Published:Updated:

`சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னை ஏற்படலாம்' - ஆய்வு

ஜெ.நிவேதா

`குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாக பெண் குழந்தைகள் பூப்படைவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பும் முன்னதாகவே தொடங்கிவிடுவதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படை'

ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி

சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்தும் பிரச்னை மருத்துவ உலகில் கடந்த சில வருடங்களாகவே அதிகம் பேசப்பட்டு வரும் விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்த பிரத்யேக ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

பெண்
பெண்

ஆய்வின் முடிவில் விரைந்து பருவமடையும் பெண் குழந்தைகளுக்கு `மைக்ரேன்' (Migrane) எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக, 8 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என மொத்தம் 761 பேர் பத்து வருடங்கள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் விரைவாக பருவமடையும் குழந்தைகளுக்கு ஏற்படும் மைக்ரேன் பாதிப்பு வளரிளம் பருவத்தில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

பெண்
பெண்

தங்களின் 17 வயதுக்குள் மைக்ரேன் பாதிப்புக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 8 சதவிகிதம் என்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 23 சதவிகிதம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான வின்சென்ட் மார்டின் இதுகுறித்து பேசும்போது, ``பருவமடைதலுக்கு முன்பு வரை ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இருவருக்கும் மைக்ரேன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஒரே அளவுதான் காணப்படுகிறது. ஆனால், மாதவிடாய்க் காலம் தொடங்கிய பிறகு பெண் குழந்தைகளுக்கு மைக்ரேன் பாதிப்பு அதிகரிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

பெண்
பெண்

`விரைந்து பருவமடையும் குழந்தைகளுக்கு மைக்ரேனுக்கான வாய்ப்பு ஒவ்வொரு வருடமும் 25 சதவிகிதம் அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. `குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாக பெண் குழந்தைகள் பூப்படைவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பும் முன்னதாகவே தொடங்கிவிடுவதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படை' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.