Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

சாலட்
பிரீமியம் ஸ்டோரி
சாலட்

நலம் 14

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 14

Published:Updated:
சாலட்
பிரீமியம் ஸ்டோரி
சாலட்

நிரப்ப முடியாத திடீர் வெற்றிடங்கள் கொடுக்கும் வலி எப்போதுமே கொடூரமானவை. கடந்து செல்லவும் முடியாமல், கலந்து நிற்கவும் முடியாமல் அந்த வெற்றிடங்களைச் சுமந்துகொண்டே செல்லும் வாழ்வு இப்போதைய நாற்பதுகளில் பெருகி வருகிறது. இப்படியான திடீர் வெற்றிடத்துக்கான மிக முக்கிய காரணம் மாரடைப்பு. வளர்ந்த நாடுகளில், மரணத்துக்கான முதல் காரணமாகத் திகழும் இந்த மாரடைப்பு, இப்போது இந்தியாவின் நாற்பதுகளில், ஐம்பதுகளில் கொஞ்சம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

கருவிலிருந்து சீராகத் துடிக்கும் இதயம், இறுதிமூச்சு வரை ஓயாமல் உழைக்கும் உடலின் அற்புதக் கருவி. அத்தகைய இதயத்தை நாமும் கொஞ்சம் மெனக்கெட்டுப் பராமரிக்க வேண்டுமா இல்லையா? `ஐயய்யோ' என்ற பதறலுக்கும் `அதெல்லாம் பார்த்துக்கலாம்' என்கிற அலட்சியத்துக்கும் நடுவே நிறைய அறிவியல் ஒளிந்திருக்கிறது. அறத்துடன் அதை அணுக வேண்டிய கட்டாயம் மருத்துவ உலகுக்கு நிறையவே உள்ளது.

அறிவியலும் ஆய்வு முடிவுகளும் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது, அத்தனை நகர்வுகளையும் வணிகப்படுத்தும் மருத்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள், அநியாயத்துக்கு அமெரிக்காவின் ஆய்வு முடிவுகளை மட்டுமே குலதெய்வ வாக்காகப் பார்க்கும் நம்ம ஊர் மருத்துவத்துறை என இத்துறையில் ஏற்படும் பிழைகளுக்குப் பல முக்கிய காரணிகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அப்பவே சொன்னேன்! அங்க போகாதே, ஆஞ்சியோ எடுக்கச் சொல்வாங்க. மடையைக் கழுவுற மாதிரி அடைப்பை இந்த மருந்து எடுத்துவிடும்; என்ன, ஒரு பத்தாயிரம் ஆகும். என்ன மருந்துன்னு எல்லாம் சொல்ல முடியாது. லேபிளே காட்ட மாட்டோம். இது எங்க ஒண்ணுவிட்ட தாத்தா `கபிலரோட காட்டுக்குப் போனவர்' அதே பரம்பரை நாங்க'' என்று சொல்லி போலி வைத்தியம் பார்க்கும் சமூகவிரோத கும்பல்கள், இப்பிழை கூடிக்கொண்டே போக இன்னொரு மிக முக்கிய காரணம்.

`இங்கிலாந்து, அமெரிக்காவில் நீ சொல்றதெல்லாம் சரிப்பா. இங்கே நம் மரபு, நம் காலச்சூழல், நம் உடல்வாகு, நமக்கான உணவுப்பழக்கம், உடலில், உள்ளத்தில், தொற்றில் என்ன நடக்கிறது' எனும் `இண்டிஜெனஸ்' (Indigenous) மருத்துவப் புள்ளிவிவரங்களும் ஆய்வுகளும்கூட இந்தியாவில் மிகக் குறைவு.

`பிரைமரி பிரிவென்ஷன்' (Primary prevention) மாரடைப்புக்கு மிக அவசியம். அதனால 40-க்கு மேலே எல்லோருக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எது இருந்தாலும், மாரடைப்பு வராமலிருக்கக் கொடுத்திடுங்க என ரொம்ப நாளாக நவீன மருத்துவம் சொல்லி வந்தது. கொடுத்தும் மாரடைப்பு வந்தது. `சாம்பார், அவியல், கூட்டு, பொரியல்'ங்கிற மாதிரி எல்லா நாற்பதுக்கும், இலையில் `மெட்பார்மின், ஆஸ்பிரின், ஸ்டாட்டின்' எனும் மூன்று மருந்துகளைப் பரிமாறுவது நல்லதாக்கும் என்கிற கருத்து மிக வலுவாக வளர்ந்து வந்தது. இந்திய நாட்டின் மருத்துவக் கொள்கையிலேயே, இப்படி `மும்மருந்துப் படையல்' இதயநோய்த் தடுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

ஆனால், வெகு சமீபத்திய மருத்துவ ஆய்வு அறிக்கை, `இந்த பிரைமரி பிரிவென்ஷன் ஆஸ்பிரினால் பெரிய பிரயோசனம் இல்லை. ரத்தம் உறைய வாய்ப்புள்ளவர், பிற இதயநோய் உள்ளவருக்கு மட்டும் போதும். மற்றவருக்குத் தேவையில்லையே எனச் சொல்லிவிட்டது. (ref- 2019 ACC/AHA Guideline on the Primary Prevention of Cardiovascular Disease); குறிப்பா 70 வயசுக்கு மேல இந்த மருந்து அவசியமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

நெய், தேங்காய் எண்ணெய், முனியாண்டி விலாஸ் இவையெல்லாம் நம் வாழ்வை விட்டு விலகிப் போனதற்குக் கொழுந்துவிட்டு எரிந்த கொலஸ்ட்ரால் பயம் மிக முக்கிய காரணம். உலக மருந்துச்சந்தையில் முதலிடத்தில் இருப்பது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஸ்டாட்டின் (statin) மருந்துகள்தாம். பல பில்லியன் டாலர் சந்தை இதில் உள்ளது. `தசைவலி வரட்டும்; மாரடைப்பு வந்து சாகக் கூடாதுன்னா நான் சொல்றதைக் கேளுங்க; ஸ்டாட்டின் சாப்பிடுங்க' என ஒருபக்கமும், `ஸ்டாட்டின் முழுக்க முழுக்க வணிக உத்தியில் முன்னிறுத்தப்படும் மருந்து. அவசியமில்லாமல் திணிக்கப்படுகிறது. சாப்பிட்டா, மூட்டுவலி வரும், தசைவலி வரும், ஞாபக மறதி வரும், இன்னும் பல பக்க விளைவு வரும். அதனால் அவசியமே இல்லை' என இன்னொரு பக்கமும், வலுவான சர்ச்சையும் தர்க்கமும் உலகெங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே, குடும்பத்தில் இதய நோயால் இளவயது மாரடைப்பு மரணத்தைச் சந்தித்தவர்களோ `நான் இப்போ நல்லாத்தானே இருக்கேன்; எனக்கு ஸ்டாட்டின் வேணுமா, ஆஸ்பிரின் வேணுமா? சரியா சொல்லுங்கப்பா?' என அங்கலாய்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

முதல் விஷயம், வெகுஜனங்களுக்கு இம்மாதிரியான மருத்துவக் கருத்துகளை அடிக்கடி பகிரும் மாயோ கிளினிக் (Mayo clinic), ஹார்வர்டு ஹெல்த் நியூஸ் (Harvard health news), சிடிசி (CDC), ஏசிசி (ACC), ஏஹெச்ஏ (AHA), ஏடிஏ (ADA )முதலான அமெரிக்க நிறுவனங்களும், என்ஐஹெச் (NIH), என்ஹெச்எஸ் (NHS), டபிள்யூஹெச்ஓ (WHO) எனும் பன்னாட்டு நல அமைப்புகளும் ஒன்றுபட உறுதியாகச் சொல்லும் விஷயம், மருந்துக்கெல்லாம் முன்னால் மாரடைப்பைத் தவிர்க்க, `உணவில் கவனம் செலுத்துங்கள்' என்பதுதான்.

குறைந்த கார்போஹைட்ரேட் அதிலும் லோ-கிளைசெமிக் உணவும், அதிக நார்ச்சத்து உணவும், மீன் புரதமும் எடுப்போருக்கு இதயநோய்த் தாக்கம் குறைவு என்பதைப் பல மருத்துவ ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. எப்படியான உணவு வேண்டும்? பொதுவாக, சர்க்கரை, உப்பு, கொழுப்பு குறைத்தே ஆக வேண்டும். ஹிமாலயன் உப்பாக இருந்தாலும் சரி, பனங்கற்கண்டாய் இருந்தாலும் சரி, அல்லது செக்கெண்ணெயே ஆனாலும் சரி, அவையெல்லாம் மிக நல்லவையே என்றாலும்கூட நாற்பதில் எல்லாம் கொஞ்சம் அளவில் குறைவாகத்தான் பரிமாறப்பட வேண்டும்.

