Published:Updated:

தீபாவளி அன்று இதையெல்லாம் செய்யக் கூடாது.. ஏன் தெரியுமா? மருத்துவர் விளக்கம்

பட்டாசு வெடிக்கும்போது அதனுடைய பாதிப்பால் கண்ணிலுள்ள விழித்திரையில் லேசான கீறலோ அல்லது கருவிழியில் பாதிப்போ ஏற்பட்டிருந்தால் அதனால் பார்வையிழப்பு கூட ஏற்படலாம். எனவே கண்ணில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

deepavali
deepavali ( pixabay )

“குடும்பத்தோடு சேர்ந்து குதுகலமாகக் கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி. தீபாவளி என்ற சொல்லைக் கேட்டாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். புத்தம் புதிய ஆடைகள், இனிப்புகள், வண்ணமயமான பட்டாசுகள் எனத் தீபாவளி களைகட்டும். ஆனால், மருத்துவத் துறையைச் சேர்ந்த எங்களுக்குத் தீபாவளியால் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் படபடப்பும் பயமும் ஏற்படவே செய்யும். தீபாவளியின்போது நடக்கும் சாலை விபத்துகள் மற்றும் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயங்கள்தான் காரணம்” என்கிறார் மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

deepavali
deepavali
pixabay

மேலும், தீபாவளியின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன என்பதை விவரிக்கிறார்.

“தீபாவளி அன்று எல்லோருக்குமே பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் இருக்கும். சிலர் நாள் முழுக்க அதிலேயே கவனம் செலுத்துவார்கள். பட்டாசு வெடிப்பவர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தரமான பட்டாசுகளை, உரிமம் பெற்ற கடைகளில் வாங்குவது நல்லது. வாங்கிய பட்டாசுகளைத் தனி அறையில் மரப் பெட்டியில் வைக்க வேண்டும்.

தீபாவளியன்று பட்டாசுகளை வாகனங்கள் இல்லாத திறந்த வெளியிலேயே வெடிக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். குழந்தைகளைத் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. உடன் பெற்றோர் இருப்பது அவசியம். முடிந்த அளவிற்கு நீளமான கம்பி மத்தாப்பு, ஊதுவத்தி கொண்டே பட்டாசுகளைக் கொளுத்த வேண்டும்.

fire works
fire works
pixabay

பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி நிறைய தண்ணீரும், முதலுதவிப் பெட்டியும் வைத்திருப்பது அவசியம். பட்டாசுகளின் மீது எப்படி வெடிக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதல் இருக்கும். அதன்படி செயல்பட வேண்டும்.

வெடித்த பட்டாசுகளைத் தண்ணீர் வைத்திருக்கும் வாளியில் சேகரித்து, பின்னரே அப்புறப்படுத்த வேண்டும். பட்டாசு வெடித்த பின்னர் கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தமாக கழுவிய பின்னரே, சாப்பிடச் செல்ல வேண்டும்.

செய்யக் கூடாதவை

வீட்டில் மழலைகள், கர்ப்பிணிகள், வயதானோர், நோய்வாய்ப்பட்டோர், வளர்ப்பு நாய்கள் இருந்தால் அதிக சப்தம் உள்ள வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல அதிகப் புகையை உண்டாக்கும் வெடிகளையும் தவிர்ப்பது நல்லது.

fire works
fire works
pixabay

தெருக்களில், அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. ஸ்டைலாக கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். அதேபோல வெடிக்காத பட்டாசுகளை ஊதிப் பார்ப்பது, பட்டாசு அருகே முகத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம்.

பட்டாசுகளை வெடித்து முடித்தவுடன் அவற்றை எடுத்து செடி, கொடிகள், ஆறு, குளம் மற்றும் மிருகங்களின் மீது போடாமலிருப்பது முக்கியம்.

மது அருந்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது, வாகனங்கள் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

fire works
fire works
pixabay

மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தபோதும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பட்டாசு வெடிக்கும்போது சருமத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் கழுவிய பின்னர் அதன்மீது ஏதாவது ஆன்டிசெப்டிக் லோஷனைத் தடவ வேண்டும். தீக்காயம் பெரிதாகவோ, ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ இதே போன்று செய்ய வேண்டும். பின்னர் காயத்தின் மீது ஐஸ் க்யூப் வைத்து சுத்தமான துணியைக் கட்டிய பின், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கூடுமானவரை மஞ்சள் தூள், காபித் தூள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

Injury
Injury
pixabay

பட்டாசு வெடிக்கும்போது அதனுடைய பாதிப்பால் கண்ணிலுள்ள விழித்திரையில் லேசான கீறலோ அல்லது கருவிழியில் பாதிப்போ ஏற்பட்டிருந்தால் அதனால் பார்வையிழப்பு கூட ஏற்படலாம். எனவே கண்ணில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

பட்டாசுப் புகையால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை ஏற்படலாம் என்பதால் மாஸ்க் அணிவது நல்லது. சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டால் சரும மருத்துவரை அணுக வேண்டும்.

வெடிச் சத்தம் அதிகமாக இருப்பதால் காதுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அதைக் கடைப்பிடிப்பது நல்லது.

Dr. Sasithra
Dr. Sasithra

தனித் தனி குடும்பமாகப் பட்டாசு வெடிக்காமல், திறந்த வெளியில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பட்டாசு வெடித்தால் தீபாவளி இன்னும் அழகாக மாறிவிடும். அதேபோல நாம் மட்டும் சந்தோஷமாக இல்லாமல்.. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருப்பதற்கு மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே” என்கிறார் சசித்ரா.

79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் -  பட்டாசு... ஒரு A to Z  வரலாறு!