Published:Updated:

`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன?! #Corona

கொரோனா பாதிப்பின் வீரியம், இந்தியாவில் எந்த அளவில் இருக்கிறது?சிறுவயதில் படித்த Graphs, logarithmic table எல்லாம் நினைவிருக்கிறதா? அவற்றை வைத்துதான் இதற்கு விடை கண்டுபிடிக்கப்போகிறோம்!

கொரோனா வைரஸ் COVID-19, உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சீனா, இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெய்ன் போன்ற நாடுகளும் கொரோனாவின் இறுக்கமான பிடியில் தற்போது சிக்கியுள்ளன. உலகம் முழுவதும், இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஐந்நூற்றைத் தாண்டிவிட்டது.

கொரோனா அட்டாக்
கொரோனா அட்டாக்

இந்நிலையில், உலக நாடுகள் செய்த தவறுகளிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டுள்ளதா? கொரோனா பாதிப்பின் எந்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சில வரைபடங்கள் (Graphs) மூலம் பார்ப்போம். அதற்கு முன்பு, ஏன் இந்த வரைபடம் போடுகிறோம்... உலகமெங்கும் பலரும் 'Flatten the Curve' என்ற விழிப்புணர்வுக் குரலை ஏன் எழுப்பிவருகின்றனர்... இதற்கான சுருக்கமான விளக்கத்தைப் பார்ப்போம்.

'Flatten the Curve'... அப்படினா?

இந்த COVID-19 உலகம் முழுவதும் பரவிவரும் பெருந்தொற்று நோய் ('Pandemic') என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே. பரவும் வேகத்தைவைத்து நாமே இதை இரண்டு வகையாகப் பிரித்துவிடலாம். ஒன்று, வேகமாகப் பரவுவது, Fast Pandemic. இன்னொன்று மெதுவாகப் பரவுவது, Slow Pandemic. இதில் மெதுவாகப் பரவும் பெருந்தொற்று நோயைவிட வேகமாகப் பரவும் பெருந்தொற்று நோய் மிகவும் ஆபத்தானது. ஏன் என்றால், ரொம்ப சிம்பிளான லாஜிக்தான். ஒரே நேரத்தில் பலருக்கும் நோய்த் தோற்று வந்தால், அது நமது சுகாதார கட்டமைப்பு மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மருத்துவமனைகள், அளவுக்கு அதிகமான நோயாளிகளால் ஸ்தம்பித்துப் போகும்; புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் திணறும். இதனால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று பல நோயாளிகள் சிகிச்சை அளிக்காமலேயே கைவிடப்படுவார்கள் (இத்தாலியில் இதுதான் நடந்திருக்கிறது!).

திணறும் இத்தாலி மருத்துவத்துறை
திணறும் இத்தாலி மருத்துவத்துறை
Mauro Scrobogna/LaPresse AP

இதனால் தொற்று பரவும் வேகத்தைக் குறைக்கவேண்டியது கட்டாயம். அந்தத் தொற்று நோயை 'Slow Pandemic' ஆக மாற்ற வேண்டும். இதைச் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் சாத்தியப்படுத்தலாம். சர்வதேச போக்குவரத்துகளை நிறுத்துவது, மக்களை வீடுகளில் இருக்கச்சொல்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அதன் பொருட்டே எடுக்கப்படுகின்றன. ஹெச்.ஐ.வி-யும் ஒரு விதத்தில் உலகமெங்கும் பரவிய, இன்றும் பரவிவரும் பெருந்தொற்று நோய்தான். இன்னும் அதைக் குணப்படுத்துவதற்கான ஒழுங்கான மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. இதுவரை 3 கோடி உயிர்கள் ஹெச்.ஐ.வி நோயால் பறிபோயிருக்கின்றன. ஆனால், அது இப்போது கொரோனா அளவுக்கு வேகமாகப் பரவியிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். அது அப்படி நடக்காமல் இருக்க பல நடவடிக்கைகள் அப்போது எடுக்கப்பட்டன. கொரோனா போன்று நேரடியாகப் பரவும் நோயாக இல்லாததால் அதைக் கட்டுக்குள் வைப்பது சாத்தியமானது.

ஆனால் கொரோனா வேகம் இழக்க, சாதாரண கட்டுப்பாடுகள் போதாது. அதனால்தான் அனைவரையும் வீடுகளிலேயே இருக்கச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் வேகம் பிடித்துவிட்டால், கட்டுக்குள் கொண்டுவருவது இன்னும் கடினமாகும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா வேகம் குறைக்கப்பட்டால்தான் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அதிக அழுத்தம் வராமல் தடுக்கமுடியும். தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு போதிய நேரத்தையும் கொடுக்கமுடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி ஒரு தொற்றுநோய் எந்த வேகத்தில் பரவிவருகிறது என்பதைப் பார்க்க வரைபடங்களைப் (Graphs) பயன்படுத்துகின்றனர். காலத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான வரைபடம், நோய் பரவும் வேகத்தை நமக்கு எடுத்துக்காட்டும்.

