கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் மாறி, புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும் சிலருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. இது சமூகப் பரவலாக இருக்குமோ என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டாலும், இன்னும் சமூகப் பரவல் நிலை ஏற்படவில்லை என்று தமிழக அரசு மறுத்து வருகிறது.

அதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ( ICMR) தான் உறுதிசெய்ய வேண்டும் என்றும் சொல்கிறது. இந்தச் சர்ச்சை பல நாள்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இப்போது நம் நாட்டில் கொரோனா தொற்று, சமூகப் பரவல் நிலையை எட்டி உள்ளதா என்பதை ஆராய்வதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முடிவெடுத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மக்களின் ரத்த மாதிரிகளில் எதிர்ப் புரதத்திற்கான( Antibody) பரிசோதனை எலிசா முறையில் நடத்தப்பட்டு, சமூகத்தில் நோய்த் தாக்கத்தின் நிலையை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எலிசா பரிசோதனையின் மூலம், கொரோனா தொற்றுக்கான எதிர்ப்புரதம் உருவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்.
இந்திய அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வில், 21 மாநிலங்களில் உள்ள 69 நகரங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முடிவெடுத்துள்ளது. இதில் சென்னை, கோவை, திருவண்ணாமலையும் அடங்கும்.
சென்னையில் ஜூலை 20 முதல் தொடங்கப்படும் இந்த ஆய்வில் 50,000 பேர் உட்படுத்தப்பட உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன், சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ளும்.
நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், காவல்துறையினர், விமானத்துறை ஊழியர்கள், வேற்று மாநிலத் தொழிலாளர்கள், ஊடகத்துறையினர், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அஞ்சல் மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் ஆய்வு நடத்தப்படும். அதன் மூலம் , கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முடிவு எடுத்துள்ளது.