சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காய்கறிகள்

முதலில் காய்கறி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். காய்கறியை மரக்கறி என்றும் சொல்வார்கள். நாம் தாவரவியல் படிக்கும்போது, பூவிலிருந்து காய், காயிலிருந்து பழம் என்று படித்திருப்போம்.

அரிசி, கோதுமை, சிறுதானியம் தொடங்கி முட்டை, கோழி வரை பலவித உணவு வகைகளைப் பற்றி அலசிவிட்டோம். காய்கறிகளைப் பற்றி இந்த வாரம் பேசுவோம். காய்கறிகள் பற்றி சரியும் தவறுமாக நம்மிடம் நிறைய நம்பிக்கைகள் உண்டு. ‘காய்கறியில் அந்தச் சத்து இருக்கிறது’, ‘இந்தச் சத்து இருக்கிறது', ‘இந்தக் காயை சாப்பிட்டால் கேன்சர் வராது’, ‘அந்தக் காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஓடிவிடும்...' என்றெல்லாம் தினம் தினம் வாட்ஸ் அப்பில் பல செய்திகளைப் பார்ப்பீர்கள். ஆனால் எவ்வளவு பேர் காய்கறிகளைத் தேவையான அளவில் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அப்படியே சாப்பிடுவோரும் சரியான காய்கறிகளை சரியான அளவில் எடுத்துக்கொள்கிறார்களா என்று பார்த்தாலும் ஏமாற்றமே. எந்தெந்தக் காய்கறிகளில் என்னென்ன சத்துகள் உள்ளன, சத்துகளை முழுமையாகப் பெற காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும், எந்தெந்தக் காய்கறிகளை எந்தெந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பார்க்கலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

முதலில் காய்கறி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். காய்கறியை மரக்கறி என்றும் சொல்வார்கள். நாம் தாவரவியல் படிக்கும்போது, பூவிலிருந்து காய், காயிலிருந்து பழம் என்று படித்திருப்போம். ஆனால் காய்கறி என்ற வார்த்தை பூவிலிருந்து பெறப்படும் காயை மட்டும் குறிப்பதல்ல. அசைவம் அல்லாது தாவரங்களில் இருந்து சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து உணவுகளையும் நம் முன்னோர்கள் காய்கறி என்ற பிரிவுக்குள் வைத்தனர். இதில் ஒரு தாவரத்தின் இலை, காய், பழம், தண்டு, வேர், விதை என அனைத்தும் அடக்கம்.

பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், கோவக்காய், முருங்கைக்காய் போன்றவை உண்மையான தாவரவியல் விளக்கப்படி காய்கள். காய் என்று பெயரிட்டு அழைத்தாலும் தக்காளி, மிளகாய் போன்றவை உண்மையில் பழங்களே. முட்டைக்கோஸ் போன்றவை வெறும் இலைகள். பூக்களிலிருந்து காலிபிளவர், வாழைப்பூ, பிராக்கோலி கிடைக்கின்றன. அவரைக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், பட்டாணி... இவையெல்லாம் விதைகள். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெங்காயம், கருணைக்கிழங்கு போன்றவை வேர்களில் கிடைப்பவை. வாழை மரத்தின் தண்டைக்கூட சமையலில் பயன்படுத்துகிறோம். இதை ஏன் ஒவ்வொன்றாக வகைப்படுத்திக் கூறுகிறேன் என்றால், ஒரு செடியின் பல்வேறு பாகங்களிலிருந்து நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அதைப் பற்றிய முழு அறிவு நமக்குத் தேவை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

அடுத்து, காய்கறிகளில் உள்ள சத்துகள் பற்றிப் பார்த்துவிடலாம். சத்துகளில் இரண்டு வகை உண்டு என ஏற்கெனவே நாம் பார்த்துள்ளோம். அதாவது உடலுக்கு எரிசக்தியைக் கொடுக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து முதலான மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்... உடல் இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் வைட்டமின், மினரல் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ். காய்கறிகளில் சத்துகள் அதிகம் இருக்கின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், கிழங்குகள் போன்ற சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றில் நமது உடல் இயங்கத் தேவையான கலோரிகள் பெரிதாக இல்லை. உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், வெறும் காய்கறிகளை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் போதிய கலோரிகள் நமக்குக் கிடைக்காது. இந்த அடிப்படையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் காய்கறிகளில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று சரிவரப் புரிந்துகொள்ளாமல், நார்மல் எடையுடன் இருக்கும் பலர் வெறும் காய்கறிகளை முழுநேர உணவாக சாப்பிடுகிறார்கள். உடல் எடை நார்மலாக இருக்கிறவர்கள் வெறும் காய்கறிகளையே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவாக எடுத்தால், கலோரிகள் போதாமல் உடல் மெலிந்துவிடுவார்கள். குழந்தைகளுக்குக்கூட சத்தான உணவு கொடுக்கிறேன் பேர்வழி என்று வெறும் காய்கறிகளை மட்டும் ஒரு வேளைக்கு அதையே முழு உணவாகக் கொடுக்கும் தாய்மார்களைப் பார்க்க முடிகிறது. இது தவறு.

அதே சமயம், உடல் பருமனுடன் இருப்பவர்களுக்குக் காய்கறிகளின் இதே குணாதிசயம் மிகுந்த பலன்களைத் தருகிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்குக் காய்கறிகளை மட்டும் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளுமாறு நானே சொல்வதுண்டு. இட்லி, தோசை, சாப்பாடு இல்லாமல் காய்கறிகளை மட்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாக எடுத்துக்கொண்டால், வயிறு நிரம்பி, பெரிதாக கலோரிகளையும் கொடுக்காமல், மாவுச்சத்தும் குறைந்து உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரே ஒரு கப் சாதம் சாப்பிட்டால் உங்களுக்கு 350 கலோரி எரிசக்தி கிடைக்கும். அதே 350 கலோரி எரிசக்தி உங்களுக்கு வெண்டைக்காய் மூலம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் 9 கப் அதாவது இரண்டே கால் கிலோ வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். அல்லது ஒன்றே முக்கால் கிலோ புடலங்காய் சாப்பிட வேண்டும். அல்லது நீங்கள் அதிக இனிப்பு என்று கருதும் கேரட் முக்கால் கிலோ, மஞ்சள் பூசணிக்காய் ஒன்றேகால் கிலோ சாப்பிட்டால்தான் இந்தக் கலோரிகளைப் பெறமுடியும். அதனால்தான், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காய்கறிகளை மிக அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. காய்கறிகளை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது உணவில் சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றைப் பாதியளவாகக் குறைத்து சரிக்குச் சரி காய்கறிகளைச் சாப்பிட்டாலும் சரி... உடல் எடை குறைக்க உதவும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

எனில், காய்கறிகளில் இருக்கும் சத்துகள்தான் என்ன?

காய்கறிகளில் முக்கியமாகக் கிடைப்பது வைட்டமின், மினரல் போன்ற நுண் சத்துகள். அத்துடன் நமது குடல் சரிவர இயங்கத் தேவையான நார்ச்சத்து. நுண்சத்துகள் நமக்குக் கலோரிகள் கொடுக்காவிட்டாலும், நமது உடலில் பல விஷயங்கள் சரியாக இயங்க உறுதுணையாக இருக்கின்றன. அதனால்தான் மனிதன் எரிசக்திக்காக தானியங்கள், அசைவம் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டு மற்ற நுண்சத்துகள் பெறக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட ஆரம்பித்தான்.

காய்கறிகளில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று தனித்தனியாகப் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரை பாட்டனி பாடம் போல ஆகிவிடும். அது தேவையும் இல்லை. பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், தக்காளிப்பழம், மிளகாய்ப்பழம் போன்றவற்றை வகைப்படுத்தினேன் அல்லவா? அவற்றில் நம் உடல் திசுக்களுக்கு வலிமை தரும் வைட்டமின் சி-யும், கண்பார்வைக்கும் தோல் ஆரோக்கியத்துக்கும் ஏதுவான வைட்டமின் ஏ-வை உடலுக்குத் தரும் கரோட்டினாய்டு என்னும் சத்தும் நிறைய இருக்கின்றன. மேலும், நமது தசைகள் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தாதுச்சத்தும் இவற்றுள் குவிந்து கிடக்கின்றன.

இலை சார்ந்த காய்கறிகளான முட்டைக்கோஸ் மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் கால்சியம், இரும்புச்சத்துடன் போலிக் ஆசிட் எனப்படும் சத்தும் உள்ளது. இந்த போலிக் ஆசிட் சத்து ரத்தசோகையைத் தடுத்து, நரம்புமண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்தச்சத்து சரிவர கிடைத்தால்தான் கருவுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி சரியாக இருக்கும். அதனால்தான் கர்ப்பிணிகளைக் கீரை வகைகள் நிறைய சாப்பிடச் சொல்கிறோம். அத்துடன் இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் வைட்டமின் சி-யும் வைட்டமின்-ஏவைத் தரும் கரோட்டினாய்டு சத்தும் நிறையவே உள்ளன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

கிழங்கு வகைகளில் நிறைய இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், கரோட்டினாய்டு சத்துகளுடன் வைட்டமின் கே எனப்படும் முக்கியச் சத்தும் உள்ளது. நமது ரத்தம் சரியான நிலையில் உறைவதற்கு இந்தச் சத்து மிகவும் முக்கியம். இந்தச் சத்து மிகவும் குறைந்தால் காயங்கள் எளிதில் ஆறாமல் ரத்தக்கசிவுகூட ஏற்படலாம்.

அவரை போன்ற விதை வகைகளில் மேற்கூறிய வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம் சத்து, மெக்னீசியம் சத்துடன் மிக முக்கியமான பி-காம்ப்ளக்ஸ் எனப்படும் ஐந்தாறு வகை முக்கிய சத்துகளும் உள்ளன. நமது இதயம், மூளை முதல் தோலின் ஆரோக்கியம் வரை பல செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பவை இந்த பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களே. விதை வகைகளில், அதிலும் முக்கியமாக முளைக்கட்டிய பயறு வகைகளில் இந்த பி-காம்ப்ளக்ஸ் சத்துகள் குவிந்து கிடக்கின்றன. மலிவான விலையில் உங்கள் சமையலறையிலேயே பி-காம்ப்ளக்ஸ் மருந்துகள் குவிந்து கிடக்கின்றன. இத்துடன் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலுச் சேர்க்கும் பாஸ்பரஸ் எனப்படும் தாதுச்சத்தும் விதை வகைகளில் நிறையவே இருக்கிறது.

ஒவ்வொரு காய்கறி வகையிலும் ஒவ்வொரு வகையான சத்து நிறைந்திருப்பதால் தினம் தினம் வேறுவேறு காய்கறிகளை மாறிமாறி எடுத்துக் கொள்வது சிறந்தது. சரிசமமாக எல்லாச் சத்துகளும் பெறும்வகையில் காய்கறிகளைத் தேர்வுசெய்ய எளிய வழிமுறை ஒன்று சொல்கிறேன். காய்கறிகளைத் தனித்தனியாகக் கணக்கிடாமல் ஒவ்வொரு வகையாக நான் கூறியபடி பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். திங்கள்கிழமை காய் மற்றும் பழவகைக் காய்கறிகள்; செவ்வாய்க்கிழமை இலை மற்றும் பூவகைக் காய்கறிகள்; புதன்கிழமை கிழங்கு வகைகள்; வியாழக்கிழமை விதை வகைகள்; வெள்ளிக்கிழமை கீரை மற்றும் தண்டு வகைகள்; சனிக்கிழமை முளைக்கட்டிய பயறு வகைகள். இவ்வாறு பிரித்துக்கொண்டால், மிக எளிதாக அனைத்துச் சத்துகளும் ஒருசேர உங்களுக்குக் கிடைத்துவிடும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

இவ்வாறு வகைப்படுத்திச் சாப்பிடுவதில் இன்னொரு பயனும் இருக்கிறது. இப்போது நிறைய குழந்தைகள்... ஏன் பெரியவர்களும்கூட ‘எனக்கு சில காய்கறிகள் மட்டும்தான் பிடிக்கும் அதையே மாற்றி மாற்றிச் சாப்பிடுகிறேன்' என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் சில காய்கறிகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதே பிரிவில் உள்ள மற்ற காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் சரி. காய்கறிகளை தினம் எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்?

இருப்பதிலேயே மிக முக்கியம் இதுதான். பாகற்காய் சாப்பிட்டால் கேன்சர் வராது; நீர்க் காய்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஓடிவிடும் என்றெல்லாம் சொல்லும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்வதே இல்லை. மக்களும் ஹோட்டல்களில் கொடுக்கும் ஒரு சிறிய கப் அளவுக்குக் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு நமக்கு சூப்பர் ஹீரோ வலிமை கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், காய்கறிகள் போட்ட சாம்பாரில் நீரை மட்டும் ஊற்றி ஃபுல் கட்டு கட்டிவிட்டு, காய்கறிகளின் சத்து முழுவதும் கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். இதுவும் தவறுதான்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரைக் கிலோ முதல் முக்கால் கிலோ காய்கறி, கீரைகளை எடுத்துக்கொண்டால்தான் நான் கூறிய பயன்கள் அனைத்தும் கிடைக்கும். உலகளாவிய உணவு வரைமுறைகள் இதைத்தான் வலியுறுத்துகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் ஒருநாளைக்கு 100-200 கிராமுக்கு மேல் காய்கறிகள் எடுத்துக்கொள்வதில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். அதனால் காய்கறிகளில் நீங்கள் எடுக்கும் அளவைக் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்.

இவைதவிர, காய்கறிகளில் மேலும் சில முக்கியச் சத்துகள் இருக்கின்றன. அதைப்பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பேசுவோம். காய்கறிகளை எப்படிச் சமைக்க வேண்டும், பச்சையாகச் சாப்பிடலாமா, பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றியெல்லாம் பயமுறுத்துகிறார்களே, சரியாக சுத்தப்படுத்துவது எப்படி, சில நோய்கள் இருந்தால் சில காய்கறிகள் சாப்பிடக் கூடாது என்று சொல்வது உண்மைதானா... இந்தக் கேள்விகளுக்கும் விடை தேடுவோம்.

- பரிமாறுவோம்

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 35 - காய்கறிகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

*****

காலை வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவது நல்லது என்கிறார்கள். அதனால் என்ன பலன்? நீராகாரத்தில் உப்பு சேர்க்கலாமா? - பாபு அரங்கசாமி

நீராகாரத்தின் சிறப்பு என்னவென்றால், எப்போதும் போல எரிசக்தியைக் கொடுக்கும் மாவுச்சத்து மட்டுமல்லாமல், புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதில் அதிகம் இருக்கும். அவை நமது ஜீரண மண்டலத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். இன்னொரு விஷயம், இதில் ஸ்டார்ச் எனப்படும் எளிதில் ஜீரணமாகக்கூடிய மாவுச்சத்து அதிகம் இருக்கும். பகலில் நல்ல உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கு இது தகுந்த உணவாக இருக்கும். உடல் உழைப்பு பெரிதாக இல்லாதவர்கள், இதைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் பாதித்த சிலருக்கு உடல் மிக மெலிந்தும் சிலருக்கு உடல் பருமன் குறையாமலும் இருப்பதன் காரணம் என்ன டாக்டர்? - ‘புன்னகை’ ரமேஷ்

சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. இன்சுலின் எதிர்ப்புத்தன்மை எனப்படும், இன்சுலின் அதிகமாக சுரந்தாலும் சரியாக உடலில் உள்ள திசுக்கள் இன்சுலின் சொல்லும் பேச்சைக் கேட்காமல் இருப்பது ஒரு வகை. இந்த வகை சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் உடல் பருமனாக இருப்பார்கள். சர்க்கரை நோயுடன் சேர்ந்து அதிக ரத்தக் கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, பெண்களுக்கு பிசிஓடி போன்ற பிரச்னைகள் இருக்கும். இவர்கள் மாவுச்சத்தைக் குறைத்து உடல் எடையைக் குறைத்தால் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை சரியாகும். இன்னொரு வகையான சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பதே மிகவும் குறைவாக இருக்கும். இந்தக் காரணத்தால் அவர்கள் உடலில் உள்ள கொழுப்புகளும் தசைகளும் எரிந்து, அதனால் உடல் மெலிந்து காணப்படுவர். இவர்கள் மாவுச்சத்தைக் குறைவாக உண்டாலும், அதற்கு இணையாக நிறைய கொழுப்புகள், புரதங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கொஞ்சம் இன்சுலின் அல்லது மருந்துகள் கட்டாயம் தேவைப்படும். அப்பொழுதுதான் இவர்கள் உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்க முடியும்.

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.