Published:Updated:

`வயது 85.. இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 34!’ -சவாலை சாதனையாக்கிய செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள்

சந்திரசேகரியுடன் மருத்துவக் குழு
சந்திரசேகரியுடன் மருத்துவக் குழு

அம்மாவுக்கு அடிக்கடி மயக்கம் வரும். ஒரு நாளைக்குப் பலமுறை அலறிக் கொண்டே மயங்கி விழுந்துவிடுவாங்க. இதைக் கண்டதுமே எங்களுக்கு நடுங்கத் தொடங்கிவிடும்.

நிமிடத்திற்கு 34 முறை மட்டுமே இதயத்துடிப்பு இருந்த 85 வயது மூதாட்டி ஒருவருக்கு முதல்முறையாக பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் செங்கல்பட்டு மருத்துவர்கள். இதைத் தொடர்ந்து அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

சந்திர சேகரி
சந்திர சேகரி

காஞ்சிபுரம், சிறுவேடல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரி கடந்த 6 மாதமாக அடிக்கடி அவருக்கு மயக்கம் ஏற்பட்டுவந்தது. மயக்கம் வரும் போது சத்தம் போட்டுக்கொண்டே கீழே விழுந்துவிடுவார். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு பேஸ்மேக்கர் என்னும் செயற்கை இதய முடுக்கிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ஒருவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுவது இதுவே முதல்முறை.

இது குறித்து மூதாட்டி சந்திரசேகரியிடம் மகள் வசந்தாவிடம் பேசினோம். “இதயத்துல பிரச்னை இருந்ததால அம்மாவுக்கு அடிக்கடி மயக்கம் வரும். ஒரு நாளைக்குப் பலமுறை அலறிக் கொண்டே மயங்கி விழுந்துவிடுவாங்க. இதைக் கண்டதுமே எங்களுக்கு நடுங்கத் தொடங்கிவிடும். இதனால காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டல்ல மருத்துவம் பார்த்தோம்.

பேஸ்மேக்கர், இதயம்
பேஸ்மேக்கர், இதயம்

அங்கு ஸ்கேன் செய்த டாக்டர் சென்னைக்குப் போகணும்னு சொல்லிட்டார். அம்மாவுக்குச் சென்னைக்குப் போக விருப்பமில்லை. தனியார் ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் செய்யும் அளவிற்கு எங்களுக்கு வசதி இல்லை. இதனால செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில சேர்த்தோம். ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிருக்கு. காப்பீட்டுத் திட்டத்தில ஆபரேஷன் செய்ததால செலவும் இல்லை” என்கிறார் மகிழ்ச்சியாக.

இதய நோய்ப் பிரிவு துறைத்தலைவர் ஆறுமுகம், ``செங்கல்பட்டு மருத்துவமனையில் 2018ல் கேத்லேப் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இதய அடைப்பு சிகிச்சைகளான ஆன்ஜியோகிராம், அன்ஜியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் மட்டுமே அளித்து வந்தோம். முதல்முறையாக தற்போது இதயத்திற்கு நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தி ஒருவருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறோம்.

செங்கல்பட்டு மருத்துவர்கள்
செங்கல்பட்டு மருத்துவர்கள்

பாட்டி மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு நிமிடத்திற்கு 34 முறை மட்டுமே இதயத்துடிப்பு இருந்தது. ஆனால், சாதாரணமாக ஒருவருக்கு நிமிடத்திற்கு 70-100 முறை இதயத்துடிப்பு இருக்க வேண்டும். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு கடந்த 4ம் தேதி நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தினோம். இந்தக் கருவியில் உள்ள பேட்டரி 10-15 வருடங்கள் இயங்கும் தன்மை கொண்டது. இதயம் இருக்கும் பகுதியில் ஒரு செ.மீ அளவில் துளையிட்டு இந்தக் கருவியைப் பொருத்திவிடுவோம். அறுவை சிகிச்சை முடிந்ததும் சுமார் 15 நாளில் நோயாளி வீடு திரும்பிவிடலாம்“ என்றார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் “சென்னையில் மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த சிகிச்சை முதல்முறையாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்திருக்கிறோம். இதயத்திற்குள் இயற்கையாகவே ஒரு பேஸ்மேக்கர் இருக்கிறது. இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்பக்கமும், புவியீர்ப்பு திசையிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

சாந்திமலர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
சாந்திமலர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்

புவியீர்ப்பு திசைக்கு எதிராக மேலே செல்லும் ரத்தம்தான் மூளைக்குச் செல்கிறது. இதில் பிரச்னை இருப்பதால்தான் இவருக்கு அடிக்கடி மயக்கம் வந்திருக்கிறது. இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். சிகிச்சைக்குப் பின் இந்தப் பாட்டிக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. அவர் இனி மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என்கிறார்.

“மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். நல்லபடியா வீட்டுக்குப் போறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.” என்கிறார் அந்த மூதாட்டி.

அடுத்த கட்டுரைக்கு