உணவில் பொதுவாக `சாலட்' பயன்பாடு நம்மூரில் மிகக் குறைவு. ஆனால், மேலை நாட்டவரிடம் வாரத்தில் மூணு, நாலு நாள் சாலட் சாப்பிடுவது பெருகிவருகிறது. சாலட் என்றதும் சம்பிரதாயமாக வெள்ளரி - தக்காளி - வெங்காயம் - கேரட் கூட்டணியைத்தவிர வேறு எதுவும் நம் நினைவுக்கு வருவதில்லை. விதவிதமான சாலட்டுகள், தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. சம்பிரதாயமான இத்தகைய சாலட்டுகளுடன், லேசான பாதி அவியலில் கிடைக்கும் காய்கறிகளைச் சேர்த்துச் செய்வது, முளைக்கட்டிய தானியங்களைச் சேர்ப்பது, கொஞ்சம் நிலக்கடலை முதலான பயறுகள் - வெந்தசோளம், தேங்காய்த்துருவல், இவற்றைச் சேர்த்துச் சுவை கூட்டுவது மூலம் சாலட்டுக்கான சுவையையும் மருத்துவப்பயனையும் கூட்ட முடியும்.

ஒரு பிளேட் சாலட் சாப்பிட்டுவிட்டு, பிறகு `சாம்பார், வடை, பாயசம், கொஞ்சம் கோழி பிரியாணி' என ஒரு கட்டுக்கட்டுவதில் துளியும் பிரயோசனமில்லை. வாரம் மூணு நாள் சாலட் மட்டுமே மதிய உணவாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால், கூடக் கொஞ்சம் காய்கறிச் சாறு (smoothie), சூப் (ரசம் மாதிரி) அருந்தலாம்.

உலகமெங்கும் பிரபலமாகி வரும் குறைவான கார்போஹைட்ரேட், `வேகன் உணவு', மாரடைப்பு - சர்க்கரை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிக பயன்தருவது என்று ஆய்ந்தறியப்பட்டுள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலை 140-க்குக் கீழேயும், சராசரி ரத்த சர்க்கரை அளவை (HbA1C)-ஐ 7-க்குள்ளாகவும் வைத்திருக்க இந்த வேகன் உணவு பெரிதும் பயன்படுவதை, தொடர்ந்து அயல்நாட்டு நேச்சுரோபதியார் சொல்லிக்கொண்டே வருகின்றனர். வேகன் உணவில் பால் மற்றும் அதன் பரம்பரையையே நீக்க வேண்டும். மோர்சாதம்கூடக் கூடாதாம். 80-களில் பிரபலமான ஜி.எம்.டயட் (GM diet என்றதும் மரபணு மாற்றப்பட்டவை எனத் தவறாக நினைக்க வேண்டாம். General Motors கம்பெனிக்காரர் அவர்களிடம் வேலை பார்த்த குண்டு நபர்களின் எடையைக் குறைத்து அவர்களின் இதயம் காக்க உருவாக்கிய உணவுத்திட்டம் அது) எடை அதிகமுள்ளோர் எடையைக் குறைத்து, மாரடைப்பு வராமலிருக்கப் பயன்படுத்திய உணவுத்திட்டம். `லோ கார்போ கீட்டோஜெனிக் வேகன்' அல்லது `ஜி.எம்.டயட்' என எதையாவது ஒன்றைச் சிலகாலம் பயன்படுத்தவும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

மருத்துவர் ஆலோசனையோடு சில காலம் பேலியோ எடுக்கலாம். `அதுதானே ஆதிமனிதன் உணவு? அதை ஏன் வலுவாய்ச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?' என அடிக்கடி என்னிடம் மாற்றுச்சிந்தனை சொல்லும் நல்ல உள்ளங்கள் பல சண்டை போடுவதுண்டு. ஆதிமனிதன் உணவு சரிதான். அந்த ஆதி மனிதன் நடந்த மாதிரியோ, மலையோ மரமோ ஏறிய மாதிரியோ இப்ப நகரங்கள் இல்லையே; ஆப்பிள் போனில் ஆப்பு வெச்சு அல்லவா 8,000 ஸ்டெப் நடக்கிறோம். ஆதி மனிதன் வாழ்ந்த பூமியில் அவன் சுவாசித்த காற்றில் `சஸ்பெண்டெட் பார்ட்டிகிள்' (suspended particle) 200-300 என இருந்ததில்லையே. அவன் பையனோ, பெண்ணோ `நீட்' எக்ஸாம் எழுத வேண்டியதிருக்கவில்லை. அவன் வாழ்ந்த ஊருல 370-ஐ போட்டதும் இல்லை, பின்னாடி தூக்குனதும் இல்லை.

உணவில் சின்னச் சின்ன அக்கறைகூட மாரடைப்பைத் தடுக்கக்கூடும். வெந்தயத்தை ஊறவைத்து அல்லது அப்படியே பொடிசெய்து சாப்பிடுவதாலோ கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளைசரைடு குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது. சின்னவெங்காயத்தை அதிகமா மேல் தோலைச் சீவாமல், வேகவைக்காமல் தயிர்ப்பச்சடியாகச் சாப்பிடுவதில் இதய ரத்த நாளங்களின் உள்ளே உருவாகும் வெடிப்புகள் குறைந்து அதில் கொழுப்பு படிதல் தடுக்கப்படுகிறதாம். வெள்ளைத்தாமரை அல்லது செம்பருத்தி இதழைத் தேநீரில் போட்டு அருந்த இதயம் வலுப்படும். முருங்கைக்கீரை சூப், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை மோரில் கலந்து சாப்பிடுவது, பூண்டு வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்வது இவையெல்லாமே துளிதுளியாக இதயத்தைக் காக்கும். சித்த மருந்தான மருதம்பட்டையில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் ஏராளம். இன்றைக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் வரும் இதய நோயைத் தடுப்பதில், இதயத்தசைகளை வலுப்படுத்துவதில் மருதத்தின் பங்கு ஏராளம்.

தினசரி 20 நிமிடம் வியர்க்க விறுவிறுக்கச் செய்யும் உடற்பயிற்சி, 30 நிமிட யோகா மற்றும் தியானம், ஒரு மணி நேர நடை என இவையெல்லாம் மேலே சொன்ன அத்தனை உணவோடும் கட்டாயம் இருக்க வேண்டிய பயிற்சிகள்.

இதய மருத்துவர் சொல்லும் மருந்துகளையும் ஆலோசனைகளையும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள். சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஸ்டாட்டினோ, ஆஸ்பிரினோ மிக அவசியம் என உங்கள் இதய மருத்துவர் உணரும் பட்சத்தில் சிலகாலம் எடுங்கள். அவசியப்பட்டால், இதய நாடிக்குள் ஸ்டென்ட் வைப்பது அறத்துடனே பரிந்துரைக்கப்பட்டால், செய்து கொள்ளுங்கள். `அவசியமா?' என்கிற முடிவை மருத்துவர் மட்டுமே எடுக்க முடியும்.

இக்கட்டான சூழலில், ஆஞ்சியோ செய்துகொண்டிருக்கையில், பாதியில் அவரைப் படுக்க வைத்துவிட்டு, ஆஸ்ட்ரோனட் உடையில் வெளியே வந்து `ஸ்டென்ட் வெச்சிரலாமா? ஃபாரின் ஸ்டென்ட்னா 1.5 லட்சம் ஆகும். இன்னொண்ணு 75 ஆயிரம். எதை வைக்கட்டும்?' என்று கேட்பது, கண்ணீருடன் மருத்துவரைக் கடவுளாக எண்ணிக் காத்திருக்கும், நோயாளியின் அப்பாவி மனைவிக்குப் புரியாது. அதன் அவசியமும் புரியாது. விலையும் தெரியாது. அவளுக்குத் தேவையெல்லாம் தன் கணவனின் உயிர் மட்டும்தான். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மருத்துவர்களாகிய நீங்கள்தாம் அவள் சகோதரனாக, தகப்பனாக, பாதுகாவலானாக இருந்து முடிவு சொல்ல வேண்டும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

உலகின் பல்வேறு மூலைகளில் நடைபெறும் மூலிகை ஆய்வுகள், யோகா, இயற்கை மருத்துவம், அக்குபிரஷர், அக்குபஞ்சர் இவற்றில் நடைபெறும் ஆய்வுகள் உயிர்ச்சுழற்சியின் ஓட்டத்தைச் செம்மைப்படுத்தி, `அன்ஸ்டேபிள் ஆஞ்ஜினா' (Unstable angina) எனும், நடக்கும்போது அவ்வப்போது ஏற்படும் இதயவலியைச் சீராக்குவதையும், ஈசிஜி-யில், `லெப்ட் வென்ட்ரிக்கிள் எஜெக்‌ஷன் ஃப்ராக்‌ஷன்' (Left ventricle ejection fraction) முன்னேற்றத்தைக் காட்டுவதையும் தொடர்ந்து சொல்லி வருகின்றன.

சோதனை முடிவுகளின் வெறும் எண்களை மட்டும் வைத்துப் பார்க்காமல் எல்லாவற்றையும் ஆராய்ந்து சிலகாலம் ஒருங்கிணைந்த மருத்துவம் செய்து பார்த்தாலென்ன? அதன்மூலம் எவ்வளவு பொருட்செலவு நோயாளிக்குக் குறையும்! கூடவே உணவால், உடற்பயிற்சியால், மூச்சுப்பயிற்சியால் இனி இதயநோய் தலைகாட்டாமலிருக்கச் செய்யலாமே என யோசித்து, மரபு மருத்துவரும், நவீன மருத்துவரும் என்றைக்கு ஒன்றாக அமர்ந்து யோசிக்கப்போகிறார்கள்?

- இனியவை தொடரும்...