஒருவேளை ஓரிரு ஆண்டுகளுக்குள்கூட வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால் ஒருமுறை நோய் வந்துவிட்டால் மீண்டும் குறைந்தது 6 மாதங்களுக்கு வராது.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனாவாக இருப்பதற்கு 90 சதவிகிதத்துக்கும் மேல் வாய்ப்புள்ளது.
தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்
கொரோனா அச்சம்; மன உளைச்சல்! -தற்கொலை முடிவை நாடிய `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர்

குணமடைந்த பிறகு மீண்டும் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால்கூட, அது இறந்த வைரஸாகத்தான் இருக்கும். அது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாது. 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் இருந்துவிட்டால் போதும்.

3. கொரோனா வைரஸின் தன்மை (Strain) மாறிக்கொண்டேயிருப்பதால், தடுப்பு மருந்து கண்டறியப்படுவது தாமதமாகிறது. தடுப்பு மருந்து கண்டறிய வாய்ப்புள்ளதா?

நிச்சயம் தடுப்பு மருந்து கண்டறியப்படும். முன்னேற்றங்களைக் காட்டும் தடுப்புமருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. முதல்நிலைத் தடுப்பு மருந்து மூன்று மாதங்களில் அமெரிக்காவில் சோதனை செய்து பார்க்கப்படவுள்ளது. சரியான தடுப்பு மருந்து கண்டறியப்பட ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம்வரை ஆகலாம்.

vaccine
vaccine

4. தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால்கூட, உலகம் முழுவதும் அதற்கான தேவையிருப்பதால், இந்தியாவுக்கு அது போதுமான எண்ணிக்கையில் கிடைக்குமா?

முதலில் வெளிநாடுகளில்தான் தடுப்பு மருந்து கிடைக்கும். அதிக அளவில் தயாரிப்புகள் நடைபெற்ற பிறகே 130 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவுக்கு வரும். தடுப்பு மருந்து கண்டறிய அதிகபட்சம் ஓராண்டு, அதிக அளவு தயாரிப்பு நடைபெற அதிகபட்சம் ஓராண்டு என்று வைத்துக்கொண்டாலும், அது நமக்கு கிடைப்பதற்கு ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளப்போகிறோம் என்பதுதான் சவால்.

5. பள்ளிகளை இன்னும் அதிக காலத்துக்கு மூடி வைக்க முடியாது. அதைத் திறக்கும் சூழல் ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு தீவிர கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது. சிலருக்கு வந்து போனதுகூட தெரியாது. ஆனால், குழந்தைகள் வைரஸை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கடத்துவார்கள். வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முக்கியமாக வேறு மருத்துவப் பிரச்னைகள் (Comorbidities) இருப்பவர்களுக்குக் கடத்திவிடுவார்கள். குழந்தைகள் மத்தியில் நோய் பரவாமல் தடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

Back to school
Back to school

முதலாவதாக, பள்ளிகளில் இருக்கையை ஒவ்வொரு குழந்தைக்கும் இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும். 6 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். ஒவ்வொரு பாடவேளைக்கும் இடையில் மணியடிக்கும்போது அனைத்துக் குழந்தைகளும் சோப்பு போட்டு கைகழுவவோ சானிட்டைஸர் போட்டு கையை சுத்தம்செய்யவோ பழக்க வேண்டும்.

குழந்தைகள்... கண்ணில், மூக்கினுள் கை வைக்கக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது, ஒருவரையொருவர் தொட்டுப் பழகக்கூடாது என்ற அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கி, அந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளைத் திறப்பதற்கு முன் இதுபோன்ற நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

6. 'ஹேப்பி ஹைப்போக்சியா' என்ற பாதிப்பால் உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுப்பது எப்படி?

வயதானவர்கள், புற்றுநோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், 'ஹேப்பி ஹைப்போக்சியா' ஏற்படலாம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது மூச்சுவாங்குவது, மூச்சுத்திணறல் ஏற்படும். சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமலேயேகூட ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையலாம். கொரோனா வைரஸ் தொற்றால் காலில் ரத்தம் உறையும் ஆபத்து அதிகம். காலிலிருந்து அந்த உறைவு மற்ற இடங்களுக்கும் பரவலாம். சிலருக்கு நுரையீரலிலேயேகூட சிறிய ரத்த உறைவுகள் ஏற்படலாம்.

Oxygen
Oxygen

அதனால் நோயாளிகளை அனுமதிக்கும்போதே அவர்களுக்கு ரத்தம் உறைவதற்கான வாய்ப்பு இருந்தால், ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்தை தொடர்ந்து கொடுப்போம். தீவிர கொரோனா பாதிப்புக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்கும் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் கருவியை வாங்கி அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மூச்சுத்திறணல், மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

7. தற்போது காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று ஏற்பட்டால் கொரோனாவா என்று சந்தேகிக்க வேண்டுமா?

இந்த நேரத்தில் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது கொரோனாவாக இருப்பதற்கு 90 சதவிகிகத்துக்கும் மேல் வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு அக்டோபரில் வரும் வடகிழக்குப் பருவமழைதான் மழைப்பொழிவைக் கொடுக்கும்.

`சாப்பாடு மட்டும் போதுமா?’ - முதியவர் மரணத்தால் கொரோனா வார்டில் மூண்ட மோதல்
Fever check
Fever check

ஆனால், தற்போது கேரளத்துக்கு தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்களும் வரலாம். எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு