Published:Updated:

`வீட்டிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை எடுக்கலாம்' - யாருக்கெல்லாம் பொருந்தும்?

`வீட்டுக்கே வந்து கொரோனாவுக்கு சிகிச்சை தரப்படும்!' முன்னெடுப்பின் பின்னணி என்ன? - விளக்கும் வைராலஜிஸ்ட்!

கொரோனா நோயின் தீவிரத்தைப் பொறுத்தவரையில், நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால், மருத்துவக் கட்டமைப்பில் சிக்கல் ஏற்படும் எனத் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தமிழகத்தில் இப்போது அந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், தமிழகம் இப்போது வீட்டு மருத்துவத்துக்குத் தயாராகிவிட்டது.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

வீட்டிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை என்ற கோட்பாடு, நம் மக்களுக்கு ஒத்துவருமா அல்லது இதுவும் வெறும் கண்துடைப்பு முயற்சியாகிவிடுமா... இம்முயற்சியின் சாதக பாதகங்கள் என்னென்ன... இப்படியான வீட்டு சிகிச்சை, யாருக்கெல்லாம் பொருந்தும்.. வீட்டில் சிகிச்சைபெற விரும்பும் நோயாளியை மருத்துவர் எப்படித் தொடர்புகொள்வார்?

இதற்கான விடைகளைத் தருகின்றன, அரசு வெளியிட்டுள்ள `வீட்டு சிகிச்சையை விரும்புபவர்களுக்கான கைட்லைன்ஸ்'.

`வீட்டிலிருந்தே சிகிச்சை எடுக்க யாருக்கெல்லாம் அனுமதி தரப்படும்?' என்ற கேள்விக்கு, அந்த கைட்லைன்ஸில் அளிக்கப்பட்டிருக்கும் விடைகள்.

* நோயாளியை கவனித்துக்கொள்ள, வீட்டில் ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். அவருக்கு உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் இருக்கக் கூடாது.

* மூன்றடுக்கு மெடிக்கல் மாஸ்க்கை, நோயாளி எப்போதும் அணிந்தே இருக்க வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் மாஸ்க் ஈரமாகிவிட்டால், உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும்.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு
* மாஸ்க்கை அப்புறப்படுத்தும்போது, 1 % சோடியம் ஹைப்போ குளோரைடு உபயோகித்து, மாஸ்க்கை சுத்தப்படுத்திய பின்னரே அதைக் குப்பையில் வீச வேண்டும்

* நோயாளி தனியறையில்தான் தங்க வேண்டும். விட்டிலுள்ளவர்களிடமிருந்து எப்போதும் தூரமாகவே இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் சர்க்கரை நோயாளி - இதய நோயாளி - சிறுநீரக நோயாளி போன்றோர் இருந்தால் அவர்களைச் சந்திப்பதை அறவே தவிர்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* நோயாளி வீட்டில் முழு நேர ஓய்வில் இருக்க வேண்டும். நீராகாரம் அருந்திக்கொண்டே இருக்க வேண்டும்

* சோப் அல்லது ஆல்கஹால் உள்ள ஹேண்ட்வாஷ் உபயோகித்து 40 விநாடிகளுக்கு கைகளைக் கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்
மாஸ்க் பயன்பாடு
மாஸ்க் பயன்பாடு

* தொற்று சரியாகும்வரையில், துண்டு தொடங்கி தட்டுவரை, நோயாளி பயன்படுத்தும் எந்தப் பொருளும், பகிர்ந்துகொள்ளப்படக் கூடாது.

* நோயாளி தொடும் இடங்கள் அனைத்தும், உதாரணத்துக்கு கதவு - கைப்பிடி - மேஜைகள் போன்றவையாவும் 1% ஹைபோ குளோரைடு மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும்

கொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்...  அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்

* உடல் மற்றும் மனநலன் விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும்

* தினமும் நோயாளி தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும். மாற்றங்கள் தெரியவந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இவற்றையெல்லாம் யாரால் முழுமையாக பின்பற்றமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுமாம்.

மாஸ்க் பயன்பாடு
மாஸ்க் பயன்பாடு

நோயாளிகள் இவற்றையெல்லாம் முழுமையாகப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குட்பட்ட விஷயமாகவே இருக்கிறது. காரணம், இந்தியாவில் - குறுகிய வீடுகளுக்குள் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. ஒருவேளை சாத்தியப்படாமல் போனால், நோய்ப் பரவுதல் அதிகமாகி, இதுவே சிக்கலைக் கொடுக்க நேரிடும். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அனைவரையும் மருத்துவமனையில் இருக்கவைத்து சிகிச்சை அளிப்பது சாத்தியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனில், வீட்டிலேயே கொரோனா சிகிச்சை நல்லதா கெட்டதா... இது வேறு ஏதேனும் பின்விளைவுகளைத் தந்துவிடுமா?

வைராலஜிஸ்ட்டும் மருத்துவருமான ஜெயஶ்ரீ ஷர்மாவிடம் கேட்டோம்.

மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மா
மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மா

``இன்றைய தேதிக்கு, வீட்டிலேயே சிகிச்சையென்பது, அறிகுறிகளற்ற - மிகவும் குறைவான அறிகுறிகளோடு இருக்கும் நோயாளிகளுக்கு, சில வரைமுறைகளுக்குட்பட்டே (மேலே குறிப்பிடப்பட்டவை) தரப்படுகிறது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம்தான். ஏனெனில், கொரோனாவை பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு ஏற்படும் அறிகுறியைப் பொறுத்துதான் சிகிச்சைகள் அமையும். அப்படிப் பார்த்தால், அறிகுறிகளற்ற நபர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சிகிச்சைப் பணிகளே தேவைப்படும். உபகரண தேவைகளும் இருக்காது. அதனால் அவர்களுக்கு மருத்துவமனை சூழலும் கட்டாயம் இல்லை. இப்போதைக்கு தமிழகத்தில், அறிகுறிகளற்ற நபர்கள்தான் அதிகம் இருக்கின்றனர் என்பதால், இங்கு மருத்துவமனைகளுக்குப் பெரியளவில் தேவை இல்லை.

அறிகுறிகளற்ற நபர்களால், நமக்குத் தீவிரமான சிக்கல் ஏற்படாது என்கின்றன, சமீபத்திய ஆய்வுகள். ஆகவே அரசின் இந்த நடவடிக்கை பின்விளைவை ஏற்படுத்தாது என நம்பலாம்.
மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மா

ஒருவேளை வருங்காலத்தில் அறிகுறிகளுள்ள நோயாளிகள் அதிகரித்தால், மருத்துவமனையின் தேவை அதிகரிக்கும். அப்போது நாம் திணறிப்போகக் கூடாது என்றால், இப்போதிருந்தே அறிகுறிகளற்றவர்களை வீட்டில் வைத்துப் பார்ப்பதும் - அதற்கிடையில் மருத்துவமனைகளின் கட்டமைப்பை அதிகப்படுத்துவதும் முக்கியம். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அரசு முதற்கட்டமாக வீட்டு சிகிச்சையைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாள்களில் மருத்துவமனைகளில், நோயாளிக்கான படுக்கை வசதிகள் அதிகரிப்பு, டிஸ்இன்ஃபெக்டன்ட் செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்படும் கட்டடங்கள் போன்றவற்றை அரசு செய்ய வேண்டும்" என்றார் அவர்.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு
பிரச்னை வருமுன், அதை எதிர்கொள்ள அரசு தயாராகிவிட்டதென நினைக்கும்போது, மகிழ்ச்சியே! இதே முன்னெச்சரிக்கை உணர்வோடு, எப்போதும் இருப்போமாக!
மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மா

தமிழகத்தில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போனாலும், அறிகுறிகளற்ற நபர்களே அதிகமாக இருக்கின்றனர் எனக்கூறி நம்மை சமாதானப்படுத்துகிறது அரசு. இப்போது அவர்களுக்கும் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம் என்கின்றனர். இப்போதைக்கு நல்ல பலன்களை மட்டுமே நாமும் எதிர்பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு