Election bannerElection banner
Published:Updated:

மாதவிடாய் நாள்களில் கோவிட் தடுப்பூசி போடலாமா? - தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களும் விளக்கங்களும் #FAQ

கோவிட் -19 தடுப்பூசி
கோவிட் -19 தடுப்பூசி ( AP Photo/Rafiq Maqbool )

தடுப்பூசி பற்றி புதுப்புது சந்தேகங்கள் நாள்தோறும் எழுகின்றன. அதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் இன்டர்னல் மெடிசின் மருத்துவர் ரோஸ் ரெய்ச்சல்.

கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களா என இருந்த நிலை மாறி, இதைப் போட்டுக்கொள்ளலாமா அதைப் போட்டுக்கொள்ளலாமா என்று சாய்ஸ் கேட்கும் அளவுக்கு தடுப்பூசிகள் வந்துவிட்டன. இந்தியாவில் பொதுமக்கள் பலரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும் தடுப்பூசி பற்றி புதுப்புது சந்தேகங்கள் நாள்தோறும் எழுகின்றன. அதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் இன்டர்னல் மெடிசின் மருத்துவர் ரோஸ் ரெய்ச்சல்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Bikas Das

தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த நாள்கள் சிறந்தவை?

எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு சோர்வு, காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்படும்.

அதனால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்க நேரிடும். வார இறுதிநாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் விடுமுறை நாள்களில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அதனால் வார இறுதிநாள்களில் போட்டுக்கொள்வது நல்லது. விடுப்பு எடுப்பதில் சிரமம் இல்லாதவர்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

மாதவிடாய் நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தாராளமாகப் போட்டுக் கொள்ளலாம். ஏதேனும் ஒவ்வாமை பிரச்னை இருந்தால் மட்டும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வாமை இல்லாதவர்கள் மாதவிடாயின் எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மாதவிடாய்
மாதவிடாய்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கட்டாயம் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டுமா?

பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாதவர்களுக்கு ஓய்வுகூடத் தேவையில்லை. அவர்களின் வழக்கமான பணிகளைத் தொடரலாம். காய்ச்சல், சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே ஓய்வு தேவைப்படும்.

தடுப்பூசிக்குப் பிறகு ஆன்டிபயாடிக், வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாமா?

சில வலி நிவாரண மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை மட்டுப்படுத்தும் என்பதால் தடுப்பூசி போட்ட இரண்டு நாள்களுக்கு வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் இதுபோன்ற பிரச்னை ஏற்படாது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Altaf Qadri
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா? #ExpertExplains

இரண்டாம் தவணைக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது நல்லதா?

வெளிநாடுகளில் செய்த ஆய்வில் நான்கு வாரங்களுக்கு மேல் 8 முதல் 12 வார இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாவது சற்று அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக் காலத்தை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசிக்கு இந்தக் கால அவகாச நீட்டிப்பு பொருந்தாது. 28 நாள்கள் இடைவெளியில் கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் போட்டுக்கொள்ளலாம்.

இரண்டாம் தவணை தடுப்பூசிக்குப் பிறகுதான் தீவிர பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரி பக்கவிளைவுகள்தான் ஏற்படும். தாமதமான நோய் எதிர்ப்பு வினை (Delayed Immune Reactions) ஏற்படுவதால் சிலருக்கு முதல் தவணையின்போது பக்கவிளைவுகள் ஏற்படாமல், இரண்டாம் தவணையின்போது ஏற்படலாம்.

Fever symptoms
Fever symptoms
Pixabay
கோவிட்-19: தடுப்பூசி போட்டபின் ரத்த தானத்துக்கு 56 நாள்கள் இடைவெளி... எதற்காக?

பக்கவிளைவுகள் நபருக்கு நபர் வேறுபடுவது ஏன்?

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி என்பதால் கோவிட் அறிகுறிகள் போன்ற மிதமான பக்கவிளைவுகள் ஏற்படும். அதனால்தான் தலைவலி, காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, தாகம் ஏற்படுவது, சுவை தெரியாமல் போவது, வாய்க்கசப்பு போன்றவை ஏற்படுகின்றன. எல்லாருக்கும் எல்லா பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. ஒவ்வொருரின் உடலின் நோய் எதிர்ப்பு திறனைப் பொறுத்து பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

பக்கவிளைவுகள் எத்தனை நாள்கள் நீடிக்கும்?

பொதுவாக, இரண்டு முதல் மூன்று நாள்களில் பக்கவிளைவுகள் செட்டில் ஆகிவிடும்.

ஒவ்வாமை இருப்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

Internal medicine expert Dr.Rose
Internal medicine expert Dr.Rose

ஏற்கெனவே அனபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு மட்டும் தற்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். சற்று தாமதித்து போட்டுக்கொள்ளலாம் என்று ஆய்வுகளின் பேரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற ஒவ்வாமை பிரச்னைகள் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அதிக ரிஸ்க் இல்லை என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

தடுப்பூசி போடுவதற்கு வெறும் வயிற்றில் போகலாமா?

நன்றாகச் சாப்பிட்டுவிட்டுதான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் போடக்கூடாது. தடுப்பூசி போடும் இடத்துக்குச் சென்ற உடன் பதற்றத்தில் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அதுபோன்றவர்கள் ரத்த அழுத்தம் மட்டுப்பட்ட பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகளுக்கு காலை உணவுக்கு முன், பின் மாத்திரைகள் எடுப்பவர்கள் தடுப்பூசி போடப்போகும்போது என்ன செய்ய வேண்டும்?

வழக்கமாக எடுக்கும் மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் தவறவிடக் கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அந்த மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக்கொள்பவர்களும் வழக்கமான நேரத்துக்கு இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இன்சுலின் எடுப்பவர்களும் வெறும் வயிற்றில் தடுப்பூசி போடக்கூடாது.

insulin
insulin
Pixabay
``அரசியல்வாதிகளை நம்புவோம்; ஆனா, விஞ்ஞானிகளை நம்ப மாட்டோம்ல?'' - தடுப்பூசி குறித்து நடிகை லட்சுமி!

டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

கோவிட் தடுப்பூசியைப் பொறுத்தவரை டயாலிசிஸ் செய்பவர்களுக்கென எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. டயாலிசிஸ் செய்துகொள்ளும் தினத்தன்று தடுப்பூசி போட வேண்டாம். டயாலிசிஸ் இல்லாத நாளில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவர்களும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுதான் தடுப்பூசி போடுவதற்குச் செல்ல வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு