Published:Updated:

ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? - ஒரு வழிகாட்டுதல்!

ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிடலாமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிரேக்க மொழியான தைரோஸ் (Thyreos) என்ற சொல்லில் இருந்து பிறந்த வார்த்தைதான் தைராய்டு. தமிழில் இதற்கு 'கேடயம்' என்று பொருள். தைராய்டு ஹார்மோனும் ஒருவகையில் உடல் செயல்பாட்டுக்கான கேடயமே. இந்த ஹார்மோன் சுரப்பு, சீராக இருக்கும்வரை உடலில் வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் அவை சமச்சீரற்று போகும்பட்சத்தில், உடல் இயக்கம் ஒவ்வொன்றாகப் பாதிப்படையும்.

தைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும்.

முக்கியமாக, உடலில் செரிமானப் பணிகள் மெதுவாக நடக்கும். தொடர்ந்து, உணவிலிருந்து ஊட்டச்சத்துகள் உட்கிரகிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். அதன்பிறகு உடல் பருமன், மலச்சிக்கல், சரும வறட்சி, முடி உதிர்வு, இளநரை, கழுத்துப் பகுதி வீக்கமடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

"தைராய்டு பிரச்னைக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை மருந்து, மாத்திரைகள் மூலம் ஹார்மோன் சுரப்பு சமச்சீர் நிலைக்குக் கொண்டுவரப்படும். ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த உணவுமுறை மாற்றங்கள் அவசியம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத். தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் பின்பற்றவேண்டிய உணவுப்பழக்கங்கள், தவிர்க்கவேண்டியவை என்னென்ன என்று அவர் பரிந்துரைக்கிறார்.

தைராய்டு
தைராய்டு

"கழுத்தின் கீழ் பகுதியில், பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும். இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் உடல் பருமனில் தொடங்கி மூட்டு வலி வரை பல்வேறு வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படும். பெண்களாக இருக்கும்பட்சத்தில் மாதவிடாய்க் கோளாறுகள் அதிகரிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை உடலில் எப்போது ஏற்படும் என்பதைப் பொறுத்து, மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள `ஹைப்போதாலமஸ்’ பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கும். அதன்படிதான் ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன் மிக குறைவாகச் சுரந்தால், அது 'ஹைப்போ தைராய்டிசம்' (Hypo Thyroidism) எனப்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்களைப் பார்ப்போம்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

* ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஏற்கெனவே செரிமானம் மெதுவாகத்தான் நடக்குமென்பதால், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய உட்கொள்ளவும்.

* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மெதுவாக இருக்கும். அதனால் உடல் இயக்கம் குறைவாக இருக்கும். சர்க்கரைச் சத்து நிறைந்த உணவுப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக நாள்கள் சேமித்துவைத்த உணவுகள், வறுத்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் என்பதால், அவற்றை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.

உடல் பருமனாக உள்ள தைராய்டு நோயாளிகள், தாமதிக்காமல் குளூட்டன் பரிசோதனை மற்றும் குடல் பரிசோதனை செய்யவேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத்

* தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கும் திறனுடைய, `ஐசோஃப்ளாவோன்ஸ்' (Isoflavones) எனப்படும் சோயா வகை உணவுப் பொருள்களை ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும். உதாரணமாக பீன்ஸ், டோஃபோ, சோயா மில்க் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

* தைராய்டு நோயாளிகள், குளூட்டன் சத்து அதிகமுள்ள பிரெட், கோதுமை, பிஸ்கெட் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். உடல் பருமனாக உள்ள தைராய்டு நோயாளிகள், தாமதிக்காமல் குளூட்டன் பரிசோதனை மற்றும் குடல் பரிசோதனை செய்யவேண்டும். இவர்கள் குடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குளூட்டன் பிரச்னை இருப்பது தெரியபவர்கள், ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் முறையாக ஆலோசனைப் பெற்றுக் கொண்ட பிறகு உங்களின் உணவுமுறைகளை அமைத்துக் கொள்ளவும்.

தைராய்டு
தைராய்டு
Vikatan

* தைராய்டு மாத்திரை எடுத்தபிறகு, 45 நிமிடங்களுக்கு எந்த உணவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். சாப்பிட்டு முடித்ததும் ஸ்ட்ராங்க் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதைக் கைவிடவும்.

அடிப்படையில் தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு, சத்துகள் சரியாக உட்கிரகிப்பதில் சிக்கல் இருக்கும். எனவே எந்தவொரு சத்தையும் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

* தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த க்ரூசிஃபெரஸ் (Cruciferous) காய்கறிகளான முட்டைகோஸ், காலிஃப்ளவர், புரோக்கோலி போன்றவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு இந்தக் காய்கறிகள் மிகவும் பிடிக்குமென்றால், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பச்சை நிறக் காய்கறிகள், கீரைகளுடன் நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம்.

தைராய்டு
தைராய்டு

* வைட்டமின்கள், செலினியம், அயோடின், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அடிப்படையில் தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு, சத்துகள் சரியாக உட்கிரகிப்பதில் சிக்கல் இருக்கும். எனவே எந்தவொரு சத்தையும் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.

உலக அளவில் 8 பெண்களில் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகச் சொல்கிறது தி டயாபடிஸ் கவுன்சிலின் ஆய்வு முடிவு. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெண்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் பெண்களில் எத்தனைபேருக்கு தைராய்டு குறித்த விழிப்புணர்வு இருக்கிறது என்பது இன்றளவும் கேள்விக்குறியே.

Vikatan

இந்தியாவைப் பொறுத்தவரை தனக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறது என்பது தெரியாமலே 20 சதவிகித பெண்கள் இருக்கின்றனர். இத்தகவலை டெல்லியைச் சேர்ந்த செயற்கை கருத்தரித்தல் மைய வல்லுநர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, தசை மற்றும் மூட்டு வலிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், நாள்பட்ட தூக்கமின்மை போன்றவை தைராய்டு பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகளாகும். எனவே, இந்த அறிகுறிகள் காணப்படும் பெண்கள், தாமதிக்காமல் தைராய்டு சுரப்பிக்கான பரிசோதனை (TSH - Thyroid stimulating hormone), மார்பகத்துக்கான 'எக்ஸ் ரே', டி-4 (Thyroxin test) பரிசோதனை ஆகியவற்றை அவசியம் செய்து பார்க்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு