Published:Updated:

வீடோ, ஏ.சி காரோ... காற்று மாசுபாடு எப்படியெல்லாம் உங்களை பாதிக்கலாம் தெரியுமா?

smog in New Delhi
smog in New Delhi ( AP Photo/Manish Swarup )

காற்று மாசு ஏற்படுவதற்கு வெளிப்புறத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குள்ளேயே காற்றை மாசுபடுத்தும் பல்வேறு செயல்களை நாம் செய்கிறோம்.

நம்மில் பத்தில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். காற்று மாசுபாடு நிரந்தர பிரச்னையாக உருமாறியிருக்கிறது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கோவிட்-19 தொற்றின் பிடியில் இருக்கும் நேரத்தில் காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகிறது. காற்று மாசுபாடு தொடர்பான ஆன்லைன் விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மூலம் நடைபெற்றது.

பொறியாளர் சுந்தர்ராஜன்
பொறியாளர் சுந்தர்ராஜன்

நிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.சுந்தர்ராஜன், ``உலக சுகாதார நிறுவனம், உலகைப் பாதிக்கும் புதிய புகையிலை, காற்று மாசுபாடுதான் என்று தெரிவித்துள்ளது. இதுவரை புகையிலைதான் கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு காரணமாக இருந்தது.

அதைத் தற்போது காற்று மாசுபாடு முந்தியுள்ளது. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்புக்கு காற்று மாசுபாடு காரணமாக அமைகிறது. தற்போது உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுக்கும் காற்று மாசுபாட்டுக்கும் தொடர்புள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.பி.கராமத், ``நான்கில் ஒரு குழந்தையின் உயிரிழப்புக்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, சாலைப் போக்குவரத்து, புகைத்தல், விறகடுப்பு மற்றும் எரிபொருள் பயன்பாடு, தொழிற்சாலைகளின் பெருக்கம், கால்நடைகளின் கழிவுகள், விவசாயத்தில் பயிர்களை எரித்தல், பட்டாசுகள் பயன்பாடு ஆகியவை வெளிப்புற காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைகின்றன.

Smog envelopes the skyline in New Delhi
Smog envelopes the skyline in New Delhi
AP Photo/Altaf Qadri

காற்று மாசு ஏற்படுவதற்கு வெளிப்புறத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குள்ளேயே காற்றை மாசுபடுத்தும் பல்வேறு செயல்களை நாம் செய்கிறோம். வீட்டில் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தும் பொருள்கள், ஏர் ஃபிரெஷ்னர், வீட்டுக்குள் புகைபிடித்தல், காருக்குள் உருவாகும் மாசுபாடு ஆகியவை உட்புற காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

வீட்டில் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தும் பொருள்கள், ஏர் ஃபிரெஷ்னர் ஆகியவற்றில் நறுமணத்துக்காகப் பல்வேறு ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவை நமது நுரையீரலுக்கு ஒவ்வாதவை. அவற்றைப் பயன்படுத்தும்போது மாசுபடும் காற்றை நாம் சுவாசிக்கிறோம்.

ஏ.சி போட்ட காருக்குள் இருந்த காற்றைப் பரிசோதித்ததில் வெளிப்புறத்தில் இருக்கும் மாசுபாட்டின் அதே அளவு இருந்தது கண்டறியப்பட்டது. அதனால் காருக்குள் ஏ.சி போட்டுக்கொண்டு பயணித்தாலும் மாசுபாடான காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.

காற்று மாசுக்கு குழந்தைகள் அதிகமாக ஆளாகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 93 சதவிகித குழந்தைகள் காற்று மாசுபாடான சுற்றுச்சூழலில் வசிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளிலுள்ள 99 சதவிகித குழந்தைகள் காற்று மாசுள்ள சூழலில்தான் வசிக்கின்றனர்.

smog and dust in New Delhi
smog and dust in New Delhi
AP Photo/Altaf Qadri

காற்று மாசின் காரணமாக ஏற்பட்ட மூச்சுக்குழாய் தொற்றின் காரணமாக 2016-ம் ஆண்டில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட 5.43 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏழை மற்றும் வளரும் நாடுகளை ஒப்பிடும்போது வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் குறைவான அளவே காற்று மாசுபாடுக்கு உள்ளாகின்றனர்.

இந்தியா, மேற்கு பசிபிக் நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளில் குழந்தைகள் அதிக அளவில் காற்று மாசுக்கு ஆளாகின்றனர்.

காற்றில் உள்ள மாசு பெரிய துகளாக இருந்தால் தரையில் படிந்துவிடும். படியாத நுண்துகள்கள் காற்றில் கலந்து அதை மாசுபடுத்தும். குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பார்கள் என்பதால் எளிதில் விரைவாக அவர்களின் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

குழந்தைகளுக்கு நுரையீரல் திறன் குறைவாக இருப்பதால் பெரியவர்களைக் காட்டிலும் அதிக அளவில் மூச்சுவிடுவார்கள். இதனால் மாசான காற்று நுரையீரலுக்குள் அதிக அளவில செல்லும். வீட்டுக்குள் பயன்படுத்தும் சுத்திகரிக்கும் திரவம், வீட்டுக்குள் புகைபிடிப்பதால் வெளியேறும் புகை உள்ளிட்டவற்றையும் குழந்தைகள் சுவாசிப்பார்கள். மேலும், குழந்தைகள் ஒருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.

Dr. S.P.karamath
Dr. S.P.karamath

உதாரணமாக, குழந்தையை ஓரிடத்தில் விளையாட விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் செல்லும்வரை அங்கேதான் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் புகை கலந்த காற்று அந்த இடத்தில் வந்தால்கூட அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்குத் தெரியாது.

கர்ப்பிணிகள் அதிகமாகக் காற்று மாசுக்கு உட்படும்போது குறைமாதப் பிரசவம், கருச்சிதைவு, பிறக்கும்போது குழந்தை இறந்து போதல், பிறந்த பிறகு உயிரிழத்தல், குறைவான எடையுடன் பிறத்தல் ஆகியவை ஏற்படலாம்.

இதுதவிர, காற்று மாசுபாடு, கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் மூளையின் செயல்திறனையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா போன்ற பிறவிக் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Air Pollution
Air Pollution
காற்று மாசுபாட்டுக்கும் கொரோனாவுக்கும் தொடர்புண்டா? - ஓர் அலசல்!

பிரச்னைக்குத் தீர்வு என்ன?

காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் பலவற்றுக்கு சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டும். தனிமனிதர்கள் செய்யக்கூடியவற்றை எடுத்துக்கொண்டால் வீட்டில் புகைபிடிப்பது, அதிக ரசாயனம் வெளிப்படும் பொருள்களின் பயன்பாடு ஆகியவறறைத் தவிர்க்க வேண்டும். அதுதவிர, காற்றோட்டமுள்ள வீட்டில் வசிப்பது அல்லது வீட்டில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்யலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு