Published:Updated:

மார்பகப் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறியலாம்... வருகிறது செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம்!

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதங்களுக்குத் தீர்வு சொல்ல வரும் கூகுளின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் குறித்த மருத்துவ அலசல்!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனையான மேமோகிராம் மூலம் (Mammogram), மருத்துவர்களைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் மார்பகப்புற்றுநோயைக் கண்டறிய முடியும் என்று அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

மேமோகிராம் பற்றியும், செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்களைப் பற்றியும் விளக்குகிறார், சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

உலகம் முழுவதும், ஆண்டுதோறும் 90 லட்சம் பேர் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றுள் 20 லட்சம் பேரை ஆட்கொண்டு இரண்டாவது இடத்தில் இருப்பது, மார்பகப் புற்றுநோய். வருடந்தோறும் சுமார் 7 லட்சம் பெண்களின் உயிர்களைக் காவுவாங்கும் நோயாக இது இருக்கிறது.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் ஏற்படும் மக்கள் 75 சதவிகிதத்திற்கு மேலும், மார்பகப் புற்றுநோயால் மரணமடையும் பெண்களில் 60 சதவிகிதத்திற்கு மேலும், வளரும் நாடுகளில்தான் இருக்கின்றனர். எனவே, வளரும் நாடுகளான இந்தியா , இலங்கை மற்றும் இந்திய தீபகற்ப நாடுகள் அனைத்திலும் வாழும் பெண்களுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது.

யாருக்கெல்லாம் மேமோகிராம் அவசியம் ?

* மேமோகிராம் என்பது நாம் எடுக்கும் எக்ஸ்ரே தான். இருப்பினும், இது அளவில் சிறிய கட்டிகளையும், கழலைகளுக்குள் பரவியிருக்கும் கட்டிகளையும், கேன்சர் கட்டியில் ஒட்டியிருக்கும் கால்சியத்தையும் (calcifications) வெள்ளைப்புள்ளியாகப் படம் பிடித்துக் காட்டும்.

* இதன்மூலம் வெளியே தென்படும் அளவுக்கு வளராத கட்டிகளையும் எளிதில் கண்டுகொள்ள முடியும். உடனே அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்.

* இந்த மேமோகிராம் பரிசோதனைமூலம் உலக அளவில் 30 சதவிகிதம் மார்பகப்புற்றுநோய் சார்ந்த மரணங்களைத் தடுக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Vikatan
மேமோகிராம்
மேமோகிராம்

* எளிதான இந்தப் பரிசோதனை, இரு மார்பகங்களுக்கும் செய்து கொள்ள ரூபாய் 1,500 முதல் 2,000 வரை செலவாகும்.

* 40 வயது முதல் 55 வயது வரை வருடம் ஒருமுறை இந்த நோயைக் கண்டறியும் பரிசோதனையைப் பெண்கள் செய்து கொள்ளலாம்.

* தங்கள் குடும்பத்தில் தாய் அல்லது சகோதரிகளுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், 40 வயதுக்கு முன்பிருந்தே மருத்துவரின் அறிவுரைப்படி மேமோகிராம் எடுக்கலாம்.

* இப்போது, கூகுள் கூறும் செயற்கை அறிவாற்றல் தொழில் நுட்பம், மேமோகிராம் சோதனையை மருத்துவர்களைவிட துல்லியமாகக் கணித்து ரிப்போர்ட் தருகிறது என்பதுதான் இதன் சிறப்பு.

எப்படிச் செயல்படுகிறது அந்தத் தொழில்நுட்பம்?

பிரிட்டனில் இந்தப் பரிசோதனையை கூகுள் செய்து, அங்குள்ள பெண்களில் 75,000 பேரின் மருத்துவர்கள் பார்த்து எழுதிய மேமோகிராம் ரிப்போர்ட்டுகளும், அமெரிக்காவைச் சேர்ந்த 15,000 பெண்களின் மேமோகிராம் ரிப்போர்ட்டுகளும் அந்தக் கணினி செயலிக்குள் புரொக்ராம் செய்யப்பட்டன.

'எந்திரன்' படத்தில் வசீகரன், பரதநாட்டியம், கராத்தே, குங்க்ஃபூ போன்றவற்றை மாட்யூல்களாக புரொக்ராம் செய்வாரே அதேபோன்று ஏற்கெனவே மருத்துவர்கள் பார்த்த மேமோகிராம் படங்கள் மற்றும் அவற்றுக்கு அவர்கள் அளித்த ரிப்போர்ட்டுகளை அந்தக் கணினி தனது மெமரியில் ஏற்றிக்கொண்டது.

இப்போது அந்தக் கணினி செயலிக்கும் ஆறு நுண்கதிரியியல் துறை (Radiologist) மருத்துவர்களுக்கும் ஒன் டு ஒன் மோதல் வைக்கப்பட்டது.

மார்பகப்புற்றுநோய் - செயற்கை தொழில்நுட்பம்
மார்பகப்புற்றுநோய் - செயற்கை தொழில்நுட்பம்

இதில் ஆறு மருத்துவர்களும் தனித்தனியாக மேமோகிராமைப் பார்த்து ரிப்போர்ட் எழுதினர். கணினியும் ரிப்போர்ட் எழுதியது. இந்தப் போட்டியில் 11.5% மனிதர்களைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் கணினி செயல்பட்டிருப்பதாக கூகுள் மார்தட்டிக்கொள்கிறது.

இன்னொரு ஆய்வில், பிரிட்டனைச் சேர்ந்த 25,000 பெண்களின் மேமோகிராமையும் அமெரிக்காவைச் சேர்ந்த 3,000 பெண்களின் மேமோகிராமையும் அந்தக் கணினிக்குக் கொடுத்து சோதித்தார்கள். இதிலும் மருத்துவர்களைவிட நன்றாகச் செயல்பட்டிருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் வெகு சீக்கிரம் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மேமோகிராம்களைப் படித்து சரியான ரிப்போர்ட் தருவதற்குத் தங்களது அல்காரிதம் உதவும் என்று கூகுள் கூறுகிறது.

இந்தச் செயற்கை அறிவுத்திறன் தொழில் நுட்பத்தில் இருக்கும் சாதகங்கள் பின்வருமாறு

இந்தியாவில் தற்போது, 2.8 லட்சம் பேருக்கு ஒரு ரேடியாலஜிஸ்ட் தான் இருக்கிறார். ஆனால், மார்பகப் புற்றுநோய் தாக்கி மரணிக்கும் பெண்கள் மிக மிக அதிகம். எனவே, இந்தக் கணினி செயலி நடைமுறைக்கு வந்தால், ரேடியாலஜிஸ்ட் இல்லாத இடத்திலும் எளிதாக மேமோகிராம்களைப் படித்து மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய முடியும். இதன்மூலம் சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பித்து மரணங்களைத் தடுக்க முடியும்.

டிஜிட்டல் முறையில் எடுக்கப்படும் மேமோகிராம்களைக் கணினியில் செலுத்தி எளிதாக சில நொடிகளில் ரிப்போர்ட் பெற்றுவிட முடியும்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
ஆஹா... கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது. இனி ரேடியாலஜிஸ்ட் ரிப்போர்ட்டுக்கு நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு நொடியில் கணினி ரிப்போர்ட் தந்துவிடும் என்று நாம் நினைத்தால் அதுதான் தவறு.

இந்தத் தொழில்நுட்பத்தின் பாதகங்களையும் பார்த்துவிடுவோம்.

தற்போது இந்த ஆய்வு, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. அந்தக் கணினி செயலியின் அல்காரிதமில் செலுத்தப்பட்ட அத்தனை மேமோகிராம்களும் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் பெண்களுடையது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மருத்துவத்துறை முழுவதும் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு, ஒவ்வொரு நபரும் பிறந்தது முதல் கடைசியாக சளி இருமலுக்கு என்ன மாத்திரை எடுத்தார் என்பது வரை அவரது மருத்துவ ரெக்கார்டுகள் அனைத்தும் ஓர் எண்ணை அடித்தால் கிடைத்துவிடும். இதேநிலை இந்தியாவில் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வரலாம்.

மேலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் பெண்களின் மார்பகப் பிரச்னைகள் கொண்டு உருவாக்கப்பட்ட அல்காரிதம், உலகின் பிற நாடுகளில்... அதுவும் இந்தியா போன்ற நாட்டில் எவ்வளவு துல்லியமாகச் செயல்படும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
காரணம் : எடை, உயரம் , பூப்பெய்தும் வயது, இடுப்பெலும்பு, மார்பகத்தின் அளவுகள், அதில் உள்ள கொழுப்பின் அளவுகள் போன்றவை உலகம் முழுவதும் இருக்கும் பெண்களுக்கு ஒன்று போல இருப்பதில்லை. இதை 'புவியியல் சார்ந்த வேறுபாடுகள்' (Geographical variations) என்கிறோம். எனவே , இந்தியத் தீபகற்பத்திற்கு எனத் தனியாக டிஜிட்டல் ரெக்கார்டு உருவானால்தான், நமக்கான பிரத்யேகமான செயலியை உருவாக்க முடியும்.

மருத்துவர்கள் ஒரு மேமோகிராமைப் பார்த்துக் கண்டறிவதும், கணினி கண்டறிவதும் ஒன்றாகாது. காரணம், ஒரு மேமோகிராம் பாசிடிவ்வாக இருக்கும்போது, கூடவே சோனோகிராம் எனும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மேமோகிராம் , மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனையாகவே இருப்பினும், அதன் துல்லியத்தன்மை என்பது 89% மட்டுமே. அதாவது, நோய் இருப்பவர்களில் 89% பேரை மட்டுமே அது உண்மையாக நோய் இருப்பவர்களாக அறிவிக்கும்.

