
உட்செவியின் நரம்பு பாதிக்கப்பட்டு செவித்திறனை இழந்துவிட்டால் இயற்கையாக அந்தத் திறனை மீட்டெடுக்க முடியாது.
நிபுணர்கள் கோவிட்-19 பெருந்தொற்றை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து கொண்டிருக்கும் வேளையில், அதன் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே போவது கவலையளிக்கிறது. கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைக் கையாள தனி சிகிச்சை மையம் தொடங்கும் அளவுக்கு பின்விளைவுகள் அதிகமாக உள்ளன. அதன் வரிசையில் தற்போது செவித்திறன் இழப்பும் சேர்ந்துள்ளது.

இந்தத் தகவலைக் கேட்கும்போது `கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா?' என்று கேட்பதுபோல் சம்பந்தமே இல்லாத பிரச்னையாகத் தோன்றலாம். ஆனால், மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டு காது கேட்காமல் போய்விட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவும் கோவிட்-19 தொற்றுக்கும், நிரந்தரமாகக் காது கேட்கும் திறனை இழப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 45 வயது ஆண் ஒருவர் கோவிட் சிகிச்சைக்குப் பிறகு, செவித்திறனை இழந்துவிட்டதாக இங்கிலாந்திலுள்ள காது- மூக்கு - தொண்டை மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னையும் இருந்திருக்கிறது. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சுவாசிப்பதில் பிரச்னை இருக்கவே அவருக்கு ஆக்ஸிஜனும் செலுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு வாரம் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய நிலையில், சுவாசிப்பதற்கு செலுத்தப்பட்ட டியூப் நீக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சென்றவரின் இடது காதில் இரைச்சல் சத்தம் கேட்பது போன்று தோன்றியிருக்கிறது. தொடர்ந்து சட்டென்று இடது காது கேட்காமல் போய்விட்டது. மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துபடி, கோவிட்-19 பாதிப்புக்கு முன் அவருக்கு காதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆஸ்துமா பிரச்னையைத் தவிர, அவருக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. மிகவும் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.
அவர் செவிப்பாதையை ஆராய்ந்தபோது அதில் அடைப்போ அழற்சியோ தென்படவில்லை. காது கேட்கும் பரிசோதனை செய்து பார்த்தபோது இடது காது கேட்கவில்லை. இதன் அடிப்படையில் செவித்திறன் பாதிக்கப்படுவதும் கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய விளைவாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவது கண்டறியப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, சிகிச்சை பெறும் நோயாளிகளின் செவித்திறன் குறித்தும் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி காது-மூக்கு-தொண்டை மருத்துவர் சுதா மகேஸ்வரியிடம் கேட்டோம்:
``கோவிட்-19 பாதிப்பு உள் காது நரம்புகளைப் பாதிக்கிறது. பாதிப்பின் அளவு 40 அல்லது 50 சதவிகிதம் என நபருக்கு நபர் வேறுபடும். எப்படி கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறதோ, அதே போன்று காதுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களிலும் ரத்த உறைவு ஏற்பட்டு செவித்திறன் பாதிக்கப்படுகிறது.
உட்செவியின் நரம்பு பாதிக்கப்பட்டு செவித்திறனை இழந்துவிட்டால் இயற்கையாக அந்தத் திறனை மீட்டெடுக்க முடியாது.
செவித்திறன் இழப்பு 70 அல்லது 80 சதவிகிதம் பாதித்தால் காது கேட்கும் கருவி பொருத்துவதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். 100 சதவிகிதம் பாதிக்கப்படும் பட்சத்தில் கருவி பொருத்த முடியாது. முழுவதுமாக செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து காக்ளியர் இம்ப்ளான்ட் எனப்படும் கருவியைக் காதுக்குள் பொருத்துவதன் மூலம் செவித்திறன் பெறலாம். மும்பையில் கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, செவித்திறன் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அங்கு பொருத்தியிருக்கும் கருவிகள், உபகரணங்களின் இரைச்சல் சத்தத்தின் காரணமாகக் காது நரம்புகள் பாதிக்கப்படலாம். அந்தநேரத்தில் எடுக்கும் சில உயிர் காக்கும் மருந்துகளும் ரத்த உறைவை ஏற்படுத்தி செவித்திறனை பாதிக்கலாம்.
திடீரென்று செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் அது கோவிட்-19 பாதிப்பாகக்கூட இருக்கலாம். எனவே, கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, செவித்திறனில் பாதிப்பு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டும். திடீரென்று யாருக்கேனும் செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே கோவிட்-19 பரிசோதனை செய்து பார்க்கத் தயங்கக் கூடாது" என்றார்.

கொரோனா வைரஸ் என்ற நுண்கிருமி மனிதனின் ஆணி வேர் வரை அசைத்துப் பார்த்துவிடுகிறது. எனவே, ஊரடங்கு நிலை முடிந்து நம்முடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாலும் நோய்த் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது தனிமனிதனின் கடமை.