காலம் செல்லச்செல்ல கொடுந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாவது வழக்கம்தான். ஆனால், இது எந்த வேகத்தில் நடக்கிறது என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சடசடவென உயர்ந்தால் வரைபடத்தில் இருக்கும் வளைவில் (curve) பெரும் எழுச்சி ஏற்படும். அது மிகவும் ஆபத்து, முன்பு சொன்னதைப் போல நமது சுகாதார அமைப்புகளின் மொத்தத் திறன் மீறி, நிலை போய்விடும். இந்த எழுச்சி ஏற்படாமல் இந்த வளைவை முடிந்த அளவு தட்டையாக்க வேண்டும். இதைத்தான் 'Flatten the Curve' எனக் கூறுகின்றனர். இதை சாத்தியப்படுத்த, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கீழ்வரும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே இது தெளிவாகப் புரியும்.

#FlattenTheCurve
#FlattenTheCurve

இதில் நீள நிற வளைவைப் போல முடிந்த அளவு தட்டையாக வைத்திருப்பதால் மட்டுமே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா போன்ற வைரஸ்களை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கான முயற்சிகளை முன்பே எடுக்காததால்தான் நாடுகள் பேரழிவை இப்போது சந்தித்துவருகின்றன.

இந்த வரைபடங்கள் மூலம் இந்தியாவில் தற்போது என்ன நிலை என்று பார்ப்பதற்கு முன்பு இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் மற்ற நாடுகளின் தற்போதைய நிலை என்ன, ஆரம்பக்கட்டத்தில் நிலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

இத்தாலி பாதிப்புகளின் ஆரம்பம்!

முதலில் இத்தாலியைப் பற்றி பார்ப்போம். திங்கள், மார்ச் 23-ம் தேதி நிலவரப்படி அங்கு மொத்தம் 63,927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் தற்போதைய நிலை
இத்தாலியின் தற்போதைய நிலை

பிப்ரவரி 2-ம் தேதி நிலவரப்படி இந்தியா, இத்தாலி; இரு நாடுகளிலுமே 2 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை பிப்ரவரி 22-க்குப் பிறகு திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. ஆறே நாள்களில் இந்த எண்ணிக்கை 888 ஆனது. அடுத்த ஆறு நாள்களில் அது 3,858. இதுதான் அங்கு சமூக பரவல் தொடங்கிய காலம்.

ஆரம்பத்தில் இத்தாலி
ஆரம்பத்தில் இத்தாலி

நேற்று வரை (மார்ச் 24) இத்தாலியில் 69,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டுவரும் சீனா!

முதல் பாதிப்புகளைச் சந்தித்த சீனாவில், கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சில நாள்களாகவே, அங்கே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,000 -களில்தான் இருக்கிறது.

சீனாவின் தற்போதைய நிலை
சீனாவின் தற்போதைய நிலை

சீனாவில் கொரோனாவின் ஆரம்பக் கட்ட பரவல், ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. ஜனவரி 17-ம் தேதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆக இருந்தது. வெறும் 18 நாள்களில் இந்த எண்ணிக்கை 24,324 ஆக உயர்ந்தது.

ஆரம்பத்தில் சீனா
ஆரம்பத்தில் சீனா

Curve-ஐ இறுதியாக தட்டையாக்கத் தொடங்கிவிட்டது சீனா.

இந்தியாவின் தற்போதைய நிலை?

இந்த நாடுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவும் கொரோனா பரவுதலின் ஆரம்பநிலையை அடைந்துவிட்டது என்பது மட்டும் தெளிவாகுகிறது. முக்கியமாக, வெளிநாடுகள் சென்று வராதவர்களுக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை வைத்தே சமூகப் பரவல் ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாம்.

இந்தியாவின் தற்போதைய நிலை
இந்தியாவின் தற்போதைய நிலை
கொரோனா சமூகப் பரவல் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது.
மாநில சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர்
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்நிலையில்தான் நேற்று இரவு; 21 நாள்களுக்குத் தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்திருக்கிறார் மோடி. 130 கோடி மக்கள் வாழும் நாட்டையும் மொத்தமாக லாக்-டவுண் செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற லாக்-டவுண் முயற்சிகள் இத்தாலி மற்றும் சீனாவிலும் எடுக்கப்பட்டது. ஆனால், அதை எடுப்பதற்குள் அங்கே நிலைமை கை மீறிப் போய்விட்டது.

சரியான நேரத்தில் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறதா?

மார்ச் 9
இத்தாலி மொத்தமாக லாக்-டவுண் செய்யப்பட்டது. அப்போது அங்கே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,172.
ஜனவரி 23
வுஹான் நகரம் லாக்-டவுண் செய்யப்பட்டது. அப்போது சீனாவில் 830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஜனவரி 29
ஹுபே மாகாணம் லாக்-டவுண் செய்யப்பட்டது. அப்போது சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,712

இப்படி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பின்புதான் கடுமையான நடவடிக்கைகளையும், முக்கியக் கட்டுப்பாடு முயற்சிகளையும் எடுத்துள்ளன. ஆனால், காலம் தாழ்ந்த முயற்சிகளால் ஏற்கெனவே தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுவிட்டனர். இத்தாலியின் மிகவும் மோசமான நிலைக்கு அதுதான் காரணம். சீனாவில் அப்போது எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இப்போதுதான் பலன் கிடைக்கத்தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் 80,000-க்கும் அதிகமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

நாடுகள் இப்படி லாக் டவுன் செய்வதில் தாமதம் காட்ட, இந்தியாவில் சுமார் 500 பேருக்குப் பாதிப்பு இருக்கும்போதே தேசம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சமூகப் பரவலால் பலரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் முதல் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே தெரிந்துவிடும். அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவிடலாம். இதனால் இந்த 21 நாள்களில் புதிய பரவல்கள் பெருமளவில் தடுக்கப்படும் என நம்பலாம்.

தென்கொரியா என்னும் முன்மாதிரி!

தென்கொரியாவும் இதேபோன்று ஆரம்பக்கட்டத்திலேயே வைரஸ் தாக்குதலின் அச்சுறுத்தல் உணர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதனால்தான் தென்கொரியாவால் எப்போதும் நிலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிந்தது. இதன்மூலம் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தும் Curve'ஐ Flatten செய்த இன்னொரு முக்கிய நாடாகச் சீனாவுடன் சேர்ந்திருக்கிறது தென்கொரியா.

தென்கொரியா என்னும் முன்மாதிரி!
தென்கொரியா என்னும் முன்மாதிரி!

தென்கொரிய அரசின் மேல் மக்கள் நன்மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருந்ததும்கூட இதற்கு முக்கியக் காரணமாம்!

தத்தளிக்கும் அமெரிக்கா... கற்கவேண்டிய பாடம்!

இந்த நேரத்தில், அமெரிக்காவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன. கொரோனாவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் தப்பித்து இணைந்துள்ளது. நேற்று (மார்ச் 24) மட்டும் அங்கே புதிதாக சுமார் 9,000*-க்கும் அதிகமான பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மோசமான நிலையில் அமெரிக்கா
மோசமான நிலையில் அமெரிக்கா

இத்தாலியைவிட அமெரிக்காவின் நிலைதான் மோசமாக இருக்கிறது. இதுபோன்ற வைரஸ் பாதிப்புகளின் வீரியம் குறைந்துவிட்டதா என்பதைப் பார்க்க 'Logarthamic Scale' வரைபடங்களைப் பயன்படுத்தலாம். அதாவது 100, 200, 300 என இருப்பதற்குப் பதிலாக 0, 10, 100, 1000, 10000 என இதன் ஸ்கேல் இருக்கும். வைரஸ் ஒருவரிலிருந்து பல பேருக்கும் பரவும் என்பதால், அந்தப் பரவல் தடுக்கப்படுகிறதா இல்லையா என்பதை இதை வைத்து தீர்மானிக்கலாம்.

அமெரிக்கா v இத்தாலி
அமெரிக்கா v இத்தாலி

அப்படிப் பார்க்கையில், இத்தாலிகூட தற்போது வைரஸ் பரவாமல் ஓரளவு தடுத்துவருவது தெரிகிறது. ஆனால், அமெரிக்காவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. கீழ்வரும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு அது தெளிவாகப் புரியும்.

இத்தாலி v அமெரிக்கா
இத்தாலி v அமெரிக்கா
இந்தியாவுக்கு இப்படி 'Logarthamic Scale' போட்டு பாதிப்புகளை அளக்கும் நிலை வராது என நம்புவோம்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்கா தற்போது இந்தியா இருக்கும் நிலையிலிருந்தது. ஆனால் அங்கும் மக்களால் கொரோனா அலட்சியமாகவே கையாளப்பட, இன்று இத்தாலியையும்விட மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும் நாடாக உருவெடுத்துவருகிறது அமெரிக்கா.

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று! -பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு  #NowAtVikatan

கொரோனா பாதிப்புகளில் இத்தாலியைவிட சரியாக மூன்று வாரங்கள் இந்தியா பின்தங்கி இருக்கிறது எனச் சொல்லலாம். இந்த வரைபடங்களைப் பார்த்தாலே அது புரியும். எதோ ஒரு வகையில் இந்த விஷயத்தில் பின்தங்கியிருந்ததுதான் இதை எப்படிக் கையாள வேண்டும் எப்படி கையாளக்கூடாது என்ற படிப்பினைகளை நமக்குக் கொடுத்திருக்கிறது. இத்தாலி விட்டுச்சென்றிருக்கும் கடந்தகாலம், நமக்கு அடுத்த 21 நாள்கள் மிகவும் முக்கியம் என எச்சரிக்கிறது. இதை அமெரிக்கா போல உதாசீனப் படுத்தாமல், கடுமையான நடவடிக்கைகளையே இந்திய அரசும் எடுத்திருக்கிறது. இந்த முயற்சிகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்து Curve-ஐ இந்தியாவும் Flatten செய்யும் என்ற நம்பிக்கையுடன் வீடுகளிலேயே இருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு