Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் அதுவே ஆரோக்கியம் ஆகுமா?

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

எது ஆரோக்கியமான உணவு?

விளம்பரங்கள் தலையில்வைத்துக் கொண்டாடும் உணவுகளை ஆரோக்கியமானவை என நம்புவோம் அல்லது குறிப்பிட்ட ஓர் உணவுக்குக் கொடுக்கப்படும் அதிக கவனத்தை வைத்து அப்படியொரு முடிவுக்கு வருவோம். டயட் சோடா, ஸ்கிம் மில்க், ஆலிவ் ஆயில் என இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இத்தகைய உணவுகளைத் தேடி ஓட ஆரம்பிப்போம். இந்த மோகத்தில் நமக்குப் பக்கத்திலேயே இருக்கும், கிடைக்கும் உண்மையான ஆரோக்கிய உணவுகளை கவனிக்கத் தவறிவிடுவோம். ஆரோக்கிய உணவுகள் என நாம் நம்பிக்கொண்டிருக்கும் சில உணவுகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் அலசுவோம்.

டயட் சோடா

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் 
அதுவே ஆரோக்கியம் ஆகுமா?

மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான கார்போனேட்டடு பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரி அளவுகள் எக்கச்சக்கம் என்பதால், அவை பருமனையோ, நீரிழிவையோ ஏற்படுத்தலாம் என்ற பயத்தில் நம்மில் பலர் அவற்றைத் தவிர்க்கிறோம். கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்குப் பதிலாக பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள். பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல. அதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டடு பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட் பானங்கள் ஆபத்தானவை.இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம்.

எப்படி ?

 • டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவைவிட பல மடங்கு அதிகம். இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் எடையும் கூடும்.

 • இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதை மாற்ற அளவும் குறையும். உடலின் ஆற்றலால் தினமும் கலோரியின் அளவும் குறையும்.

 • அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும். குறிப்பாக அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.

 • அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

 • ஆகவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். மாற்றாக, பிளாக் டீ, ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர், மோர் போன்றவற்றை அருந்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்கிம் மில்க்

சந்தையில் இரண்டு வகையான பால் நமக்கு கிடைக்கிறது. ஒன்று முழுக் கொழுப்பு உள்ளது. மற்றொன்று, குறைந்த கொழுப்புள்ள ஸ்கிம் மில்க். முழுக் கொழுப்புள்ள பாலிலிருந்து கொழுப்பை நீக்கிய பிறகு கிடைப்பது ஸ்கிம் மில்க்.

எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களும், ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் முழுக் கொழுப்புள்ள பாலுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புள்ள பசும்பாலைத் தேர்வு செய்வார்கள். ஸ்கிம் மில்க்கில் கலோரி குறைவு என்பது ஒரு நல்ல அம்சம். ஆனால், கொழுப்புள்ள பாலைவிட அது ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கும் பல காரணங்கள் உண்டு.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்
எடைக்குறைப்பு ஏ டு இஸட்

கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே கொழுப்பு குறைவான ஸ்கிம் மில்க்கையே பலரும் தேர்வு செய்கிறோம். ஆனால், கொழுப்புள்ள உணவுகள் ஒருவரை பருமன் ஆக்காது. நீங்கள் உட்கொள்கிற கொழுப்பின் தன்மையைப் பொறுத்தது அது. முழுக் கொழுப்புள்ள பாலில் 3.4 சதவிகிதமே கொழுப்பு உள்ளது. அந்தப் பாலை அருந்துவது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தந்து சீக்கிரமே பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளின் மீதான தேடலைக் குறைக்கும்.

உணவில் கொழுப்பைத் தவிர்ப்பதன் மூலம் பசி உணர்வு அதிகரிப்பதோடு மாவுச்சத்துள்ள உணவுகளின் மீதான தேடலும் அதிகரித்து உடலின் வளர்சிதைமாற்ற விகிதம் குறைந்து பருமன் கூடுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்கிம் மில்க் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், கொழுப்புள்ள பாலை அருந்துபவர்களை விடவும் அதிக எடை உள்ளவர்களாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வலுவான எலும்புகளுக்கு வைட்டமின் டி அவசியமானது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் இது. அதாவது உணவில் கொழுப்பு இருந்தால் இது சிறப்பாக உடலால் கிரகித்துக் கொள்ளப்படும். கொழுப்புள்ள பாலை அருந்துவதன் மூலம் உடலில் வைட்டமின் டி சீராக இருக்கும்.

கொழுப்புள்ள பாலில் ஆரோக்கியமான கொழுப்பு மட்டுமன்றி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிகம். இந்த ஆரோக்கியமான கொழுப்பு இதயநலனுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.

கொழுப்புள்ள பாலை தினமும் ஒரு டம்ளர் அளவுக்கு அருந்துவது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைத் தரும். பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களிடமிருந்து பெறப்படும் பாலில் ஹார்மோன்கள், ரசாயனங்கள் மற்றும் உடல் வீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகம் இருக்கும். எனவே, நாட்டு மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை உபயோகிப்பதன் மூலம் தேவையான ஊட்டங்களைப் பெறுவதோடு, தேவையற்ற ஹார்மோன்கள் உடலில் சேர்வதையும் தவிர்க்கலாம்.

- நம்மால் முடியும்!

ஆலிவ் ஆயில்... சில குறிப்புகள்!

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில்
 • உலகின் ஆகச் சிறந்த ஆரோக்கிய உணவுகளில் ஆலிவ் ஆயிலுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆரோக்கிய விரும்பிகளின் மத்தியில் ஆலிவ் ஆயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இதில் அதிகபட்ச MUFA (monounsaturated fatty acids) உண்டு. அதாவது 75%. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன்மூலம் இதய நலனைக் காக்கும்.

 • ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் அதிகம். இவை இதயநோய், ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு எதிராகப் போராடக்கூடியவை.

 • உலகம் முழுவதிலும் ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது என்று பலராலும் நம்பப்பட்டாலும் அதை உபயோகிப்பதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.

 • எக்ஸ்ட்ரா வெர்ஜின் மற்றும் வெர்ஜின் ஆலிவ் ஆயில் இரண்டும் குறைந்த அளவே பதப்படுத்தப்படுபவை என்பதால், இவற்றில் MUFA மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகம். ரீஃபைண்டு ஆயில்களைப் போலவே மற்ற ரீஃபைண்டு ஆலிவ் ஆயிலிலும் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸின் அளவும் MUFA-ன் அளவும் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் ஆரோக்கியம் எந்த வகையிலும் மேம்படாது.

 • ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் எடைக் குறைப்புக்கும் ஆலிவ் ஆயில் நல்லது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால் எந்த மேஜிக்கும் நிகழ்ந்துவிடாது. ஒரு கிராம் ஆலிவ் ஆயில் அல்லது ஏதேனும் வெஜிடபிள் ஆயிலில் 9 கிலோ கலோரி ஆற்றல் இருக்கும். ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 45 கிலோ கலோரி ஆற்றல் இருக்கும். எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு உபயோகிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 4 டீஸ்பூன் அளவு போதுமானது. இந்த அளவைத் தாண்டும்போது பருமனிலிருந்து தப்பிக்க முடியாது.

 • ஆலிவ் ஆயிலில் புகையும் தன்மை மிகக் குறைவு. அதிக அளவு சூடுபடுத்தினால் அதிலுள்ள நல்ல தன்மைகள் போய்விடும். ஆலிவ் ஆயிலின் பலன்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்றால் அதை சாலட் அல்லது இட்லிப் பொடியில் பச்சையாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. காய்கறிகளை வதக்கும்போது லேசாகச் சேர்த்துக்கொள்வதுதான் சரியானது. ஆனால், இந்திய உணவுகளைப் பெரிய தீயில் நீண்ட நேரம் வைத்து சமைத்துச் சாப்பிடுவோம். அதற்கு ஆலிவ் ஆயில் ஏற்றதல்ல. பொரிக்கவும் வறுக்கவும் இது ஏற்றதல்ல. விலையும் மிக அதிகம். எனவே, செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமானவை. இவை இந்தியச் சமையலுக்கும் ஏற்றவை... நியாயமான விலையிலும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு