Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 15

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 15

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

டந்த மூன்று மாதங்களில் என் மருத்துவமனைக்கு வந்த இரண்டு பெண் நோயாளிகள் நிறைய சிந்தனைகளை என்னுள் உசுப்பிவிட்டனர். இருவருக்குமே வயது நாற்பத்தைந்தை ஒட்டியிருக்கும். ‘இன்னும் ஆறு மாதத்திற்குள் நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இரண்டாவது திருமணம்தான். வெளியே என் வருங்காலக் கணவரும் கல்லூரிக்குச் செல்லும் என் 21 வயது மகளும் இருக்கிறார்கள். அவருக்கு வயது 50-ஐ நெருங்குகிறது. கொஞ்சம் ‘வீக்’காக இருப்பதாகச் சொல்கிறார். உடல்வலுவைக் கொடுக்கும் மருந்து, லேகியம் எதாச்சும் தாருங்கள்’ என்று திடமாய்த் தெளிவாய்ச் சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பின்னர், ‘அம்மா மேரேஜுக்கு அப்புறம், நான் தனியாக இருக்கலாம்னு இருக்கேன்; எனக்கு ‘கேஸ்டிரைடிஸ்’ இருக்கு... மருந்து எதாச்சும் கொடுங்க’ என, கல்லூரியில் படிக்கும் மகளும், ‘சுகர், பி.பி லேசா இருக்கு சார். மாத்திரை எடுக்கிறேன். ஆனால், ‘எரெக்‌ஷன்’ சரியா இல்ல. உடலுறவில் சிரமம். இதற்கென மருந்து வேணும். சீக்கிரம் சரியாகுமா?’ எனப் புது மாப்பிள்ளையும் பேசிச் சென்றார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னொரு பெண், ‘வயசு 45 ஆகுது சார். எப்படிச் சொல்லன்னு தெரியலை. கணவர் என்னை முழுமையா புறக்கணிக்கிறதா தோணுது. காலேஜ் போற பசங்க இருக்காங்க. அதனால சுத்தமா விலகி இருக்கார். எங்களுக்குள்ளே அது நடந்தே ஆறு மாசம் இருக்கும். அவருக்கு எந்த உடல்நலக்குறையும் கிடையாது. கல்யாணம் ஆன 7, 8 வருஷம் அப்படி நெகிழ்வா இருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக விலகிட்டார். என்னை ஏன் பிடிக்கலைன்னு தெரியலை சார். என் முகச்சுருக்கம் பிடிக்கலையா, தொப்பைச் சதை பிடிக்கலையான்னு தெரியலை. அவருக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கான்னும் தெரியலை. என் மனசு அவர் அரவணைப்புக்காக ஏங்குது. யதேச்சையா நான் நெருங்கினால்கூட அவர் விலகுறது, எனக்குப் பெரும் உதாசீனமாகப் படுது. கடும் தலைவலி வருது. என் வயசுக்கு நான் இப்படிப் பேசுறது சரியான்னு தெரியல.

பெண்கள் ஸ்காட்லாந்து போலீஸைவிட புத்திசாலிகள்; சினிமாவில் காட்டும் வெள்ளந்தி சரண்யாக்கள் மாதிரி அல்ல நிஜத்தில். ‘செயற்கை நுண்ணறிவு’ பேசும் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், 16 கோணத்தில் குறுக்குவாட்டில் யோசித்து, நடக்கப்போவதைச் சொல்லும் மூளையைக் கொண்டவர்கள்.

தூக்கம் இல்ல. எப்பவும் கோபமும் கடுஞ்சொல்லுமாய் இருக்கேன். பேசாம, நான் பிரிஞ்சு அம்மாகூட போயிடலாமான்னு பார்க்கிறேன்’ என அதற்கு மேல் பேசமுடியாமல் விசும்பலுடன் நிறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இந்த இரண்டு சம்பவங்களுமே, நம் தற்போதைய சமூகத்தின் சமீபத்திய முக்கிய அடையாளங்கள். நாற்பதில் நசுங்கும் காதலும் நசுக்கப்படும் காமமும்கூட இவ்வயதுக்கான மிக முக்கிய சவால். என்னைச் சந்தித்த முதலாமவர் படித்தவர். 20 ஆண்டுகளாக நிறுவனமொன்றில் பணிபுரிபவர், அவருக்கான தேவையை உணர்ந்தவர். நாற்பதுக்குப் பின்னான வாழ்வின் கவித்துவ அவசியத்தைப் புரிந்து நகர்பவர். 21 வயது மகளுக்கும் தன் புதிய உறவின் அவசியத்தை அழகாய் இயல்பாய் உணர்த்தியவர். தெளிவான முடிவை எடுத்து வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறார். புதிய ராகம் இசைக்கிறார். ஆனால், இத்தகைய உறவின் நகர்வும் அவசியமும் இருக்கும் பெரும்பாலானோரால் இந்த முடிவை எடுக்க முடிவதில்லை. சமூகத்தின் புரிதலற்ற ஏளனத்திற்குப் பயந்து, ‘புள்ளைங்க கல்யாண வயசுல இதெல்லாம் அவசியமா?’ என்று தன்னைக் கரைத்துக் கொள்பவர்களே இங்கு அதிகம்.

இக்கட்டுரையைத் தட்டச்சு செய்வதற்கு சரியாக ஒருவாரம் முன்னர், கனடா நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறு ஆர்கானிக் விவசாயப் பண்ணையைப் பார்வையிடச் சென்றிருந்தேன். ‘பிக் அண்டு பை’ (Pick and buy) எனப் பெயரிடப்பட்ட தோட்டத்துக்குள் போய், தேவையானவற்றைப் பறித்துவந்து, எடைபோட்டு, காசுகொடுத்து வாங்கிக்கொள்ளலாம். சுகினி எனும் வெள்ளரி, ஆப்பிள், வெங்காயம், உருளை, தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை எனத் தோட்டம் முழுமையும் காயும் கனியும். இந்த விவசாயப் பண்ணையை வைத்திருந்த முதியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு, ஆர்கானிக்கிலிருந்து அவர் குடும்பத்தை நோக்கித் திரும்பியது. ‘தனியாவா பண்ணையைப் பாக்கிறீங்க?’ எனக் கேட்டதும், ‘யார் சொன்னா, அதோ பாருங்க, அந்தம்மாவும் நானும்தான் பார்த்துக்கிறோம். அவர் என் மனைவி. கொஞ்ச நாள் முன்னாடிதான் எங்களுக்குத் திருமணமாச்சு. நான் இத்தாலிக்காரன்; அவள் பிலிப்பினோ. அவங்க வீட்டுக்காரர் புற்றுநோய்ல இறந்துட்டாரு. என் மனைவியும் இறந்துட்டா. எனக்கு 81 வயசாகுது; அவளுக்கு 76. இப்போ நாங்க ஒண்ணா வாழ்ந்து விவசாயம்செய்து பிழைக்கிறோம். எங்க பிள்ளைங்க தனித்தனியா நல்லா இருக்காங்க. அவங்க கூட இருந்தா ஆதரவா இருக்கும்தான். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. உரம், பூச்சிமருந்து எல்லாம் எங்க நிலத்துலயும் கிடையாது. இப்ப எங்களுக்கும் கிடையாது. நாங்ககூட ஆர்கானிக்தான்’ எனச் சொல்லி, சத்தமாகச் சிரித்தார். அவர் சிரிப்பில் 100 சதவிகிதக் காதல், வாழ்வின் புரிதல் இருந்தது.

இரண்டாவதாக நான் பார்த்த பெண்ணின் நிலையில்தான் இன்றைக்கு நம்மிடையே இருக்கும் பெண்களில் பலர் இருக்கின்றனர். அவர் சொன்ன அந்தக் கணவருக்கு, ‘என்ன பிரச்னை?’ எனத் தெரியாது. ஆனால், இந்தப் பெண் பெரும் மன உளைச்சலுக்கும் உதாசீனத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம், ஆணின் 45 வயது காமம் அதிகம் உடல் சார்ந்தது. 25 வயதில் அவனுக்குள் இருந்த, ‘மலரினும் மெல்லிய காமம்’ வயதாக வயதாக, யதார்த்தங்களைச் சந்தித்துவிட்டதாலோ என்னவோ, காதலின் சுகந்தங்களும் சோடனைகளும் நிறையவே காணாமற்போய்விடுகிறது. `காதல் மலர்’ சூலுற்று, காயாகி, முள்சீத்தாப் பழமாகிப்போனதில் மலரினும் மெல்லிய காமம் அவனிடத்தில் இல்லை.

அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ராஜா பாட்டுக்கும் அவன் மனமும் ஏகத்துக்கு ஏங்கினாலும், அதை அடுத்த பக்கம் கொடுப்பதற்கு அவனது அகங்காரம், சமூகக் கட்டமைப்பு, உடல்சோர்வு விடுவதில்லை. மிகச் சொற்பமான ஆண்களே புன்னகையிலும் பூக்களிலும் நாற்பதில் காதலைக் காட்சிப்படுத்துகின்றனர். கண்பார்த்து முகம் பார்த்துப் பேசவாவது செய்கின்றனர். மற்ற எல்லோருக்கும் அவசரமும், ‘டி.ஏ பில் பாஸாயிடுச்சா?’ என்பது போன்ற ‘மொக்கை’ யதார்த்தமும்தான் முன்னால் நிற்கிறது.

இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், உளவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக மனிதன் ‘பாலிகமி’ மனம் உள்ளவன். சமூகக் கட்டமைப்பால் சில நூறு ஆண்டுகளாக ‘மோனாகமி’ வேஷத்தைக் கச்சிதமாகத் தரித்து நிற்கிறான். தன் இணைமீது ஆர்வமற்றுப்போவதும் அவள்மீதான காதலும் காமமும் குறைவதில் இந்தக் காலம்தொட்ட வரலாற்று உளவியல் உண்மைக்கும் நிறையவே பங்குண்டு. தான் சந்திக்கும் புதிய சிநேகிதியிடமும் பிற பெண்ணிடமும் காட்டும் குழைவை, அவன் வீட்டில் காட்டாததற்கு, காலத்தால் தன் இணையிடம் ஏற்படும் ஆர்வமற்ற தன்மையும்கூட காரணம்.

உளவியலாய் இதைப் புரிந்து, ஆணும் பெண்ணும் தன்னைக் குதூகலக் காதலியாய் / காதலனாய் அடையாளப்படுத்தும் விதமாக, குறும்பு கொப்பளிக்கும் புன்னகையும் ‘பளிச்’ புத்துணர்வும், கூடவே பேசுகையில் கொஞ்சம் எள்ளலும் காதலாய்க் கசிந்துருகலும் காட்டுவது, இப்பிழை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகாதிருக்க, விலகி விலகி விரக்தி மேலோங்காமல் இருக்க மிக மிக அவசியம். ‘என்ன இது நாடகம், அசிங்கமால்ல இருக்கு’, எனச் சண்டை போட வேண்டாம். வாழ்வே ஒரு நாடகம்தான். ஆணும் பெண்ணும் நாற்பதிலும் தங்கள் காமத்தைச் சீராய்ப் பரிமாறிட, சில மெனக்கெடலைச் செய்துதான் ஆக வேண்டும். பதில் தெரிந்தே கேட்கும் அவளின் கேள்விக்கு, ‘அவள் இந்த பதிலைத்தான் விரும்புகிறாள்’ எனத் தெரிந்து, அது விளங்காத மாதிரியே நடித்து பதில் சொல்வது, சட்டை ஒரு கலர், பேன்ட் ஒரு கலரில் போட்டு ‘தொளதொள’வெனத் திரியாமல் இருப்பது, குதூகலிக்கும் முகமொழியுடன் பேசுவது ஆணுக்கும் மிக மிக அவசியம். காதல் வளர்க்க, காமம் கொப்பளிக்க, ‘வயாகரா’க்களைவிட வசதியானது இதுபோன்ற மெனக்கெடல்கள்தான்.

