Published:Updated:

#FlattenTheCurve: கொரோனாவை இன்னும் கட்டுக்குள்தான் வைத்திருக்கிறதா இந்தியா?

அமெரிக்காவில் பரவிய வேகத்திலோ, இத்தாலியில் பரவிய வேகத்திலோ கொரோனா இங்கு பரவவில்லைதான்; ஆனால், நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறதா... வரைபடங்கள் (graphs) என்ன சொல்கின்றன?

கொரோனா பாதிப்பு உலகமெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. வெகுசில பகுதிகளில் மட்டுமே இந்த இக்கட்டான சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார், நான்கு வாரங்களுக்கு முன்பு #FlattentheCurve குறித்தும் இந்தியாவில் அமலுக்கு வரவிருக்கும் லாக் டெளன் அதில் எந்த அளவுக்கு பங்களிக்கப்போகிறது என விரிவாக எழுதியிருந்தோம். #FlattentheCurve என்றால் என்ன, கொரோனா பாதிப்புகளை அளவிடுவதில் அதன் முக்கியத்துவம் என்ன என்ற அறிமுகத்துக்கு அந்தக் கட்டுரையைக் கீழே உள்ள லிங்க்கில் படியுங்கள்.

`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன?! #Corona
#FlattenTheCurve:உலகம்
#FlattenTheCurve:உலகம்

அந்தக் கட்டுரை எழுதியபோது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 4 லட்சமாக இருந்தது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது அந்த எண்ணிக்கையானது 24 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதாவது 4 வாரங்களுக்குள்ளாக 6 மடங்கு அதிகரித்துள்ளது அந்த எண்ணிக்கை. கொரோனா எந்த அளவு வேகமாகப் பரவிவருகிறது என்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு இருந்துவிடமுடியாது.

இதுபோன்ற வைரஸ் பாதிப்புகளின் வீரியம் எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்க `Logarthamic Scale' வரைபடங்களைப் பயன்படுத்தலாம். அதாவது 100, 200, 300 என இருப்பதற்குப் பதிலாக 0, 10, 100, 1000, 10000 என இதன் ஸ்கேல் இருக்கும். வைரஸ் ஒருவரிலிருந்து பலருக்கும் பரவும் என்பதால், அந்தப் பரவல் தடுக்கப்படுகிறதா இல்லையா என்பதை இதை வைத்துத் தீர்மானிக்கலாம்.

#FlattenTheCurve:உலகம்
#FlattenTheCurve:உலகம்

அப்படிப் பார்த்தால்கூட வளைவு (curve) தட்டையாவதற்கான எந்த அறிகுறிகளுமே இல்லை. தொடர்ந்து மேல்நோக்கிதான் அது பயணித்துக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்கா
உலகளவில் பாதிப்புகள் வேகமெடுத்ததில் அமெரிக்காவுக்கு முக்கியப் பங்கு உண்டு!
#FlattenTheCurve:அமெரிக்கா
#FlattenTheCurve:அமெரிக்கா
#FlattenTheCurve:அமெரிக்கா
#FlattenTheCurve:அமெரிக்கா

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் இறந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ட்ரம்ப் அரசு கொரோனாவை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததுதான். அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுகளில் எந்த அளவு அலட்சியம் வெளிப்பட்டதோ அதே அளவுதான் செயல்பாட்டிலும் வெளிப்பட்டது. அதனால், எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் கொரோனா பரவல் என்பது நேராகக் கடைசி கியரை எடுத்தது. மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பீச், பார்க் எனக் கூடினர். மாகாண அரசுகள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முயன்றாலும் ட்ரம்ப் அரசு அவற்றுக்கு முட்டுக்கட்டை போட்டது.

#FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

ஏற்கெனவே, `எல்லாத்தையும் சந்தை பார்த்துக்கொள்ளும்' என மருத்துவமனைகளையும் தனியார் மயமாக்கிவிட்டதால், பல இடங்களில் மருத்துவமனைகள் ஏற்கெனவே திவாலாகிவிட்டன. அப்படியான மருத்துவமனைகள் பலவும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இருந்த ஒரே மருத்துவமனைகள். இன்று அவை யாருக்கும் பயனில்லாமல் நிற்கின்றன. இருந்தும் சந்தையின் அடிமையாகவே இருக்கிறார் ட்ரம்ப். அனைத்தையும் தனியார்மயமாக்க நினைக்கும் அரசுகளுக்கு இது ஒரு பாடம்.

டிரம்ப்
டிரம்ப்
AP / Patrick Semansky

இப்படி கொரோனா விஷயத்தில் மொத்தமாகக் கோட்டைவிட்ட பிறகும் ட்ரம்ப் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் தெரியுமா, `நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது, வைரஸ் பரவல் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டது; இனி பாதிப்புகள் படிப்படியாகக் குறையும்.' என்கிறார். இதுகூட பரவாயில்லை, `சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி 100 கோடி அமெரிக்கர்களைக் காப்பாற்றியிருக்கிறேன்' என்கிறார். அமெரிக்கா மொத்த மக்கள் தொகையே அவ்வளவு கிடையாது...!

இந்தியா
#FlattenTheCurve செய்கிறதா?

அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளின் `வைரஸ்தானே?!' என்ற இந்த அலட்சியப் போக்கு நமக்கான பாடமாக மாறியது. அப்போது கொரோனா பாதிப்புகளில் அமெரிக்காவைவிட சுமார் இரண்டு வாரங்களும், இத்தாலியைவிட மூன்று வாரங்களும் பின்தங்கியிருந்தது இந்தியா. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தால் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனக் கண் எதிரே பார்த்தது அரசு. உடனடியாக 21 நாள்கள் லாக் டெளனை அறிவித்தது. அப்போது விவரித்தது போலவே அந்த 21 நாள்கள் கொரோனா விஷயத்தில் நம்மை ஒரு அமெரிக்காவாகவோ இத்தாலியாகவோ ஆக்காமல் தற்காத்தது.

#FlattenTheCurve: இந்தியா
#FlattenTheCurve: இந்தியா

அதற்காகப் பாதிப்புகளே இல்லை என்றில்லை, இந்தியாவிலும் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மொத்தமாக இந்தியாவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 19-ம் தேதி நிலவரப்படி 16,000-ஐ கடந்துவிட்டது.

ஆனால், அமெரிக்காவில் பரவிய வேகத்திலோ, இத்தாலியில் பரவிய வேகத்திலோ இங்கு அது பரவவில்லை. அது வரைபடத்தைப் பார்த்தாலே புரியும். `அதற்காகப் பிரச்னை கட்டுக்குள் இருக்கிறது' என்று மட்டும் அர்த்தம் கொண்டுவிட வேண்டும். சவாலான நாள்கள் இனிதான் வரப்போகிறது.

#FlattenTheCurve: இந்தியா
#FlattenTheCurve: இந்தியா
#FlattenTheCurve:அமெரிக்கா vs இந்தியா
#FlattenTheCurve:அமெரிக்கா vs இந்தியா

`Logarthmic Scale' வரைபடத்தில் பார்த்தாலும் பரவல் என்பது குறையவில்லை என்பது தெளிவாகப் புரியும். ஏதேனும் சிறிய சறுக்கல்கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம். இதனால் நாம் அடுத்து எடுத்துவைக்கப்போகும் ஒவ்வொரு முடிவுமே கண்ணிவெடிகள் நிறைந்த காட்டில் எடுத்துவைக்கும் அடிகளாகப் பாவித்து எடுத்துவைக்க வேண்டும்.

இந்திய மாநிலங்களில் என்ன நிலை?

இந்திய மாநிலங்களில் என்ன நிலை?
இந்திய மாநிலங்களில் என்ன நிலை?
By Shanze1

Illustraion Credits: By Shanze1 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=88600908

மும்பை
இந்தியாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்!
#FlattenTheCurve: மகாராஷ்டிரா
#FlattenTheCurve: மகாராஷ்டிரா

மாநிலங்கள் அளவில் பார்த்தால் மகாராஷ்டிரா பெரும் பாதிப்புகளுக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை 4,483 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 223 பேர் பலியாகியிருக்கின்றனர். மும்பை நகரம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் எந்த ஒரு மாநிலத்தை விடவும் மும்பையில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#FlattenTheCurve: டெல்லி
#FlattenTheCurve: டெல்லி

அதற்கடுத்து அதிக பாதிப்புகளைச் சந்தித்துவருவது டெல்லி.

கேரளா
#FlattenTheCurve செய்த முதல் மாநிலம்

மாநிலங்களுள் எதிர்பார்க்காததைச் செய்திருப்பது கேரளாதான். இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாகவும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மாநிலமாக இருந்ததால் கொரோனாவால் கேரளாதான் பெருமளவில் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டது. ஆனால், மாறாக கொரோனாவை வென்ற முதல் மாநிலமாகக் கேரளா உருவெடுக்கத்தொடங்கிருக்கிறது.

#FlattenTheCurve: கேரளா
#FlattenTheCurve: கேரளா

கடந்த மூன்று நாள்களில் அங்கு வெறும் 7 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குக் காத்திருக்காமல் மாநில அரசே பிரச்னையை கையில் எடுத்து களத்தில் இறங்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். தனிமைப்படுத்தப்பட்டவர்களைச் சரியாகக் கண்காணித்து அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டது, வீடு வீடாக விழிப்புணர்வு செய்தது எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அந்த அரசு. முக்கியமாக எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் பிரச்னையின் வீரியம் அறிந்து இணைந்து பணியாற்றின, மக்களும் பெருமளவில் ஒத்துழைப்பு நல்கினர். அதன் பலன்தான் இன்று அங்கு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவின் பிடி தளர ஆரம்பித்திருக்கிறது. விரைவில் அங்கு இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்
தற்போதைய நிலை என்ன?
#FlattenTheCurve: தமிழ்நாடு
#FlattenTheCurve: தமிழ்நாடு

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அரசு தெரிவிக்கும் தகவல்கள்படி பாதிப்புகளில் பெரும்பாலானவை சிங்கிள் சோர்ஸ்தான். ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுவிட்டாலும், கடந்த சில நாள்களில் புதிய பாதிப்புகள் குறைந்தே காணப்பட்டுவந்தது. முந்தைய வாரங்களைவிட கடந்த வார பாதிப்புகள் குறைவு என்றும் முந்தைய வாரங்களைப் போலப் பாதிப்புகள் இரட்டிக்கவில்லை என்றும் வரைபடத்தைப் பார்த்தால் புரியும். கடந்த சில நாள்களாகப் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்க, `விரைவில் மீண்டுவிடலாம்' என நம்பிக்கை துளிரத்தொடங்கியது. அப்படியான நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி 107 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இன்னும் தமிழகம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. இதுவரை தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் அதிகம் பேர் (457 - ஏப்ரல் 20 வரை) தேறி வருவது மட்டுமே ஆறுதல்.

முன்பு சொன்னதுபோல அடுத்து எடுத்துவைக்கப்போகும் ஒவ்வோர் அடியும் மிகவும் முக்கியம். மே 3-ம் தேதியை புதிய இலக்காக நிர்ணயித்திருக்கிறது அரசு. கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்ற முடிவும் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது.

லாக் டெளன் தளர்த்தப்படுவது சரியா?

கொரோனா: சமூக இடைவெளி
கொரோனா: சமூக இடைவெளி
Ashwini Bhatia | AP

லாக் டெளன் போட வேண்டும் என்ற முடிவை எடுக்க எப்படி அமெரிக்கா, இத்தாலி படிப்பினைகள் நமக்கு உதவியதோ அப்படி இப்போது உதவ நேரடியாக எந்த ஒரு படிப்பினைகளுமே நம்மிடம் இல்லை. இருப்பினும் மீண்டும் அமெரிக்காவையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் கூட அங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது அரசு. இதற்கு டிரம்ப் அங்கு குறித்திருக்கும் டெட்லைன் மே 1. மொத்தம் 29 மாகாணங்கள் நல்ல நிலையில்தான் உள்ளன. அதில் 9 மாகாணங்களில் கொரோனா பாதிப்புகள் 1,000-க்கும் குறைவாகத்தான் இருக்கின்றன, ஒரு நாளில் 30 பேருக்கு மேல் புதிதாக அங்கு யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதில்லை என்கிறது அரசு தரப்பு.

பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க்கின் ஆளுநர் ஆண்ட்ரூ குவமோ சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளார். மற்ற ஆளுநர்களும்; கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறாதீர்கள் என்று வலியுறுத்திவருகின்றனர். ஆனால், இது மட்டும் போதுமா...?

உடனடியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நிலையில் அமெரிக்கா இல்லை என்றே தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். காரணம் போதிய டெஸ்டிங் வசதிகள் இல்லாதது. இன்னும் சில பகுதிகளில் அறிகுறிகள் இருப்பவர்களை மட்டுமே கொரோனா டெஸ்ட் எடுக்க அனுமதிக்கும் சூழல்தான் அங்கு நிலவுகிறது. ஆனால், பாதிப்புகள் மீண்டும் பெரிய அளவில் பெருகாமல் இருக்க டெஸ்டிங் மிகவும் அவசியம். `தனிமைப்படுத்துவதை விடவும் டெஸ்டிங்தான் முக்கியம்' என உலக சுகாதார அமைப்பு முன்பே தெரிவித்திருந்தது. சரி அமெரிக்காவில் இப்போது டெஸ்டிங் வசதிகள் எப்படி இருக்கின்?

டெஸ்டிங்
டெஸ்டிங்
AP

மே மாதம் முடிவதற்குள் அங்கு வாரம் 20 லட்சம் டெஸ்ட்கள் எடுக்கும் அளவுக்கு டெஸ்டிங் வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 1,45,000 பேரை டெஸ்ட் செய்திருக்கிறது அமெரிக்கா. இதுபோக அதிகளவில் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களும் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் நாள் ஒன்றுக்குச் செய்யப்படும் டெஸ்ட்களின் எண்ணிக்கை என்பது 30,000-ஐ தொடப்போகிறது. ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களும் இப்போதுதான் வந்துசேர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாகவே நான்கு லட்சம் டெஸ்ட்கள்தான் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தனை டெஸ்ட்கள் எடுக்கும் அமெரிக்காவே தயங்கும்போது நாம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் கட்டுப்பாடுகளைச் சட்டெனத் தளர்த்துகிறோமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. தமிழகம் இதைப் புரிந்துகொண்டு ஏற்கெனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடனே மே 3 வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறது

``மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்!" எனச் சமீபத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் தெரிவித்திருந்தார். அதுவரை எந்த நாடுமே காத்திருக்கப்போவது இல்லை. எந்தப் பொருளாதாரமும் அதை அனுமதிக்கப்போவதும் இல்லை. ஆனால், கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு முன், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாய்ப் போக வாய்ப்பிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு