#Welcome2021: மானுடத்தின் மாபெரும் நம்பிக்கை... உலகை மீட்குமா தடுப்பூசிகள்?

2021-ம் ஆண்டு நம்பிக்கை தரக்கூடியதாக, நீண்ட இருள்சூழ்ந்த குகையின் மறுமுனையில் தெரியும் சிறு வெளிச்சமாக நாம் நம்புவது கொரோனா தொற்றுக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளைத்தான்.
கொரோனா பெருந்தொற்று 2019-ன் கடைசி மாதங்களில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவி நமது அன்றாட வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் 2020-ம் வருடம் முழுக்கவே அசைத்துப் பார்த்துவிட்டது.
எப்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. மேலை நாடுகளில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து நோய்த்தொற்று அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் நாம் முதல் அலையின் தாக்கத்தில் இருந்து சற்று விடைபெற்று வருகிறோம்.
தற்போது பிரிட்டன் நாட்டில் சிறு மரபணு உருமாற்றம் நடந்திருக்கும் கொரோனா வைரஸ் முன்பைவிட மிக அதிகமான வேகத்தில் பரவுகிறது என்பது மக்களுக்கு அச்ச உணர்வைக் கூட்டும் செய்தியாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பொதுப் போக்குவரத்து, சர்வதேசப் போக்குவரத்து போன்றவை பழைய சாதாரண நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதிக்கத் தொடங்கி இருக்கின்றன. `மறுபடியும் முதல்ல இருந்தா?' என்று மீம்கள் வரத்தொடங்கி விட்டன.

இப்படியே சென்றால் 2021 என்ன ஆகும், மீண்டும் லாக்டௌன் போடப்படுமா என்பன போன்ற பேச்சுகள் அரசல் புரசலாகக் காதில் விழுகின்றன. 2021-ல் என்ன நடக்கும் என்பதை ஆரூடம் சொல்ல நான் ஜோதிட விற்பன்னர் அல்லவே. ஆயினும், மருத்துவ அறிவியலின் துணைகொண்டு நம்மால் 2021 எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். 2020-ன் ஆரம்ப மாதங்களில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையை நாம் முன் அனுபவம் ஏதுமின்றி சந்தித்தோம்.
கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரில் நாஜிக்கள் பிடியில் இருந்த பிரான்ஸை மீட்க 1944-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி நார்மண்டி பகுதியில் உள்ள கடற்கரையோரம் நேச நாடுகளின் கூட்டுப்படை இறங்கியது போன்ற ஒரு நிகழ்வு.
அதிலும் ஒமஹா கடற்கரையில் நாஜிக்களின் குண்டுகளையும் தோட்டாக்களையும் நேருக்கு நேர் சந்தித்து பல அமெரிக்க நேச நாட்டுப்படை வீரர்கள் மடிந்தனர். அதைப் போன்று கொரோனா தொற்றின் முதல் அலையில் நாம் பல மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விலைமதிப்பற்ற பல மக்களின் இன்னுயிர்களை இழந்தோம்.
இருப்பினும், தொடர்ந்து கொரோனா தொற்றைக் கையாள்வதன் சூட்சுமங்களை அறிந்தோம். மருத்துவமனைகள் யாவும் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிந்த அந்த முதல் அலை உச்சத்தில் இருந்த மாதங்களில் இரவு பகல் என உறங்காமல் ஓய்வில்லாமல் உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் யாவரும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத்தேர்ந்துள்ளனர்.

இரண்டாம் அலை ஒன்று ஏற்பட்டாலும் அதைச் சந்திக்கும் துணிவு நமது சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடம் செய்த உழைப்பால் ஏற்பட்ட சோர்வு ஒருபக்கம் இருப்பினும், தேவை என்று வருகையில் ராணுவ வீரர்கள் போல் செயல்பட முன்கள மருத்துவப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மற்றொருபுறம் மக்களிடமும் சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருப்பதும் உண்மை. கொரோனா தொற்றில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி நாட்டின் மூலை முடுக்கெங்கும் பரவி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மாஸ்க் அணிந்து பல மாதங்களைக் கழித்தார்கள்.
முதல் அலையின் தாக்கத்தைக் குறைத்ததில் முகக்கவசங்களின் பங்கு நிச்சயம் உண்டு. ஆயினும், தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது. இரண்டாவது அலை வராது என்ற அதீத ஆபத்தான நம்பிக்கையில் நம்மவர்களில் பலரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதில்லை. இது ஆபத்தான போக்கு. இதை உடனே நாம் சரிசெய்தாக வேண்டும். இரண்டாம் அலை ஏற்பட்டால் அதன் தாக்கத்தைக் கணிசமான அளவு குறைக்கும் சக்தி - முகக்கவசம் அணியும் செயலுக்கு உண்டு.

2020-ல் நாடு மொத்தமும் சில மாதங்கள் லாக்டௌனில் வீட்டுக்குள் இருந்தது. இது சிறு குறு தொழில் முனைவோர் முதல் பெரிய தொழில் புரிவோர் வரை அனைவரையும் வெகுவாகப் பாதித்தது. இன்னும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வை புரட்டிப்போட்டது. இனி கனவிலும் இன்னொரு லாக்டௌனை பெரும்பான்மை மக்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். கொரோனாவைவிட வறுமை கொடியது என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்தே வைத்துள்ளனர். எனவே, 2021-ல் லாக்டௌன் ஏற்படாது என்று அதீத நம்பிக்கை கொள்வதைவிட அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மருத்துவ வரலாற்றில் எந்த ஒரு தொற்றுநோய்க்கும் இவ்வளவு வேகமாகத் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. அந்தச் சாதனையை கொரோனா தடுப்பூசிகள் நிகழ்த்தி உள்ளன.மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
தொழில், வேலை, கல்வி போன்ற அவசியத் தேவைகளன்றி வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆயினும், தற்போது கேளிக்கை காரணங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வந்து நிகழ்வுகளில் பங்குபெறும் சூழல் அதிகரித்திருக்கிறது. இது நிறைய மக்கள் சிறிய இடத்தில் ஒன்றுகூடும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உண்டு. பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் மீண்டும் லாக்டௌன் அமல்படுத்தப்பட்டுள்ளதையும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. அங்கெல்லாம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கே கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது கவலை தரும் விஷயமாக உள்ளது.
இவையனைத்தையும் தாண்டி 2021-ம் ஆண்டு நம்பிக்கை தரக்கூடியதாக, நீண்ட இருள்சூழ்ந்த குகையின் மறுமுனையில் தெரியும் சிறு வெளிச்சமாக நாம் நம்புவது கொரோனா தொற்றுக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளைத்தான். மருத்துவ வரலாற்றில் எந்த ஒரு தொற்றுநோய்க்கும் இவ்வளவு வேகமாகத் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை.
அந்தச் சாதனையை கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் நிகழ்த்தி உள்ளன. உலகம் மொத்தத்தின் பார்வையும் தடுப்பூசிகள் ஆராய்ச்சி மீது இருந்ததும், தங்கு தடையின்றி பொருளாதாரம் செலவிடப்பட்டதும், தடுப்பூசி ஆராய்ச்சியில் மனித சமுதாயம் அடைந்திருக்கும் முன்னேற்றம் ஆகியவையே இந்த வேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இதுவரை கொரோனாவுக்கு எதிராக 150 தடுப்பூசிகள் ஆய்வில் உள்ளன. அவற்றில் 5 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட ஆய்வுகளை முடித்து மனிதப் பயன்பாட்டுக்குத் தயாராகிவிட்டன.
இந்திய அரசால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பூசிகள்.
1. ஃபைஸர் நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசி.
2. மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி.
3. ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனத்தின் தடுப்பூசி
( கோவிஷீல்டு).
4. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி
( கோவாக்ஸின்).
5. நோவாவேக்ஸ் எனும் தடுப்பூசி.
6. சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்- டி.
7. ரஷ்யாவின் கமாலயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் ஐந்து தடுப்பூசி.
இவற்றுள் நோவாவேக்ஸ், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை இந்தியா அதிகம் தயாரித்து மக்கள் பயன்பெற உபயோகிக்கும் என்று தெரிகிறது. மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட அடுத்த நாளே பழைய நார்மல் நிலைக்கு, அதாவது முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளலாமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. நிச்சயம் அவ்வாறு பழைய நிலைக்கு உடனே திரும்ப இயலாது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள முதல் தலைமுறை கொரோனா தொற்று தடுப்பூசிகளானவை இவற்றைப் போட்டுக்கொள்ளும் ஒருவருக்கு நோய் நிலை ஏற்படாமலும் அந்த நோய் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்படவில்லை. அதனால் தொற்று ஏற்பட்டு அறிகுறிகளற்று இருப்பவரிடம் இருந்து பிறருக்குப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் 60-70% மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி கிடைக்கும் வரை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் 60-70% மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தால்தான் நமக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் (Herd Immunity) கிடைக்கும். ஆனால், 136 கோடி மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் கிட்டத்தட்ட 80-90 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கி முடிப்பது என்பது மிகவும் சவாலான மற்றும் காலமெடுக்கும் பணியாக இருக்கும். எனவே, இதை முறையாக நடைமுறைப்படுத்த முதலில் முன்கள மருத்துவப்பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் அதற்கடுத்து முதியோர்களுக்கும் அதற்கடுத்து மத்திய வயதினருக்கும் இறுதியில் இளைஞர்களுக்கும் என்ற வரிசைப்படி தடுப்பூசி வழங்கப்படும்.
இத்தனை கோடி தடுப்பூசிகளை உருவாக்க மற்றும் அவற்றை அடைக்கும் கண்ணாடிக் குப்பிகள் உருவாக்க மருந்து நிறுவனங்களுக்கு ஆறு முதல் எட்டு மாதங்களாகும். தவணை முறையில் அவை உற்பத்தி செய்து வழங்கிக்கொண்டே இருக்கப் படிப்படியாகத் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெறும். தோராயமாக நாம் நினைக்கும் அளவு பெரும்பான்மை ஜனத்தொகைக்கு தடுப்பூசியை வழங்கி முடிக்க ஒரு வருடம் முதல் ஒன்றரை வருட காலம் ஆகும். இந்தக் கால அளவு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம்.
இருப்பினும், தடுப்பூசிகளால் இந்தப் பெருந்தொற்றை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசிகள் போடப்பட்ட ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அவருக்கு நோய் நிலை ஏற்படாது. அவருக்கு அறிகுறிகள் தோன்றாது. எனவே, அவர் இருமவோ தும்மவோ மாட்டார். அவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தொற்று பரவாது. இதனால் தொற்று சங்கிலி அறுபடும். அடுத்து தடுப்பூசிகளின் பலனால் நோய் நிலை தீவிரமாகும் தன்மை மிகவும் குறைந்துவிடும். இதனால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் கொரோனாவால் மரணங்கள் நிகழ்வதும் சொற்ப அளவில் குறைந்துவிடும்.

இந்தப் பயன்களை முழுமையாகத் தடுப்பூசிகள் வழங்கும்பட்சத்தில் நிச்சயம் 2021-ன் இறுதிக்குள் இந்தப் போரில் வெற்றி அடைய முடியும். அதுவரை தடுப்பூசி போடப் பட்டிருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள முதியோர்களைக் காக்க வேண்டும். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். தனி மனித இடைவெளியைப் பேண வேண்டும்.
நிச்சயம் எதிர்காலம் சிறப்பானதாய் அமையும்!