Published:Updated:

கோவிட் 19 பாதிப்பைக் குறிக்கும் சி.டி.ஸ்கேன் மதிப்பெண்... எப்படி வழங்கப்படுகிறது?

CT Scan
CT Scan ( Photo by MART PRODUCTION from Pexels )

சி.டி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் கோவிட்-19 தொற்றை மட்டும் கண்டறிவதற்கு ஒரு குறியீடு உள்ளது. அதை CO-RADS என்பார்கள். கோவிடுக்கான ரேடியாலஜி ஸ்கோர் என்பதன் சுருக்கம்தான் அது.

கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. நோயைக் கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யாமலேயேகூட சி.டி. ஸ்கேன் எடுப்பவர்களும் உள்ளனர். கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை சி.டி. ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தொற்றை உறுதி செய்யவும், தொற்றின் பாதிப்பைக் கண்டறியவும் சிலர் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுக்கவேண்டிய நிலையும் உண்டாகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவரான ரந்தீப் குலேரியா நேற்று, ``ஒரு சி.டி.ஸ்கேன் என்பது 300-400 எக்ஸ்-ரேக்களுக்குச் சமம். இளம் வயதில் அதிகப்படியான சி.டி.ஸ்கேன்களை எடுப்பது பிற்காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்" என சி.டி.ஸ்கேன் குறித்து தெரிவித்துள்ள கருத்தானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சி.டி ஸ்கேன் பரிசோதனை முடிவை வைத்து நோயை எப்படிக் கண்டறிகிறார்கள், இந்தப் பரிசோதனை யாருக்குத் தேவை என்பது போன்ற covid சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் ரேடியாலஜி மருத்துவர் எல்.முரளி கிருஷ்ணா.

``சி.டி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் கோவிட்-19 தொற்றை மட்டும் கண்டறிவதற்கு ஒரு குறியீடு உள்ளது. அதை CO-RADS என்பார்கள். கோவிடுக்கான ரேடியாலஜி ஸ்கோர் என்பதன் சுருக்கம்தான் அது. சி.டி ஸ்கேன் எடுத்த பிறகு தொற்றின் தன்மையைப் பொறுத்து 1 முதல் 6 வரை CO-RADS மதிப்பெண் வழங்கப்படும்.

Covid-19
Covid-19

CO-RADS 1 - நுரையீரலில் எந்தத் தொற்றும் இல்லை.

CO-RADS 2 - வேறு வைரல் அல்லது பாக்டீரியா தொற்று உள்ளது. அது கோவிட் இல்லை.

CO-RADS 3 - ஏதோ தொற்று உள்ளது. எதுவென்று உறுதியாகக் கண்டறிய முடியவில்லை.

CO-RADS 4 - கோவிட் தொற்றாக இருக்கும் என்று அதிக சந்தேகம் உள்ளது.

CO-RADS 5 - நிச்சயமாக கோவிட் தொற்று உள்ளது.

CO-RADS 6 - நுரையீரலில் தொற்று கண்டறியப்பட்டாலும் கண்டறியப்படாவிட்டாலும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துவிட்டாலே அந்த நோயாளிகளுக்கு இந்த மதிப்பெண் வழங்கப்பட்டுவிடும்.

4, 5 மதிப்பெண்ணைக் கண்காணிக்க வேண்டும்!

ஆய்வகங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தால் அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யாமல், சி.டி ஸ்கேன் பரிசோதனையில் CO-RADS 4 அல்லது 5 மதிப்பெண் பெற்றாலே அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், அந்த மதிப்பெண் வந்திருந்தால் நிச்சயம் அது கோவிட்-19 தொற்றாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால்.

CT Scan
CT Scan

தீவிரத்தைக் குறிப்பிடும் மதிப்பெண்

நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்றின் தீவிரத்தைக் கணக்கிடுவதற்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். அதற்கு நுரையீரலை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்வோம். வலது நுரையீரல் அளவில் சற்று பெரிதாக இருக்குமென்பதால் அது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படும். இடது நுரையீரல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படும். பிரிக்கப்பட்ட ஒரு பாகத்துக்கு 5 மதிப்பெண் வீதம் 5 பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மதிப்பெண் 1 - 5 சதவிகிதத்துக்கும் குறைவாகத் தொற்று உள்ளது.

