Published:Updated:

இயற்கை முறை பிரசவம், நீர்த்தொட்டி பிரசவம்... மருத்துவம் என்ன சொல்கிறது?

தண்ணீர்த் தொட்டி பிரசவ முறை
தண்ணீர்த் தொட்டி பிரசவ முறை

நீர்த் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் கர்ப்பிணிக்கும் மயக்க ஊசிகளோ, மருந்துகளோ செலுத்தப்படாது. அந்தப் பெண்ணுக்குப் பிரசவிக்க எந்த பொசிஷன் வசதியாக இருக்குமோ அதற்கு ஏற்ப தொட்டிக்குள் அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ குழந்தையைப் பிரசவிக்கலாம்.

டிகர் நகுலின் மனைவி ஸ்ருதி தண்ணீர்த் தொட்டிக்குள் பிரசவிக்கும் `வாட்டர் பர்த்’ முறையில் அண்மையில் குழந்தை பெற்றுக்கொண்டார். நீர்த்தொட்டிக்குள் ஸ்ருதி பிரசவ வலியுடன் நகுலின் கைகளை இறுகப் பற்றியபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த பலருக்கு `தண்ணீர்த் தொட்டிக்குள் பிரசவமா! அது எப்படி சாத்தியம்?' என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.

நகுல்-ஸ்ருதி
நகுல்-ஸ்ருதி

சுகப்பிரசவமும் (Normal delivery), சிசேரியன் பிரசவமும் (Cesarean delivery) மட்டுமே குழந்தையைப் பிரசவிப்பதற்கான வழிகள் அல்ல. இவற்றைப்போலத் நீர்த்தொட்டி பிரசவம் (Water birth) மற்றும் இயற்கை முறை பிரசவம் (Natural delivery) என்ற இரு வழிகளும் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இவை மேற்கொள்ளப்படுவதில்லை. அதனால் இவை நம்மில் பெரும்பாலானோருக்குப் பரிச்சயமாகாமல் இருக்கலாம்.

``நீர்த்தொட்டி பிரசவமுறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடையே இருந்த வழக்கம்தான். கிராமங்களில் கர்ப்பிணிகளின் வயிற்றில், மிதமான சூட்டில் உள்ள நீரைத் தொட்டு ஒத்தடம் கொடுத்து பிரசவிக்க வைப்பார்கள். இதனால், கர்ப்பிணிகளுக்கு வலி குறையும், பிரசவமும் எளிதாகும். இதைத்தான் வெளிநாடுகளில் `வாட்டர் பர்த்’ என்ற பெயரில் செய்து வருகின்றனர்" என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம். இவர் கடந்த சிலர் வருடங்களாகத் தனது மருத்துவமனையில் நீர்த்தொட்டி பிரசவங்களைக் கையாண்டு வருகிறார். அவரிடம் பேசினோம்.

மருத்துவர் கவிதா கௌதம்
மருத்துவர் கவிதா கௌதம்

``தற்போதைய காலகட்டத்தில் பிரசவம் என்றாலே அது சிசேரியன் பிரசவமாகத்தான் உள்ளது. நிகழும் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளது. பலர் தாங்களே விரும்பி சிசேரியன் பிரசவத்தைத் தேர்வு செய்கின்றனர். சில குடும்பங்களில், கருவுற்ற முதல் நாளிலிருந்து அதிகப்படியான கவனம் எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் கர்ப்பிணிகளை எந்த வேலையும் செய்ய விடாமல் ஒரே இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றர். `வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிடு!' என்று மூன்று வேளை சாப்பிடும் பெண்ணை ஆறுவேளைகள் சாப்பிட வைக்கின்றனர். இதனால் கருவுறும்போது 50 கிலோ உடல் எடையில் இருக்கும் பெண் பிரசவிக்கும் நேரத்தில் 75 - 80 கிலோவரை சென்றுவிடுகிறார். இதனால் சுகப்பிரசவம் என்பது சிக்கலாகிப்போகிறது.

