Published:Updated:

கருவின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்கள்... இத்தாலி ஆய்வு சொல்வது என்ன?

அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நுண் நெகிழித்துகள் தாயின் கர்ப்பத்தில் குழந்தையையும் தாயையும் இணைக்கும் பாலமாகவும் குழந்தையைக் காக்கும் சுவராகவும் விளங்கும் நஞ்சுக்கொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டில் நுண்நெகிழிப் பொருள்கள் (Microplastics) கண்டுபிடிக்கப் பட்டபோது உலகம் வியந்தது. ஆழ்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்தது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்னும் அளவுக்கு உலகம் எங்கும் வியாபித்துப் பரவியுள்ள நுண்துகள்கள் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை அறிந்தால் பேரதிர்ச்சி கொள்வோம்.

Micro plastic
Micro plastic

அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இந்த நுண் நெகிழித்துகள் தாயின் கர்ப்பத்தில் குழந்தையையும் தாயையும் இணைக்கும் பாலமாகவும் குழந்தையைக் காக்கும் சுவராகவும் விளங்கும் நஞ்சுக்கொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் 6 கர்ப்பிணிகளிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டு, அவர்களுடைய பழக்க வழக்கம், உடை, உணவுப் பொருள்கள் என்று பலவற்றையும் பதிவுசெய்து கர்ப்ப காலம் முழுவதும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பிரசவ காலத்தில் மருத்துவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து பருத்திக் கையுறைகளை பயன்படுத்தினர். பிரசவத்துக்குப் பின்னர், மைக்ரோஸ்கோப் வழியாக நஞ்சுக்கொடி ஆராய்ச்சி செய்யப்பட்டது.

Baby
Baby
Photo by Aditya Romansa on Unsplash

அதில் திடுக்கிடும் உண்மையாக 10 முதல் 12 வண்ணம் ஊட்டப்பட்ட பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நஞ்சுக்கொடியின் பக்கத்திலும், குழந்தையின் பக்கத்திலும், பனிக்குடத்தின் சவ்விலும் அவை இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலகிலேயே பாதுகாப்பான இடம் ஒரு குழந்தைக்கு தாயின் கருவறை என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது பிளாஸ்டிக், கருவறையையும் விட்டு வைக்கவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது. நம் வருங்கால தலைமுறைக்கு நாம் நியாயம் செய்து செய்துகொண்டு இருக்கிறோமா என்ற கேள்விக்குறி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன?

அளவில் ஐந்து மில்லி மீட்டருக்குக் குறைவான பிளாஸ்டிக் துகள்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நானோ பிளாஸ்டிக் என்பது இதைவிட சிறிய பிளாஸ்டிக் துகள்கள். நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் கலந்து அந்த மண்ணில் வளரும் தாவரத்திலும் ஊடுருவி அவற்றின் காய்கறிகளையும் பழங்களையும் நாம் சாப்பிடும்போது நம் உடலில் கலந்துவிடுகிறது. நம் ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.

பிளாஸ்டிக் எரிக்கப்பட்டு அதை நாம் சுவாசிக்கும்போது அந்த நச்சுப் புகை நுரையீரல் சவ்வையும் தாண்டி ரத்தத்தில் கலந்து உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் சேர்ந்துவிடுகிறது. மண்ணில் கலக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் குடிக்கும் நீரையும் மாசுபடுத்துகின்றன. குடிக்கும் நீரின் மூலமாகவும் அது உடலில் கலக்கிறது. நாம் உபயோகப்படுத்தும் பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருள்கள் மற்றும் பேக்கிங் செய்யப்படும் பொருள்கள் மூலமாகவும் உடலில் சேர்கிறது.

எப்படிப் பாதிக்கிறது?

இப்படிப் பல வழிகளில் நம் உடலில் சேரும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் அளவில் சிறியதாக இருப்பதால் எல்லா விதமான பாதுகாப்பு சுவர்களையும் கடந்து நம் ரத்தத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இந்த நுண்துகள்கள் ரத்தத்தின் மூலமாக உடலின் எல்லாப் பகுதிகளையும் சென்றடைகின்றன. அப்படித்தான் கர்ப்பப்பையையும் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Dr. Jayashree Sharma
Dr. Jayashree Sharma

குழந்தைக்கு என்ன பாதிப்பு வரலாம்?

குழந்தை வயிற்றில் கருவாக உருவாகும்போதே இந்த நுண்துகள்களுடன் போராட வேண்டி இருப்பதால் எதிர்காலத்தில் அதனுடைய எதிர்ப்பு சக்தி பாதிக்கும் நிலை ஏற்படலாம். குழந்தை வளர்ச்சி குறைவாகவும் எடை குறைவாகவும் பிறக்கலாம். இத்தாலியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி முடிவுகள் வந்த பிறகுதான் என்ன பாதிப்பு என்பது முழுமையாகத் தெரியும்.

தவிர்ப்பது எப்படி?

மீண்டும் நம்முடைய பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். மண்பொருள்களையும் உலோகப் பொருள்களையும் அதிகமாக உபயோகிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

ஆடைகளிலும் செயற்கை (ரேயான், நைலான்) இழைகளைக் குறைத்துவிட்டு, பட்டு, பருத்தி போன்ற இயற்கை இழைகளால் ஆன ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

Plastic Garbage
Plastic Garbage
Pixabay
பேப்பர் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்? வயிற்றுக்குள் பிளாஸ்டிக் செல்லலாம்! - ஐ.ஐ.டி ஆய்வு

எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். உபயோகத்தை முடிந்தவரை குறைத்துக்கொண்டால் மட்டுமே பிளாஸ்டிக்கின் பிடியிலிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு