Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: உலர்திராட்சை

உலர்திராட்சை
பிரீமியம் ஸ்டோரி
News
உலர்திராட்சை

- உன்னத ஆரோக்கியத்தை வாரி வழங்கும் ஜீவன்!

சுருங்கிய தேகம், மெத்தென்ற பதம், அளவில்லா ஊட்டச் சத்துகளைச் சுமந்துகொண்டிருக்கும் அழகான சுருக்குப்பை... உலர்திராட்சை. ‘கிஸ்மிஸ்’ எனும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் உலர்திராட்சை, மருத்துவ குணங்களை வாரி வழங்குவதில் வள்ளல்!

சூரியஒளியிலோ, இயந்திரங்களின் உதவியுடனோ உலர்த்தப்படும் உலர்திராட்சை, உலகம் முழுவதும் பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப் படுகிறது... நொறுவையாக, சமையலுக்கான அடிப்படைப் பொருளாக, இனிப்பு வகைகளில் கலவைப் பொருளாக எனப் பல காரணங்களுக்காக!

பழங்கால அகழ்வாராய்ச்சிப் படிமங்களில் உலர்திராட்சை மற்றும் பல உலர் பழங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் டயட்டில் உலர்திராட்சைக்குத்தான் முதலிடம். சதைப்பற்றுள்ள திராட்சைகளை பாலைவனச் சூட்டில் வற்றவைத்து, உலர்திராட்சைகளாகத் தயாரிக்கும் முறையை எகிப்தியர் புராதன காலங்களிலேயே பின்பற்றியிருக்கிறார்கள். இப்போது உலர்திராட்சை தயாரிப்பில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா.

பண்டைய ரோமானியர் உலர்திராட்சைகளுக்கு உச்சநட்சத்திர அந்தஸ்தை வழங்கியிருந்தனர். தடகளப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு உலர்திராட்சைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன. ரோமானியரின் காலை உணவில் உலர்திராட்சை நீக்கமற இடம்பிடித்திருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உலகளாவிய உலர்பழங்களின் பயன்பாட்டில், 50 சதவிகிதத்துக்கான இடம் உலர்திராட்சைக்குத்தான். கருமையான உலர்திராட்சை, தங்க நிறத்திலான உலர்திராட்சை என இந்த இரண்டு வகைகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கின்றன. திராட்சையின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து பல்வேறு ரகங்களில் கிடைக்கின்றன. பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் காபி நிறங்களிலும் உலர்திராட்சைகள் கிடைக்கின்றன.

அஞ்சறைப் பெட்டி
அஞ்சறைப் பெட்டி

மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, இரும்புச்சத்துகளுடன் நிறைய நார்ச்சத்தையும் கொண்டிருக்கிறது உலர்திராட்சை. ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகக் கலக்கச்செய்யும்

லோ-கிளைசிமிக் மதிப்புகொண்ட உணவுப்பொருள் இது. எலும்புகளுக்கு வலிமை அளிக்கும் `போரான்' தாது உலர்திராட்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கேச வளர்ச்சிக்கும், சருமத்தின் பொலிவுக்கும் உலர்திராட்சை கைகொடுக்கும்.

செரிமான சக்தியை அதிகரிப்பதிலும் உலர்திராட்சை கில்லாடி. இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்போதெல்லாம், உலர்திராட்சையை நாடலாம். நாளும் நலம் பயக்கும் உலர்திராட்சை, குழந்தைகளுக்கான மெனுவில் நிச்சயம் இடம்பெறுவது அவசியம்.

இஞ்சிக்கு நிகரான சுக்குபோல, திராட்சைக்கு நிகரானது உலர்திராட்சை. மலமிளக்கி, உடலுரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கி ஆகிய செயல் பாடுகள் இதற்கு உண்டு. தன்னிடம் உள்ள சத்துகளை இனிப்புச் சுவை கலந்து நமக்குப் பரிசளிக்கக்கூடியது உலர்திராட்சை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோழையை அகற்றவும், இதயத்துக்கு வலிமை அளிக்கும் மருந்துப் பொருளாகவும் உலர்திராட்சையை சித்த மருத்துவம் பார்க்கிறது. வறட்டு இருமல், நா உலர்ந்து போதல், அதிக தாகம் போன்ற குறிகுணங்கள் இருப்பவர்கள் உலர்திராட்சையைத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம். சித்த மருந்துகளின் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

உலர்திராட்சையை தினசரி சாப்பிட்டு வந்த உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் ரத்த அழுத்தம் சீரடைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுக்ரோஸைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உலர்திராட்சை, இன்ஸ்டன்ட் ஆற்றலையும் அள்ளிக் கொடுக்கும். பெரும்பாலான பழ வகைகளைப் போலவே உலர்திராட்சையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் என்பதால், நோய்த் தடுப்பு ஆயுதமாகவும் உலர்திராட்சையை உட்கொள்ளலாம்.

குடல் புற்றுநோயைத் தடுக்கும் நலக்கூறுகள் உலர்திராட்சையில் பொதிந்து கிடப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உலர்திராட்சையின் உட்கூறுகள் எந்த வகையில் செயல்படுகின்றன என்ற ரீதியிலும் ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. உலர்திராட்சை சாப்பிட்டு வரும்போது, ஆரோக்கியமற்ற நொறுவைகளைச் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகளைத் தடுக்கும் திறனும் உலர்திராட்சைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரொட்டிகளுக்கு இடையில் உலர்திராட்சை, பேரீச்சை, உலர் அத்தி ஆகியவற்றை வைத்து, நெய் தடவி லேசாகச் சூடாக்கி மேலைநாடுகளில் ருசிக்கின்றனர். நெய்க்குப் பதிலாக தேன் தடவி அடுப்பில் சுடாமல் `பிரெட் - ஜாம்’ போலச் சாப்பிடும் பழக்கமும் அங்கு உண்டு.

நெய்யில் லேசாக வறுக்கும்போதே பொன்னிறமாக ஊதிப் பெரிதாகும் உலர்திராட்சை, சேர்க்கப்படும் உணவு வகைகள் சுவையுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்து வழங்கும் தனித்துவம் மிக்கவை. கேசரி, பாயசம், அல்வா போன்ற இனிப்பு வகைகளில் உலர்திராட்சையின் சேர்மானம், இனிப்புகளுக்குள் மருத்துவ குணங்களை பல மடங்கு அதிகரிக்கும். இனிப்புப் பண்டங்களில் உலர்திராட்சையைத் தேடிப் பிடித்துச் சாப்பிடும் ரசிகர்கள் அதிகம்.

குல்கந்து, உலர்திராட்சை சேர்ந்து தயாராகும் சித்த மருத்துவ லேகியங்கள், மலக்கட்டைச் சிரமமின்றி நீக்கக்கூடியவை. உலர்திராட்சையைத் தண்ணீரில் ஊறவைத்துச் சுவைத்து வந்தால், மலக்கட்டுப் பிரச்னைக்குத் தனி மருத்துவம் தேவைப்படாது. இரவு உறங்குவதற்கு முன் ஐந்தாறு உலர்திராட்சைகளைச் சுவைத்துப் பால் அருந்தினாலும், மலம் எளிதாக வெளிவரும். வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்துச் சுவைக்க, உலர்திராட்சையில் இருக்கும் சர்க்கரையை முழுமையாகப் பெற முடியும்.

எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் சில உலர் திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப் பிட்டு வரலாம். உடலுக்கு வலிமை கிடைக்கவும் இவை உதவும். பார்வைத்திறனை அதிகரிக்கும் முக்கிய பொருள்

களில் உலர்திராட்சையையும் குறிப்பிடலாம். முதியவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நிவர்த்திசெய்ய உலர்திராட்சை கைகொடுக்கும். வயிற்றுப்போக்கு உண்டாகும்போது, சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீரில் சில உலர்திராட்சைகளை ஊறவைத்துக் கொடுக்கலாம்.

எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு சார்ந்த பிரச்னைகளின் வருகையை உலர்திராட்சை தள்ளிப்போடும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நல்ல செரிமானத்தையும் உண்டாக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உலர்திராட்சை பயன்படும். எடையைச் சீராகப் பராமரிக்கவும் உலர்திராட்சைகள் உதவும்.

எந்த மணத்தையும் வெளிப்படுத்தாமல் தேமேவென இருக்கும் உலர்திராட்சையை எண்ணெயிலோ, நெய்யிலோ வறுத்தால் உண்டாகும் வாசம் ஊரையே விருந்துக்கு அழைக்கும். விருந்தாகும் மருந்தை முறையாக உபயோகிப்பது அவசியம். அதிக இனிப்புச் சுவையைக் கொடுப்பதற்காக, செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் சர்க்கரைப் பாகு சேர்க்கப்பட்ட உலர்திராட்சைகள் சந்தையில் வலம் வருகின்றன, கவனம்!

கெட்டுப்போன உலர்திராட்சைகளில் கெட்ட நாற்றம் வீசுவதுடன், சிறிது உப்பி இருப்பதையும் கவனிக்கலாம். கெட்டுப் போகும் அளவுக்கு உலர்திராட்சையை நீண்ட நாள்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்துவதே சிறந்தது. தரமான உலர்திராட்சைகள் ஃப்ரெஷ்ஷான பழங்களின் ஊட்டத்தை ஏறக்குறைய வைத்திருக்கும்.

நேரடியாகப் பெறப்படும் இயற்கைப் பொருள்களின் மருத்துவ குணத்தை பல மடங்கு மிஞ்சும் வகையில், இயற்கை கனியச் செய்யும் மாயங்களுக்கு உலர்திராட்சை நல்ல உதாரணம். தரமான திராட்சைப் பழங்களை உள்ளே இருக்கும் நீர்த்துவம் வற்றும்வரை உலர்த்திப் பெறப்படும் உலர்ந்த திராட்சை, மருத்துவப் பயன்களை வாரி வழங்கும் காமதேனு!

உலர்திராட்சை கேக்: உலர்திராட்சைதான் இதில் முதன்மை உட்பொருள். உலர்திராட்சைகளை, திராட்சை ரசத்தில் ஊறவைத்த பின் தயாரிக்கின்றனர். சாக்லேட் ரகங்கள், சாதிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு, பூசணி விதைகள் ஆகியவற்றின் துணை யுடன் `கேக்’ போல உருவாக்கப்படும் சுவைமிக்க ஊட்ட ரகம். மேலை நாடுகளில் பல்லாயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த பாரம்பர்ய சிற்றுண்டி வகை இது.

ஸ்வீடிஷ் உலர்பழ சூப் (Swedish dry fruit soup): உலர்திராட்சை, உலர்ஆப்பிள், உலர்ஆப்ரிகாட், உலர்பேரிக்காய், உலர்செர்ரி ஆகியவற்றோடு எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, லவங்கப்பட்டை, உப்பு சேர்த்துத் தண்ணீரில் ஊறவைத்து குளிர்பானம்போல பருகப்படுகிறது. இதையே கொதிக்கவைத்து சூடான பானமாகவும் பருகலாம். ஸ்காண்டிநேவியன் நாடுகளின் விருப்ப பானமாக இது இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

சாக்லேட் - உலர்திராட்சை (Raisinets): உலர்திராட்சைகளைச் சுற்றி சாக்லேட் முலாம் பூசி அழகிய வடிவங்களில், இந்த மிட்டாய் உலா வருகிறது. டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் வகைகள் இதில் மிகப் பிரபலம். பல்வேறு நாடுகளில் அதிகம் விற்பனையாகும் சாக்லேட் வகைகளில் இதுவும் ஒன்று.

உலர்திராட்சை - ஓட்ஸ் பிஸ்கட்: ஓட்ஸ் மாவு, உலர்திராட்சை, சர்க்கரை, உப்பு, முட்டை மற்றும் சில நறுமணமூட்டிகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் பிஸ்கட் இது. பிஸ்கட்டுகள் மீது உலர்திராட்சைகள் மற்றும் சீவிய சாக்லேட் துண்டுகள் பதிக்கப் பட்டும் விற்பனைக்கு வருகின்றன. அமெரிக்காவில் புகழ்பெற்ற பிஸ்கட் வகை இது. உலர்திராட்சை மற்றும் ஓட்ஸின் ஊட்டங்கள் சிற்றுண்டிக்கு பலம் சேர்க்கின்றன.