12 மணிநேர பிரசவ வலி, வாட்டர் பர்த், முதல் மாத கொண்டாட்டம்! - ஸ்ருதி நகுல் ஷேரிங்ஸ்

சாதாரணமாக ஒரு பெண் சுகப்பிரசவம் மூலம் பிரசவிக்க அதிகபட்சமாக 15 - 18 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். மக்கள்தொகை அதிகமுள்ள இங்கு ஒரு மருத்துவர் ஒரு கர்ப்பிணிக்காக 15 மணிநேரம் செலவிடுவதென்பது சாத்தியமில்லை. தவிர சுகப்பிரசவம் செய்யும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விபரீதம் ஏற்பட்டால் அது மருத்துவரையும் பாதிக்கும். இதன் காரணமாகப் பெரும்பாலான மருத்துவர்களே சிசேரியன் பிரசவ முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் வரும்காலத்தில் சுகப்பிரசவம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

Pregnant Woman
Pregnant Woman
For Representation Only

ஒரு பெண் கருவுற்றதில் தொடங்கி குழந்தையைப் பிரசவிக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட நாள்களே `பிரசவ காலம்'. இது ஒவ்வொரு பெண்ணும் முழுமையாக உணர்ந்து அனுபவிக்க வேண்டிய காலம். தங்கள் பிரசவ காலத்தை முழுமையாக அனுபவித்து உணர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கென மேற்கொள்ளப்படுவதுதான் நீர்த் தொட்டி பிரசவமும் இயற்கை முறை பிரசவமும்.

இதில் வாட்டர் பர்த் பிரசவ முறையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கர்ப்பிணியை அமரச் செய்வோம். இதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டி டெல்லியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. வெதுவெதுப்பான நீர், வலியைக் கொஞ்சம் குறைவாக உணர வைக்கிறது.

தண்ணீர்த் தொட்டி பிரசவ முறை
தண்ணீர்த் தொட்டி பிரசவ முறை

நீர்த் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் கர்ப்பிணிக்கும் மயக்க ஊசிகளோ, மருந்துகளோ செலுத்தப்படாது. அந்தப் பெண்ணுக்குப் பிரசவிக்க எந்த பொசிஷன் வசதியாக இருக்குமோ அதற்கு ஏற்ப தொட்டிக்குள் அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ குழந்தையைப் பிரசவிக்கலாம். பிரசவிக்கும் நேரத்தில் அருகில் அவரின் கணவரோ, அம்மாவோ அல்லது உறவினர் யாரேனும் ஒருவரோ இருக்கலாம்.

இயற்கை முறை பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பெண்ணை, வலி வந்தவுடன் படுக்கையில் அவருக்கு வசதியான பொசிஷனில் அமரவோ, படுக்கவோ வைத்து குழந்தையைப் பிரசவிக்க வைப்போம். செயற்கையான எந்தவொரு பிரசவ கருவிகளும் பயன்படுத்தப்படாது. இந்த இரண்டு முறைகளிலும் பிரசவிக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி வெட்டப்பட்டு குழந்தைக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் போடப்படும்.

தண்ணீர் தொட்டி பிரசவ முறை
தண்ணீர் தொட்டி பிரசவ முறை

ஒரு பெண் வாட்டர் பர்த் அல்லது இயற்கை முறை பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார் என்றால், முதலில் அவரின் உடல்நிலை பரிசோதிக்கப்படும். பின்பு அவருக்கு இந்தப் பிரசவ முறை ஏற்றதா என்று பரிசீலிக்கப்படும். ஏற்றது என்றால், இதற்கான வழிகாட்டுதல்களும் எளிமையான உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பிரசவத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வலி குறித்த சரியான தெளிவும் ஏற்படுத்தப்படும்.

கருவுற்ற முதல் மாதத்திலிருந்தே தன்னை தயார்ப்படுத்திக்கொள்பவர்கள் மட்டுமே இந்த இரண்டு முறைகளில் குழந்தை பிரசவிக்க முடியும்" என்கிறார் மருத்துவர் கவிதா கௌதம்.

இயற்கை முறை பிரசவத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்?

இயற்கை முறை பிரசவமும் சுகப்பிரசவமும் ஏறக்குறைய ஒன்றுதான். சுகப்பிரசவத்தில் வலி குறைவதற்காகவும், பிறப்புறுப்பு எளிதில் திறந்து பிரசவம் சுலபமாவதற்கும் ஊசி, ஜெல் போன்றவை பயன்படுத்தப்படும். ஆனால், இயற்கை முறை பிரசவம் அப்படியல்ல. இதில் எந்தவித ஊசி, மருந்துகளும் பயன்படுத்தப்படாது. மருத்துவமனையில் தங்கியிருக்கும் கர்ப்பிணிக்கு இயற்கையாகவே வலி ஏற்பட்டு, குழந்தை வெளிவரும் நிலையில் பிரசவம் பார்க்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு