Published:Updated:

ஒரே நேரத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா - கோவிட்-19 தொற்றுகள்... அதிகரிக்கும் எண்ணிக்கை!

H1N1 இன்ஃப்ளூயன்சா

H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட், இரண்டுமே நுரையீரல் தொற்றுதான். பரவும் முறைகளும் ஒரே வகையில்தான் இருக்கும். இரண்டுமே அதிகம் பரவும் தன்மை கொண்ட வைரஸ் தொற்றுகள்தான்.

ஒரே நேரத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா - கோவிட்-19 தொற்றுகள்... அதிகரிக்கும் எண்ணிக்கை!

H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட், இரண்டுமே நுரையீரல் தொற்றுதான். பரவும் முறைகளும் ஒரே வகையில்தான் இருக்கும். இரண்டுமே அதிகம் பரவும் தன்மை கொண்ட வைரஸ் தொற்றுகள்தான்.

Published:Updated:
H1N1 இன்ஃப்ளூயன்சா

இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டிய கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முடிவு ஏற்படுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே, பருவகால காய்ச்சலான H1N1 இன்ஃப்ளூயன்ஸா (பன்றிக் காய்ச்சல்) பரவல் அதிகரித்துள்ளது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் பரிசோதனைக்கான வார்டுகளும் அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளன.

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்
H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்

இந்நிலையில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு நோய்ப் பரவலின் நிலை என்ன, இந்த இரண்டிலிருந்தும் தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்...

``H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு தொற்றுகளாலும் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு H1N1 தொற்று மட்டும் காணப்படுகிறது.

ஒப்பீட்டு அளவில் பார்த்தால் இன்ஃப்ளூயன்ஸா தான் அதிகமாகப் பரவி வருகிறது. கோவிட் பரவலும் இருந்து வருகிறது. ஆனால் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் கோவிட் பரிசோதனைக்கு யாரும் முன்வருவதில்லை.

இன்ஃப்ளூயன்ஸாவை பொறுத்தவரை Category A, Category B, Category C என மூன்று வகையாகப் பிரித்து அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.

சளி, இருமல்
சளி, இருமல்

Category 1 - லேசான சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அறிகுறிகளுக்கு சிகிச்சை அளித்தால் போதுமானது. இதற்கு H1N1 பரிசோதனை எடுக்கத் தேவையில்லை. Category B - சளி, காய்ச்சல் உள்ளிட்ட மிதமான அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்தால் போதுமானது.

கர்ப்பிணிகள், ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், வயதானவர்கள் என அந்த நபர் ஆபத்தானவர்கள் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கு டாமிஃப்ளு (Tamiflu) மாத்திரை கொடுத்து சிகிச்சையளிக்கலாம். இவர்களுக்கும் பரிசோதனை தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி
கர்ப்பிணி

Category C - மிகத் தீவிரமான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு டாமிஃப்ளு (Tamiflu) மாத்திரை கொடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்து முறையான சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கோவிட் தொற்றைப் பொறுத்தவரை, வாசனை, சுவை இழந்தவர்கள், கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள், 3-4 மாத இடைவெளியில் கோவிட் தொற்று பாதித்தவர்கள், வீட்டில் யாருக்கேனும் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் போன்றோருக்கு பரிசோதனை செய்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்
தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்

ஏன் H1N1 அதிகம் பரவுகிறது?

கோவிட் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அதிகம் வெளியில் புழங்காமல் இருந்ததால் அந்த வைரஸ் பாதித்து அதனால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்வில்லை. மேலும் மாஸ்க் அணிதல், அடிக்கடி கை கழுவும் பழக்கம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற விஷயங்கள் குறைந்துவிட்டதால் இந்த வைரஸும் எளிதாகத் தாக்கிவிடுகிறது. இதுதவிர, கோவிட் தொற்றால் பாதித்து நிரந்தரமாக நுரையீரல் சேதமடைந்தவர்கள், இன்னும் நுரையீரல் பாதிப்பிலிருந்து மீளாதவர்கள், கோவிட் பாதிப்பால் நோய் எதிர்ப்பு ஆற்றலை இழந்தவர்களுக்கும் இந்தத் தொற்று எளிதாகத் தாக்கிவிடுகிறது. குழந்தைகளை இந்தத் தொற்று அதிகம் பாதிப்பதால், பள்ளிகளில் குழந்தைகளிடம் பரவல் அதிகம் காணப்படுகிறது.

யாருக்கெல்லாம் தடுப்பூசி தேவை?

H1N1 தொற்றைப் பொறுத்தவரை அந்தத் தொற்றால் பாதித்தவர்களும், பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். H1N1 தொற்றைப் பொறுத்தவரை 4 திரிபுகள் உள்ளன. ஒரு திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் மீதமுள்ள மூன்று திரிபுகள் பாதிக்காமல் தடுக்கலாம்.

 கோவிட்-19
கோவிட்-19

இல்லையென்றால் ஒரு திரிபால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் அடுத்த திரிபு வைரஸ் தாக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் தொற்று குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்பதால் அவர்கள் இதனைத் தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டவணையில் ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. 5 -18 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர, கர்ப்பிணிகள், கருத்தரிக்கும் முயற்சியில் இருப்பவர்கள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்களும் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது நல்லது.

தடுப்பூசி
தடுப்பூசி

H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட், இரண்டுமே நுரையீரல் தொற்றுதான். பரவும் முறைகளும் ஒரே வகையில்தான் இருக்கும். இரண்டுமே அதிகம் பரவும் தன்மை கொண்ட வைரஸ் தொற்றுகள்தான். இரண்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுமே 99% பெரிய பாதிப்பில்லாமல் குணமடைந்துவிடுவார்கள். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டும் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டிலிருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும்.