பொங்கல் பண்டிகை காலகட்டத்தின் போதுதான் கரும்பும் மஞ்சளும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பைச் சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு மற்றும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை கல்லீரலைப் பலப்படுத்தும். பசியை அதிகமாக்கும். காய்ச்சலைத் தணிக்கும். குடல் வாயுவை அகற்றும். தாதுக்களைப் பலப்படுத்தும். வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய கரும்புச் சாறு உதவும்.
• கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துகள் அதிகம் உள்ளன. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு இன்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
• மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடை எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
• மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூச வேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால் சிரங்கு, புண்கள் குணமாகும்.
• மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும். மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்