மதிப்பெண் 2 - 5 முதல் 25% தொற்று உள்ளது.

மதிப்பெண் 3 - 26 - 49% தொற்று உள்ளது.

மதிப்பெண் 4 - 50 - 75% தொற்று உள்ளது

மதிப்பெண் 5 - 75 சதவிகிதத்துக்கும் மேல் தொற்று உள்ளது.

ஒருவருக்கு நோய் மேலும் தீவிரமடைகிறது என்றால், நுரையீரலில் தொற்றின் தீவிரத்தைக் கணக்கிட மீண்டும் சி.டி ஸ்கேன் தேவைப்படலாம்.
ரேடியாலஜி மருத்துவர் எல்.முரளி கிருஷ்ணா

ஒவ்வொரு பாகத்திலும் எத்தனை சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தனித்தனியே கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும். உதாரணத்துக்கு முதலாவது பாகத்தில் 3% பாதிப்புள்ளது என்றால் 1, இரண்டாவது பாகத்தில் 10% பாதிப்புள்ளது என்றால் 2, மூன்றாவது பாகத்தில் 40% பாதிப்பு என்றால் 3, நான்காவது பாகத்தில் 60% பாதிப்பு என்றால் 4, ஐந்தாவது பாகத்தில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றால் 5 என்று தனித்தனியே மதிப்பெண் வழங்கப்படும்.

இறுதியில் மதிப்பெண் அனைத்தும் சேர்த்துக் கணக்கிட்டு மொத்தம் 25-க்கும் 15 என்று கொடுக்கப்படும். ஒட்டுமொத்த மதிப்பெண் 25-ஐ நூற்றுக்கு கன்வர்ட் செய்து ஒட்டுமொத்த நுரையீரல் பாதிப்பு 40%, 70% சதவிகிதம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எத்தனை மதிப்பெண் பெற்றால் ஆபத்தில்லை?

மதிப்பெண் 8-க்கும் குறைவாக இருந்தால் லேசான பாதிப்பு. 9 முதல் 15 இருந்தால் மிதமான பாதிப்பு, 16-க்கு மேல் இருந்தால் தீவிர பாதிப்பு என்று நோயாளிகள் வகைப்படுத்தப்படுவார்கள். நோயின் தீவிரத்தைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும் என்பதற்காகத்தான் சி.டி ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. மதிப்பெண் 8-க்கு குறைவாகத்தான் இருக்கிறது, வயதும் அதிகமில்லை, வேறு எதுவும் இணை நோய்கள் இல்லை என்றால் அந்த நோயாளிகளுக்கு ஹோம் க்வாரன்டீன் பரிந்துரைக்கப்படும்.

Radiologist Dr.Murali Krishna
Radiologist Dr.Murali Krishna

9 -15 மதிப்பெண் பெற்றால்கூட இளைஞர்கள், வேறு இணை நோய்கள் இல்லையென்றால் அவர்களுக்கும் ஹோம் க்வாரன்டீன் அளிக்கப்படுகிறது. ஆனால், இணை நோய்கள் உள்ளவர்கள், புகைப்பழக்கம், உடல்பருமன் போன்ற ஆபத்தான பட்டியலில் உள்ளவர்கள், வயதானவர்கள் என்றால் 9-15 மதிப்பெண் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். 15 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் எந்த வயதினராக இருந்தாலும் நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

எல்லா நுரையீரல் தொற்றுக்கும் தனித்தனி மதிப்பெண் உண்டா?

ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மதிப்பெண் என்று இதுவரை கிடையாது. பெருந்தொற்றுக் காலம் என்பதால் கோவிட் தொற்றுக்கு மட்டும் இதுபோன்ற மதிப்பெண் முறை அப்டேட் செய்யப்பட்டது. காசநோய் உள்ளிட்ட பிற வகை தொற்றுகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பேட்டர்ன் ஸ்கேனில் தெரியும். அதை வைத்து மருத்துவர்கள் நோயைக் கண்டறிவார்கள்.

