Published:Updated:

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி FAQ: உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடைகள் இங்கே!

Covid -19 Vaccine
News
Covid -19 Vaccine ( AP Photo )

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்த ஏராளமான சந்தேகங்கள், பயம், கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் விளக்கமான பதில்கள் இங்கே...!

ஒமிக்ரான் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு என மீண்டும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்புக்கு எதிரான மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஜனவரி 10-ம் தேதியிலிருந்து முதல்கட்ட பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்த ஏராளமான சந்தேகங்கள், பயம், கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் விளக்கமாகப் பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

பூஸ்டர் டோஸ் ஏன் அவசியம்?

``மற்ற கொரோனா வைரஸ்களைவிடவும் இப்போது பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் மிக வலிமையானது, வேகமாகப் பரவக்கூடியது. ஏற்கெனவே தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரக்கூடிய `பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன்' வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பூஸ்டர் டோஸ் போடுவதன் மூலம் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். எனவே சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. உலகம் முழுக்க இதைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருத்துவர் அஷ்வின் கருப்பன்
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

ஒரு தடுப்பூசி போட்டதும் சிறிதளவு ஆன்டிபாடி உருவாகும். அதை மேலும் வலுவாக்க இன்னொரு டோஸ் போடப்படும். அந்தவகையில் இரண்டாவது போடப்படுவதே ஒருவகையில் பூஸ்டர் டோஸ்தான். இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு நம் உடலில் 80 சதவிகித அளவுக்கு ஆன்டிபாடி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே நம்முடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இப்போது பரவும் ஒமிக்ரான் தொற்றைத் தடுக்கவும் போடப்படுவதுதான் மூன்றாவது தவணை ஊசி. தடுப்பூசி போட்டுக்கொண்டாலே உங்களுக்கு எதிர்ப்பாற்றல் உருவாகும் என்பதால்தான் அதைத் தவிர்க்க வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதாலும், ஆன்டிபாடி குறைந்திருக்க வாய்ப்பிருப்பதாலுமே பூஸ்டர் டோஸ் போட அறிவுறுத்துகிறார்கள்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பூஸ்டர் டோஸ் தேவை என்றால், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை என அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?

``பூஸ்டர் டோஸ் போடப்படுவதால் ஏற்கெனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் பயனற்றவை என அர்த்தமில்லை. நம் உடலில் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் அளவு மெள்ள மெள்ள குறைந்துகொண்டே வரும். அப்படிக் குறைவதால் ஒமிக்ரான் வைரஸ் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது. மற்றபடி முதல் இரண்டு தவணைகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு ஓரளவுக்கு எதிர்ப்பாற்றல் இருக்கும்."

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்குத் தகுதியானவர்கள்?

``மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேலான இணை நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் (எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதாக மருத்துவர் குறிப்பிடும் பட்சத்தில்) பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம். இது படிப்படியாக 50 வயது, 40 வயது என மற்றவர்களுக்கும் போடப்படலாம்.
தற்போதுள்ள அறிவிப்பின்படி நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுள்ள `இம்யூனோகாம்ப்ரமைஸ்டு' நோயாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் கொடுக்கலாம் என்று சொல்லப்படவில்லை. எனவே, இம்யூனோகாம்ப்ரமைஸ்டாக இருந்தாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்றால்தான் இதற்குத் தகுதியானவராவார்கள். ஒருவேளை அரசு பூஸ்டர் டோஸ் போடுவதைத் தொடங்கியதும் தடுப்பூசி கையிருப்பைப் பொறுத்து, அடுத்தகட்டமாக இம்யூனோகாம்ப்ரமைஸ்டு நோயாளிகள் மற்றும் 60 வயதுக்குக் கீழானவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படலாம்."

மூன்றாவதாகப் போடப்படும் பூஸ்டர் டோஸ், கோவாக்சின், கோவிஷீல்டு என எதுவாகவும் இருக்கலாமா? அதாவது முன்பு செலுத்திக்கொண்டதிலிருந்து வேறுபடலாமா?

``அரசு அறிவிப்பின்படி நீங்கள் முதல் இரண்டு டோஸ்களையும் எந்தத் தடுப்பூசியில் எடுத்துக்கொண்டீர்களோ, மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸையும் அதிலேயேதான் எடுக்க வேண்டும். அதாவது நீங்கள் கோவாக்சின் தடுப்பூசியில் இரண்டு டோஸ் போட்டிருந்தால், பூஸ்டர் டோஸையும் கோவாக்சினாகத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு என்றால் அதைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். வேறு தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் முழுமையான எதிர்ப்புசக்தி கிடைக்காமல் போகும். ஒருவேளை உங்களுக்கு எந்தத் தடுப்பூசி போடப்பட்டது என்று தெரியாவிட்டால், கோவின் இணையதளத்துக்குச் சென்று அதைத் தெரிந்துகொள்ளலாம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூஸ்டர் டோஸையும் ஃப்ளூ வாக்சினையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளலாமா?

``இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால், ஒருவேளை காய்ச்சல் வந்தால் எதனால் வந்தது என்று தெரியாமல் போகும். எனவே, எப்போதுமே இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும்போது 14 முதல் 15 நாள்கள் இடைவெளிவிட்டுப் போட்டுக்கொள்வதுதான் சரியானது. ஆனால், கொரோனா தடுப்பூசியும் ஒருவிதத்தில் ஃப்ளூ தடுப்பூசி போன்றதுதான் என்பதால் இரண்டையும் ஒரே நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம்."

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் அவசியமா?

``கொரோனா வந்தவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்டு 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரோனா தொற்றால் ஏற்படும் எதிர்ப்பாற்றல் சில நாள்களில் குறைந்துவிடும். எனவே, தடுப்பூசியால் ஏற்படும் ஆன்டிபாடிக்கள் நீண்டகாலம் இருக்கும். தற்போதுள்ள நிலவரப்படி, இரண்டாவது டோஸ் போட்டு 39 வாரங்கள் கழித்து அல்லது 9 மாதங்கள் கழித்துதான் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னால் பூஸ்டர் டோஸ் தேவையில்லை."

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo/Mahesh Kumar A

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வோருக்கு எப்படிப்பட்ட பக்கவிளைவுகள் இருக்கும்?

``முன்பு செலுத்திக்கொண்ட கொரோனா தடுப்பூசியைத்தான் பூஸ்டர் டோஸாகவும் செலுத்திக்கொள்ளப் போகிறீர்கள். லேசான ஜலதோஷம் அல்லது காய்ச்சல் இருக்கலாம். அதைத் தாண்டி அதில் எந்தவிதமான பக்க விளைவும் இருக்காது."

தடுப்பூசி போடுவது மூன்றாவது டோஸுடன் நிற்குமா... அல்லது மறுபடி தொடருமா?

``தற்போதுள்ள நிலவரப்படி, இப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராகத்தான் பூஸ்டர் டோஸ் கொடுக்கப்படுகிறது. அதைக் கொடுத்தால்தான் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆற்றல் நமக்கு கிடைக்கும். குறிப்பிட்ட இந்த வைரஸ் உருமாற்றமானது பலவித திரிபுகளைக் கொண்டதாக இருக்கிறது. எனவே, இதை நாம் தடுத்துவிட்டாலே, இனி அடுத்து வரப்போகும் உருமாற்றங்களுக்கு நமக்குத் தடுப்பூசிகள் தேவைப்படாது. பொதுவாகவே 3 டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகு, ஒருவருக்கு ஆன்டிபாடி அளவு நன்றாகவே இருக்கும். எனவே , பூஸ்டர் டோஸுக்கு நீங்கள் தகுதியானவர் என்றால் பயமின்றி எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அவை உருவாக்கும் ஆன்டிபாடிக்கள் சோர்ந்துபோவது இயல்பு. ஃப்ளூ தடுப்பூசியும் அப்படித்தான். வருடம் ஒருமுறை அதற்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்கிறோம்."

கொரோனா தடுப்பூசியைப்போல இரண்டு, மூன்று டோஸ் போடப்படும் தடுப்பூசிகள் வேறு இருக்கின்றனவா?

``இதுபோன்ற நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் இரண்டு டோஸ், மூன்று டோஸ் கொடுக்கப்படுவதுண்டு. உதாரணத்துக்கு போலியோ தடுப்பூசி, ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகள்... எனவே, கொரோனா தடுப்பூசி மட்டும்தான் இரண்டு, மூன்று டோஸ் கொடுக்கப்படுவதாக நினைத்து யாரும் பயப்படத் தேவையில்லை."

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்பவர்கள்தான் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாகக் கருதப்படுவார்களா?

இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டாலே நீங்கள் 'fully vaccinated' என்றே அழைக்கப்படுவீர்கள். பூஸ்டர் டோஸ் என்பது கூடுதல் பாதுகாப்புக்காகவும், நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதிகரிப்பதற்காகவும் போடப்படுவதுதான். ஏற்கெனவே சொன்னதுபோல பூஸ்டர் டோஸ் என்பது தினமும் கோவிட் நோயாளிகளுடன் நெருங்கிப் பழகும் இடத்தில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றோருக்கும், 60 வயதுக்கு மேலான, இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, மற்றவர்கள் மாஸ்க் அணிவது, கைகழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே நோய்த்தொற்றி லிருந்து தற்காத்துக்கொள்ளலாம். `நமக்கு பூஸ்டர் டோஸ் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படத் தேவையில்லை. பூஸ்டர் எடுத்துக்கொள்ளத் தகுதியானவர்கள் முதலில் எடுத்துக்கொள்ளட்டும். அடுத்து மற்றவர்களுக்கும் அது கிடைக்கப்பெறும்.

`பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளாவிட்டால் எனக்கு தொற்று வருமா' என்று கேட்டால், மேற்குறிப்பிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் உங்களுக்கு தொற்று வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

கர்ப்பிணிகளுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுமா?

``கர்ப்பிணிகளுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்போதைக்கு கர்ப்பிணிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டாம். அதைத் தாண்டி அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இப்போதைய நிலவரப்படி இரண்டாவது டோஸ் போட்டு 39 வாரங்கள் கழித்து அல்லது 9 மாதங்கள் கழித்துதான் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பகாலமே மொத்தமாக 40 வாரங்கள்தான். அதனால் கர்ப்பிணிகள் பூஸ்டர் பெறத் தகுதியானவர்கள் பட்டியலிலேயே வர மாட்டார்கள். 60 வயதுக்கு மேலானவர்களுக்குதான் இப்போது பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் இளம் வயது கர்ப்பிணிகள் அந்தப் பட்டியலில் வர மாட்டார்கள்."

இருமுறை கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தேவையா?

``ஏற்கெனவே ஒருமுறையோ, இரண்டு முறையோ கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும். அந்த நபர் கோவிட் தாக்குதலுக்குள்ளாகும் சூழலில் இருக்கிறார் என்றும் அர்த்தம். எனவே, எப்போது பூஸ்டர் எடுத்துக்கொள்வது என்பதைவிட, அரசு அறிவித்திருக்கும் பிரிவினரில் வருபவர் என்றால் மட்டுமே நீங்கள் பூஸ்டர் டோஸ் பற்றி யோசிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் வருபவர் என்றால் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்களுக்கு பூஸ்டர் தேவையா என்று தெரிந்துகொண்டு முடிவெடுக்கலாம்."