இந்தியாவில், தற்போது 2.8 லட்சம் பேருக்கு ஒரு ரேடியாலஜிஸ்ட் தான் இருக்கிறார்.
பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஆனால், அதனுடன் சோனோகிராமும் சேர்த்துச் செய்யப்படும்போது, அதன் துல்லியத்தன்மை இன்னும் கூடுகிறது. மேலும், Triple assessment test மூலம் மேமோகிராம், மார்பக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கட்டியில் இருந்து ஊசி மூலம் எடுக்கப்படும் திரவத்தைப் பரிசோதனை செய்து, எந்த வகைக் கட்டி என்று கண்டறிவது போன்றவற்றையும் செய்ய முடியும். இதை Fine Needle Aspiration Cytology (FNAC) என்கிறோம்.

மேற்சொன்ன மூன்றையும் ஒன்றாகச் செய்யும்போது, துல்லியத்தன்மை 99% ஆகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்சொன்ன மூன்று பரிசோதனைகளில், மேமோகிராமை டெக்னீஷியன் உதவியுடன் எடுத்துவிட முடியும். அதற்கு மருத்துவர் தேவையில்லை. ஆனால், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் FNAC ஆகிய இரண்டுக்கும் மருத்துவரின் பங்கு அளப்பரியது.

நோய் இருப்பவர்களில் 89% பேரை மட்டுமே, இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், நோயாளி என அறிவிக்கும்!

இந்த செயற்கை அறிவாற்றல் திறன் தொழில்நுட்பம், பாசிட்டிவ் என்று கண்டறிந்துவிட்டதாலேயே மக்கள் நம்பி, அடுத்தகட்ட சிகிச்சைக்குச் செல்வார்களா என்றால் `மாட்டார்கள்’ என்பதே உண்மை.

காரணம் :

ஒரு பிரபலமான துறை சார்ந்த மருத்துவ நிபுணர் கண்டறிந்து சொல்லும் முடிவுக்கே, இரண்டாவது ஒப்பீனியன் , மூன்றாவது ஒப்பீனியன் வாங்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. அப்படியிருக்க, கணினி கொடுத்த ரிப்போர்ட்டுக்கு மீண்டும் ரேடியாலஜிஸ்ட்டிடம் செகண்ட் ஒப்பீனியன் வாங்கவே நினைப்பார்கள். இது, ரேடியாலஜிஸ்ட்டுகளுக்கு இன்னும் வேலைப்பளுவை அதிகமாக்குமே தவிர குறைக்காது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

பிரிட்டன் நாட்டு NHS மேற்கோள்களின்படி, ஒரு மேமோகிராமை இரண்டு ரேடியாலஜிஸ்ட்டுகள் பார்த்து ரிப்போர்ட் வழங்க வேண்டும். அந்த ரிப்போர்ட்டை வழங்கும்போது, இருவரின் அறிவும் நுட்பமும் செயல்படுவதால், தவறான ரிப்போர்ட் வழங்குவது தடுக்கப்படும் என்பது NHS-ன் விளக்கம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒருவர் பார்த்தே ரிப்போர்ட் வழங்கலாம். மக்கள்தொகைக்கேற்ற ரேடியாலஜிஸ்ட்டுகள் இங்கு இல்லை என்பதே காரணம்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் - மெடிசின்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் - மெடிசின்.

கூகுள் நிறுவனம் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம், ஒரு மருத்துவர் மட்டும் கொடுக்கும் மேமோகிராம் ரிப்போர்ட்டைவிட மேன்மையானது (superior) என்றும், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தரும் ரிப்போர்ட்டை விட எந்தவிதத்திலும் குறைவானதன்று (Non inferior) என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா போன்ற மக்கள் தொகை மிக அதிகமுள்ள நாட்டில், இந்தச் செயலி நிச்சயம் பயன் தரும் என்றே நம்புகிறேன்.

இந்த செயற்கை அறிவுத்திறன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமானால், அதற்கு முன் நாம் ஒவ்வோர் இந்தியக்குடிமகனின் மருத்துவம் சார்ந்த ரிப்போர்ட்டுகளையும் டிஜிட்டல் மயமாக்கி, முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இது, ரேடியாலஜிஸ்ட்களுக்கு இன்னும் வேலைப்பளுவை அதிகமாக்குமே தவிர குறைக்காது.
பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பின்னர், சில வருடங்கள் சேகரித்த சில லட்சம் இந்தியப் பெண்களின் மேமோகிராம் ரிப்போர்ட்டுகளை அந்தக் கணினிக்குள் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கென பிரத்யேகமான செயலி உருவாகும்.

அந்தக் கணினி சோதிக்கும் மேமோகிராம்களில் பாசிடிவ் என்று கண்டறிந்தவற்றை ரேடியாலஜிஸ்ட்டுகள் அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC-க்கு உட்படுத்தி, புற்றுநோய் இருக்கிறது என்று தீர்க்கமான முடிவுக்கு வரலாம்.

`அறிகுறிகள் தெரிவதற்கு 5 ஆண்டுகள் முன்பாகவே..!’ - நம்பிக்கையூட்டும் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி

அதுவரை மேற்கத்திய உலகில் அடியெடுத்துவைத்துள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பை உற்றுநோக்குவோம். நமது நாட்டின் மருத்துவத்துறையிலும் செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம் நுழைந்து, வெற்றிநடை போடும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

காலம் பதில் சொல்லும். மாற்றம் ஒன்றே மாறாதது!