Lungs
Lungs
Image by kalhh from Pixabay

சாதாரணமான எல்லாருக்கும் நுரையீரலில் ஏதாவது தொற்று இருக்குமா?

அதற்கு வாய்ப்பில்லை. நிறைய கோவிட் நோயாளிகளுக்கே நுரையீரலில் தொற்று ஏற்படுவதில்லை. ஆர்.டி.பி.சி.ஆர் மட்டுமே பாசிட்டிவ்வாக இருக்கும். மூக்கிலிருந்து நுரையீரல் வரையுள்ள பகுதியில் ஏற்படும் தொற்றுகளை மேல் சுவாசப் பாதைத் தொற்று, நுரையீரலீல் ஏற்படும் தொற்றை கீழ் சுவாசப்பாதைத் தொற்று என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

சாதாரண சளி, தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்று இவையெல்லாம் மேல் சுவாசப் பாதை தொற்று என்பதால் நுரையீரலை பாதிக்காது. அதனால் சி.டி ஸ்கேன் செய்தாலும் அதில் எதுவும் தெரியாது. மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டு கீழ் சுவாசப்பாதைத் தொற்று இருந்தால்தான் நுரையீரலில் தொற்று காணப்படும். அதற்கு சி.டி ஸ்கேன் தேவைப்படும்.

கோவிட் கண்டறிந்து நோய் குணமான பிறகு மீண்டும் சி.டி ஸ்கேன் எடுக்க வேண்டுமா?

கோவிட் குணமான பிறகு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையோ, சி.டி ஸ்கேன் பரிசோதனையோ மீண்டும் செய்யத் தேவையில்லை என்று வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிட்டால் அதன் தாக்கம் 6-8 வாரங்கள் நீடிக்கும். நுரையீரல் குணமாகும் செயல்முறை மெள்ள நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்பதால் நோய் குணமான 15 நாள்களுக்குப் பிறகு சி.டி எடுத்துப் பார்த்தாலும் தொற்று இருப்பதுபோல் காட்டும்.

அதனால் குணமடைந்தவர்களுக்குத் தேவையில்லை. ஒருவேளை ஒருவருக்கு நோய் மேலும் தீவிரமடைகிறது என்றால், நுரையீரலில் தொற்றின் தீவிரத்தைக் கணக்கிட மீண்டும் சி.டி ஸ்கேன் தேவைப்படலாம்.

Pregnancy
Pregnancy
Pixabay
சி.டி ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர்... கொரோனாவைக் கண்டறிய சிறந்த பரிசோதனை எது? #ExpertOpinion

யாருக்கெல்லாம் சி.டி ஸ்கேன் செய்யக் கூடாது?

ஸ்கேன் செய்யும்போது சிறிய அளவில் கதிர்வீச்சு வெளியாகும் என்பதால் கர்ப்பிணிகளுக்கு சி.டி ஸ்கேன் செய்யக் கூடாது. கதிர்வீச்சு சில நேரங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். அதே போன்று கருத்தரித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பவர்களும் இந்த ஸ்கேன் செய்யக் கூடாது. வளரும் பெண் குழந்தைகளுக்கு உள்ளுறுப்புகள் வளர்ச்சியடையும் காலம் என்பதால், கதிர்வீச்சு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால் அவர்களுக்கும் செய்யப்படுவதில்லை.

அதன் காரணமாக கர்ப்பிணிகளுக்கு அவர்களின் அறிகுறிகளை வைத்து மட்டுமே சிகிச்சையளிக்கப்படும். தற்போது தீவிர பரவல் காணப்படுவதால் சி.டி ஸ்கேன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு கதிர்வீச்சைத் தடுக்கும் ஏப்ரன் வயிற்றுப் பகுதியில் போடப்பட்டு, நெஞ்சுப் பகுதியில் ஸ்கேன் செய்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு