Election bannerElection banner
Published:Updated:

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு... இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயம்... என்ன செய்கிறது அரசு?

COVID-19 patient
COVID-19 patient ( AP Photo / Jae C. Hong )

``ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதால் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர்." - மருத்துவர் அருணாசலம்

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத வகையில் இருமுனைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் நோயைத் தடுக்கும் ஆயுதம் என்று நம்பப்படும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் கோவிட் சிகிச்சையில் மருத்துவர்களுக்கு பெரும் துணையாக இருந்த ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கோவிட் தொற்றுப் பரவல் சீராகும்வரை ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

Remdesivir
Remdesivir
Zsolt Czegledi/MTI via AP

தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டுள்ளது, இந்த மருந்துக்கு மாற்று உண்டா, தட்டுப்பாடு நீடிக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என நமக்கு எழும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பொது மருத்துவர் அருணாசலம்.

``ரெம்டெசிவிர் என்பது ஒரு ஆன்டிவைரல் மருந்து. கோவிட்-19 சிகிச்சைக்காகத் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து கோவிட் சிகிச்சையில் நன்கு பயன் தருகிறது. இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதியளித்துள்ள மருந்தாகும்.

மருந்தின் முக்கியத்துவம் என்ன?

உடலில் கொரோனா வைரஸ் அதிகளவில் பல்கிப் பெருகாமல் தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி வடிவத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து கொடுக்கப்படும்போது ஒரு நோயாளி, தொற்று தீவிரமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வது தடுக்கப்படும். தொற்று பாதிப்பின் காரணமாக ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டால் கோவிட் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர்.
மருத்துவர் அருணாசலம்

முதல் அலையின்போது தமிழகத்தில் இந்த மருந்து கோவிட்-19 சிகிச்சைக்கான நெறிமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கோவிட் மரணங்களைக் குறைத்ததில் இந்த மருந்துக்குப் பெரும்பங்கு உண்டு. உலக அளவில் கோவிட் மரணங்கள் 2.5 - 3.3 சதவிகிதம் வரை இருந்தபோது, இந்தியாவில் வெறும் 1.4 சதவிகிதமாகக் கட்டுப்படுத்தியதுக்கு இந்த மருந்து பெரும் உதவி புரிந்தது.

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டு அறிகுறிகளற்ற லேசான பாதிப்பிலிருப்பவர்களுக்கு இந்த மருந்து தேவையில்லை. ஆனால், சி.டி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குச் சென்றவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சுவாசப் பாதை மற்றும் தொண்டைப் பகுதியில் மட்டுமே தொற்று காணப்படுபவர்களுக்கும் இந்த மருந்து அவசியமில்லை. நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினால் போதுமானது.

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

தீவிர கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்த மருந்தைக் கொடுக்கும்போது நல்ல பலனை அளிக்கிறது. ஆனால், தொற்று உடல் முழுவதும் பரவி ரத்தத்தில் நச்சேற்றம் (Sepsis) உருவாகும் நிலைக்குச் சென்ற பிறகு, எந்த ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மருந்தும் வேலை செய்யாது. இது ரெம்டெசிவிருக்கும் பொருந்தும்.

எத்தனை டோஸ் கொடுக்க வேண்டும்?

முதல் நாள் இரண்டு டோஸ் மருந்து வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு டோஸ் வீதம் நோயாளியின் நிலையைப் பொறுத்து மூன்று, ஐந்து அல்லது ஏழு நாள்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். இந்த மருந்தின் உண்மையான விலை ஒவ்வொரு பிராண்டுக்கு ஏற்ப ஒரு டோஸ் ரூ.800 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டது.

COVID-19 patient
COVID-19 patient
AP Photo / Jeff Roberson

பற்றாக்குறை ஏன்?

முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. அப்போதே பல மருத்துவமனைகள் இந்த மருந்துக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தனர். நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய பிறகு இந்த மருந்து தாராளமாகக் கிடைத்தது. ஆனால், மார்ச் மாதத்தில் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, இந்த மருந்துக்கு கூடுதல் தேவை ஏற்பட்டது.

அப்போது பிற மாநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மருந்தை மருந்து நிறுவனங்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பின என்று கூறப்படுகிறது. தேவை இருந்ததால் அதிக விலைக்கு இந்த மருந்தை வாங்குவதற்கு அம்மாநில மருத்துவமனைகள் தயாராக இருந்தன. அதனால் பிற மாநிலங்களில் இருப்பிலிருந்த மருந்து கறுப்புச் சந்தையில் கூடுதல் விலைக்கு மகாராஷ்டிராவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது பிற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த மருந்துக்குத் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மூடப்பட்ட கோவிட் வார்டுகள் மறுபடி திறக்கப்பட்டு நோயாளிகளை அனுமதிக்கும்போது சாதாரண இருப்பு வைக்கப்படும் அளவுகூட ரெம்டெசிவிர் இல்லாமல் போய்விட்டது.

Covid-19 Pandemic
Covid-19 Pandemic

தட்டுப்பாடு நீடித்தால்...

ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதால் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர். ரெம்டெசிவிர் நேரடியாக வைரஸின் தாக்கத்தைக் குறைக்கும். ஆனால் ஸ்டீராய்டு மருந்துகள் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பக்க விளைவுகளுக்குத்தான் கொடுக்கப்படும்.

ஸ்டீராய்டு மருந்துகளும் அதிக பக்கவிளைவுகளைக் கொண்டவை. இந்தியாவில் நீடிக்கும் தட்டுப்பாட்டின் காரணமாகத்தான் ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக உள்நாட்டில் தேவையுள்ளவர்களுக்கு இந்த மருந்து கிடைக்கும்" என்கிறார்.

நியாயமாகப் பயன்படுத்துங்கள்!

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை நியாயமான முறையில் மருத்துவமனைகள் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் ஜெ.ஏ.ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு என்பது தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் நடந்த குளறுபடிகளால் உருவாகியுள்ளது. இந்த மருந்தை நியாயமான முறையில் பயன்படுத்துவதன் மூலம் தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும். அதாவது உண்மையாகவே இந்த மருந்து தேவையிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இதை வழங்க வேண்டும்.

ஐ.எம்.ஏ தேசியத் தலைவர் 
மருத்துவர் ஜெயலால்
ஐ.எம்.ஏ தேசியத் தலைவர் மருத்துவர் ஜெயலால்
விகடன்
`கோவிட்-19' : 2-ம் அலை தீவிரமடைய காரணமாகும் தமிழ்நாடு... மத்திய அரசின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

லேசான பாதிப்புள்ளவர்களுக்கு இந்த மருந்து எந்தப் பலனையும் அளிக்காது என்பதால் அவர்களுக்கு இதைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மிதமான பாதிப்புள்ள, ஆக்ஸிஜன் உதவியுடன் இருப்பவர்களுக்கு இதைக் கொடுக்கலாம். அந்த வகை நோயாளிகளிலும் தீவிர கல்லீரல் அல்லது சீறுநீரக பாதிப்பு, கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்கள், 12 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.

ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் ரெம்டெசிவிர் மருந்தின் பயன்பாட்டை அதிகளவில் குறைக்க முடியும். எனவே, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், மருத்துவமனையை அணுகுதல் இரண்டையும் சரியாகப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருந்து நிறுவனங்கள் இம்மருந்தின் உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் மருந்தின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு