Published:Updated:

வீட்டிலும் நிகழும் திடீர் மரணங்கள்; இறப்பை உறுதிசெய்வது எப்படி? - விளக்கும் மருத்துவர்கள்

Doctor (Representational Image)
Doctor (Representational Image) ( Photo by Online Marketing on Unsplash )

இயற்கை மரணமா அல்லது சந்தேகிக்கப்படும் மரணமா என்பதை மருத்துவர் உறுதிசெய்த பின்னரே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்

வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து ஏழு மாத கர்ப்பிணிக்குப் பிரசவ வலி ஏற்பட, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை சுவாசப் பிரச்னையால், பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாகச் செவிலியர்கள் உறவினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையின் தந்தையிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

death
death
Representational image
தேனி:"தவறாகக் கருதிவிட்டார்"- பிறந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது குறித்து டீன் விளக்கம்!

இறந்த குழந்தையைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யக் கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர் உறவினர்கள். குழி தோண்டப்பட்டு தயார் நிலையிலிருந்த இடத்தில் குழந்தையைப் புதைப்பதற்காகத் தூக்கியபோது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டதைக் கவனித்தனர். பரிசோதித்துப் பார்த்ததில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர், குழந்தையை உடனடியாக அதே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இந்நிலையில், வென்டிலேட்டர் மூலம் குழந்தைக்குச் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

இந்தச் சம்பவம் குறித்தும் மரணம் நிகழ்ந்தால் அதை உறுதி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் பொதுமருத்துவர் விஷாலிடம் பேசினோம்.

``குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியடைந்திருக்காது. மூச்சு விடுவதில் மிகுந்த சிரமமிருக்கும். கூடவே, குழந்தை கழுத்தில் கொடி சுற்றி பிறந்தது இன்னும் நிலைமையை மோசமாகியிருக்கக்கூடும். இப்படியான சூழலில் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம். ஐ.சி.யு-வில் அனுமதித்து, தொடர் தீவிர சிகிச்சை அளிப்பதே குழந்தையின் நிலையை மேம்படுத்த உதவும். இந்தச் சூழலை மிகுந்த கவனத்துடன் கையாள்வதே குழந்தையின் உயிரைக் காப்பாற்றும்.

விஷால்
பொது மருத்துவர்
விஷால் பொது மருத்துவர்

வீட்டில் திடீர் மரணம் நடக்கும் பட்சத்தில் இறந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கு மூச்சு இருக்கிறதா, இதயத் துடிப்பு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்யவேண்டும். மூச்சையோ இதயத்துடிப்பையோ வைத்து உறுதிசெய்யத் தெரியவில்லை என்றால் சிகிச்சை மேற்கொண்டுவந்த மருத்துவரை அழைக்கலாம். ஒருவேளை, அவரால் நேரடியாக வந்து மரணத்தை உறுதிசெய்ய இயலாமல் போனால் 108 ஐ அழைக்கலாம். செவிலியர்கள் அல்லது பயிற்றுவிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களே இறப்பை உறுதிசெய்து கூறிவிடுவர். அதே வேளை, மற்றொருமுறை மருத்துவர் மரணத்தை உறுதிசெய்து கையெழுத்துடன் கூடிய இறப்புச் சான்றிதழ் வழங்கினால் இறுதிச்சடங்கைப் பூர்த்தி செய்ய முடியும்.

மருத்துவமனை மரணங்கள் என்றால் மருத்துவர்கள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே, குறிப்பாக ஈ. சி. ஜி. பரிசோதனைக்குப் பின்தான் இறப்பை உறுதி செய்வார்கள். ஆனால், வீட்டில் நடக்கும் மரணங்களுக்கு ஈ.சி.ஜி பரிசோதனை செய்ய முடிவதில்லை. இறந்த நபர் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தாரோ அவரிடமே மரணத்தை உறுதி செய்ய வேண்டும். வயதானவர்கள் வீட்டிலேயே இறக்கும் பட்சத்தில் வழக்கமாக சிகிச்சை மேற்கொண்டுவரும் மருத்துவரிடம் மரணத்தை உறுதி செய்ய வேண்டும்.

எந்த இறப்பையும் உறுதி செய்வது கிளினிக்கல் ஜட்ஜ்மென்ட்தான். வீட்டில் நடக்கும் மரணங்களுக்குப் பல மருத்துவமனைகள் பெரும்பாலாக இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த மருத்துவரிடம் வழக்கமாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறதோ அவர்தான் மரணத்தை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கவேண்டும். மரணத்தில் சந்தேகம் இருந்தாலும் இல்லையென்றாலும் அதை தெளிவுபடுத்துபவர் அந்த மருத்துவர்தான். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் சடலம் அரசு மருத்துவனைக்கு மாற்றப்படும், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். விசாரணை முடிந்து சந்தேகம் தெளிவான பின்தான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்" என்றார் அவர்.

அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கதிரவன்
அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கதிரவன்

``வீட்டில் மரணம் ஏற்பட்டால் இறந்துவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபருக்குக் கழுத்தில் நாடித் துடிப்பும் சுவாசமும் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும், அடுத்தாக கிள்ளிப் பார்க்கலாம். வயதான நபர் தொடர் சிகிச்சையிலிருந்து வந்தவராக இருந்தால் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தாரோ அவரிடமே இறப்பை உறுதி செய்ய வேண்டும். சூழ்நிலை காரணமாக அப்படி உறுதி செய்ய முடியாத பட்சத்தில், அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு வசதி இருக்கும் மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லையென்றால், அரசு மருத்துவமனைக்கும் போகலாம். இயற்கை மரணமா அல்லது சந்தேகிக்கப்படும் மரணமா என்பதை மருத்துவர் உறுதிசெய்த பின்னரே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்" என்கிறார் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கதிரவன்.

அடுத்த கட்டுரைக்கு