பொதுவாக, பெண்கள் ஸ்காட்லாந்து போலீஸைவிட புத்திசாலிகள்; சினிமாவில் காட்டும் வெள்ளந்தி சரண்யாக்கள் மாதிரி அல்ல நிஜத்தில். ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) பேசும் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், 16 கோணத்தில் குறுக்குவாட்டில் யோசித்து, நடக்கப்போவதைச் சொல்லும் மூளையைக் கொண்டவர்கள். அதுவும் வயது ஆக ஆகப் பெண்ணுக்கு இந்த நுண்ணறிவு பெருகும். ஊரெல்லாம் உதார் விட்டுத் திரியும் ‘ஊர்ப்பெருசை’ வீட்டில் முடக்கி வைக்கும் பாட்டிகளே இதற்குச் சான்று. ‘ஆண் மூளையைவிடப் பெண் மூளையின் ‘கார்ப்பஸ் கலோசம்’ பகுதி கொஞ்சம் அடர்த்தியானது’ என மருத்துவ அறிவியல் சொல்கிறது. ‘தேவைப்படும் முடிவுகளைத் தீர, பலகோணத்தில் யோசித்து எடுப்பதில் பெண்ணுக்கு ஆணைவிட அறிவு ஜாஸ்தி’ என அறிவியல் உலகமே சொல்கிறது. அதனால், ‘என்மீது ஏன் ஆர்வம் இல்லை?’ என்பதை அவர்கள் ஆராயத் தொடங்குவது வாடிக்கை. ‘வீட்டில் மாமியார், அலுவலகத்தில் சக ஊழியை’ எனப் பொது விரோதிகளையெல்லாம் ஒரே கோட்டில் நிறுத்தி, ‘வாட்ஸப்பிலிருந்து வாட்ஸ் ஹாப்பனிங்’ வரை அவர்கள் புலனாய்வு தொடங்கும். பாதி உண்மையும் பாதி அவநம்பிக்கையும் அந்த ஆராய்ச்சி முடிவில் வெளியானதும், ஆண் ‘என்மீது நம்பிக்கை இல்லையா?’ எனக் கூச்சலிடத் தொடங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகிறான். நகர்ப்புறத்து நாற்பதுகளில், இதுமாதிரியான விலகல் இன்றைக்கு நிறையவே அதிகம். ‘பேசினால் தப்பா?’ என ஆணும், ‘எங்கிட்ட இல்லாத பேச்சு அவகிட்ட மட்டும் எப்படி?’ எனப் பெண்ணும் பொங்குவதில், விலகல் இருபக்கமும் பொங்கிப்பெருகும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நாற்பதில் பெருவாரியான பெண்ணின் தேவை, ‘எத்தனை முறை என்னிடம் நீ உச்சம் பெறுகிறாய் அல்லது கொடுக்கிறாய்?’ என்பதல்ல. ‘எத்தனை முறை என்னிடம் புன்னகைக்கிறாய்? எவ்வளவு நிமிஷங்கள் கண் பார்த்துப் பேசுகிறாய்? வெளியில் நீ பார்த்த உலகத்தை, ரசித்த சந்தோஷித்த கணங்களை என்னிடமும் பரிமாறி மகிழ்விக்கிறாயா? எத்தனை முறை என் கரம்பற்றி உன் நெஞ்சில் வைத்துக்கொள்கிறாய்? கிடைக்கும் சிறுசிறு பொழுதுகளில் சிகைக்குள் காதில் பேசுவதுபோல் போய் முத்தமிடுகிறாய்?’ என்பது மட்டும்தான். அதைத்தொடரும் மற்ற உச்சமோ மிச்சமோ பொருளே அல்ல.

நாற்பதில் எந்தப் பெண்ணும், ஆணின் தேவை அறியாதவர்கள் அல்லர். சில இயலாமையைப் புரியாதவர்களும் அல்லர். நாற்பது வயதில் சில சோடனைகளைக் காட்டத் தெரியாததால், சில சூசகங்கள் தெரியாததால், அல்லது, அச்சூசகங்களுக்குச் சமூக அங்கீகாரமில்லாது வெட்கிப்பதால், உடல்மொழியும் முகமொழியும் மாறி நிற்கின்றன. அப்படி அந்நியப்படாமல், அரவணைத்து அன்பைக் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா டாப்பிங்க்ஸாய்’ தூவித்தர, நாற்பதில் காமம் நிச்சயம் இருபக்கமும் இனிக்கும். கூடவே, ‘சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?’ என ராஜாவின் கரகரத்த குரலும் குழையும் ஜானகியின் குரலும் அங்கே ஒலிக்கும். இதுவரை கேட்காத அந்தப் பாட்டை ஒரே ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்.

- இனியவை தொடரும்...

ண் பார்த்துப் பேசல், காதலுக்கும் அதற்கு அப்பாலும் செல்ல, நாற்பதுகளுக்குத் தேவையான முதல் பயிற்சி. ஒரே நேரத்தில் பல சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஆட்டிசக் குழந்தைகளுக்கும் அது முக்கியப் பயிற்சி. அதேபோல் அலுவல், ஆர்வமின்மை, மன அழுத்தம் என ஒரே நேரத்தில் பல சிக்கல் சிந்தனைகளைக் கொண்டிருக்கும் நாற்பதின் தம்பதியருக்கும், இது மிக முக்கியப் பயிற்சி.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இதன் முக்கியத்துவத்தை முன்பே உணர்ந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் தன் மனவளக்கலைப் பயிற்சியில், `மனைவி நல வேட்பு விழா’ ஒன்றை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30-ல் எடுத்து, அவ்விழாவில் தம்பதியர் இருவரும் எதிரெதிராய் உட்கார்ந்து, மனைவிக்கு அன்பையும் நன்றியையும் செலுத்தும் விதமாய் கண்ணோடு கண் பார்க்கும் பயிற்சியை வடிவமைத்திருக்கின்றார். ஒரு நாளைக்கு ஒருசில மணித்துளிகளேனும் உங்கள் கணவன்/மனைவியின் கண் பார்த்துக் கண்ணால் பேசிக் காதல் வளர்ப்பீர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism