Published:Updated:

Flamingo Balance Test: ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் ஆயுசு கெட்டியா? - புதிய ஆய்வு சொல்லும் பதில்!

flamingo style balance test

ஒண்ணு... ரெண்டு... மூணு என்று பத்து எண்ணும்வரை உங்களால் ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து நிற்க முடியவில்லையா? அச்சச்சோ… உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆபத்து என்று அலர்ட் கொடுக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

Flamingo Balance Test: ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் ஆயுசு கெட்டியா? - புதிய ஆய்வு சொல்லும் பதில்!

ஒண்ணு... ரெண்டு... மூணு என்று பத்து எண்ணும்வரை உங்களால் ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து நிற்க முடியவில்லையா? அச்சச்சோ… உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆபத்து என்று அலர்ட் கொடுக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

Published:Updated:
flamingo style balance test
நீங்கள் 50 வயதைக் கடந்து 51–வது வயதில் அடியெடுத்து வைக்கிறீர்களா? அப்படியே, அடியெடுத்து வைப்பதற்கு முன், உங்களது ஒரு காலைத் தூக்கி மற்றொரு காலின் முட்டிக்குக் கீழ் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் (Flamingo Style) நில்லுங்கள். ஒண்ணு... ரெண்டு... மூணு எனப் பத்து எண்ணும்வரை உங்களால் நிற்க முடியவில்லையா? அச்சச்சோ… உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

"50 வயதைக் கடந்தவர்களுக்குத்தானே இந்த ஆய்வு? நான் ஒற்றைக்காலில் 10 என்ன… 100 எண்ணும்வரைகூட நிற்பேன்" என்று அலட்சியத்துடன் கடந்து செல்பவர்கள் கவனிக்க வேண்டிய ஆய்வு இது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் தேர்வாகி, இந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதால்தான் உலகமே உற்றுநோக்கும் ஆய்வாகப் பரபரப்பூட்டியிருக்கிறது.

ஒற்றைக்காலில் நிற்பது...
ஒற்றைக்காலில் நிற்பது...
Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்தில் உள்ள ’பிரிஸ்டல் மெடிக்கல் ஸ்கூல்’ 51 வயதிலிருந்து 75 வயதுவரையிலான 1,702 பேரை ஃப்ளமிங்கோ பறவைபோல் ஒற்றைக்காலில் நிற்கவைத்து ஆய்வு செய்ததில், 20 சதவிகிதம் பேர் நிற்கமுடியாமல் சோதனையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். 7 வருடங்கள் கழித்துப் பார்த்தபோது இவர்களில், 7 சதவிகிதம் பேர், அதாவது 123 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

காரணம், 10 நொடிகள்கூட நிற்கமுடியாதவர்களுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், எலும்பு - தசை - நரம்பு மண்டலங்களில் பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் இருந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசும் சென்னை அரசு மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை இணைப் பேராசிரியர் ராமலிங்கம், “51 வயதைக் கடந்தாலே இந்த ஆய்வில் சொல்லப்படும் நோய்கள் வந்து உடம்பு தானாகவே பலவீனமாக ஆரம்பித்துவிடும். அதற்கான, சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியென்றால், இந்த ஆய்வு 51 வயதில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு அல்ல. பிறந்து, இந்த உலகத்தில் காலடி எடுத்துவைக்கும்போதிலிருந்தே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தால்தான் 51 வயதைக் கடக்கும்போதும் ஆரோக்கியமாக வாழமுடியும்” என்று விளக்கிவிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கைகளையும் கூறினார்.

”சிறு வயதிலிருந்தே ஓடியாடி விளையாடவேண்டும். உணவுக் கட்டுப்பாடு, சரியான தூக்கம், உடற்பயிற்சி ஆகியவை வேண்டும். பரபரப்பாகவும் டென்ஷனாகவும் இல்லாமல் மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவேண்டும். புகை, மது உள்ளிட்ட பழக்கங்களிலிருந்தும் தள்ளியிருக்கவேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். உடல் பருமனைக் குறைக்கவேண்டும். ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் ரத்த ஓட்டமும் சத்தும் குறைந்து எலும்பு தசை வலுவிழந்து சாதாரண சறுக்கலில்கூட எலும்பு முறிவு ஏற்படலாம். மேலும் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும் போது சிறுநீரகம், இதயம், மற்றும் முக்கிய உடலுறுப்புகள் செயலிழந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

ராமலிங்கம்
ராமலிங்கம்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, சுமார் 40 வயது என்று மட்டுமே இருந்த சராசரி ஆயுட்காலம் தற்போது 65லிருந்து 70 வயதாகக் கூடியிருக்கிறது. இனிவரும் காலங்களில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது. வயதான பிறகு உயிர்வலி, மருத்துவமனைக்கு அலைச்சல், மருத்துவச்செலவுகள் என எதிர்காலத்தில் நோய்களுடன் போராடிக்கொண்டிருக்காமல், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் இப்போதே உங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியத்திற்குத் தயார் படுத்திக்கொள்ளுங்கள்” என்று ஆய்வைச் சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்குகிறார் டாக்டர் ராமலிங்கம்.

இந்த பத்து நொடி சோதனையை செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்களா? சுவரில் சாய்மானமாக இருக்காமல், அறையின் நடுவில் வந்து நில்லுங்கள். கைகள் எதையும் பற்றியிருக்கக்கூடாது. ஒரு காலைத் தூக்கி, இன்னொரு காலில் முட்டிக்கு அருகே அந்தப் பாதத்தை வையுங்கள். கைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணுங்கள். பிறகு இரண்டு பாதங்களையும் தரையில் வைத்து ரிலாக்ஸ் செய்யுங்கள். முதல்முறை தடுமாற்றம் இருக்கலாம். அதன்பின் நீங்களே ஜாலியாகி விடுவீர்கள்.

எது எதற்கோ ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்கிறவர்கள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஒற்றைக்காலில் நிற்கலாமே!