Published:Updated:

இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image) ( Photo by Mishal Ibrahim on Unsplash )

எங்கெங்கோ செய்திகளில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த போதைப்பொருள்கள் இன்று நம் வீடுகள் வரைக்கும் வந்துவிட்டன. இந்தப் பிரச்னையின் பல அறியா கோணங்களையும், அதற்கான தீர்வுகளையும் அலசும் புதிய தொடர் இது. நான் அடிமை இல்லை - அத்தியாயம் 3.

சுமதிக்கு 60 வயது. அவரின் இரண்டு மகள்களும் திருமணமாகி, வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சுமதியும் அவரின் கணவரும் சென்னையில் தனியே வசிக்கிறார்கள். அவரின் கணவர் அதிகம் பேசாதவர். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். சுமதிக்கும் அவருக்கும் சண்டை, சச்சரவுகள்கூட பெரிதாக வராது.

Older People (Representational Image)
Older People (Representational Image)

`இப்படியும் ஒரு மனுஷனா... எதுக்காச்சும் சண்டை போட்டாதானே லைஃப் சுவாரஸ்யமா போகும்... நான் எது சொன்னாலும் சரி, சரின்னு மண்டையை ஆட்டிடுவாரு... லைஃப் செம போர்...'' என்பதுதான் சுமதியின் வருத்தமே. சமையல், சீரியல், வாரம் ஒருமுறை வீடியோ காலில் மகள்களின் குடும்பத்தாருடன் அரட்டை... அவ்வளவுதான் அவர்களின் வாழ்க்கை. இந்நிலையில்தான் அமெரிக்காவிலிருந்து சுமதியின் மூத்த மகள் குடும்பம் விடுமுறைக்கு சென்னை வந்தது.

முதல் சில நாள்கள் மகள், மருமகன், பேரக்குழந்தைகள் என சுமதி உற்சாகமாக வலம் வந்தார். இந்நிலையில் திடீரென ஒருநாள் மயங்கிச் சரிந்தார் சுமதி. உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். ஒருவாரத்துக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப் பட்டார். `ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்கோங்க. பிபி அதிகரிக்கக் கூடாது... மறுபடி இதே மாதிரி வந்தா கோமாவுக்கு போயிடுவாங்க' என அறிவுறுத்தி அனுப்பினார்கள் மருத்துவர்கள்.

Syrup (Representational Image)
Syrup (Representational Image)

வீட்டுக்கு வந்ததும் சுமதிக்கான மருந்துகளை வைக்க அலமாரியைத் திறந்த அவரின் மகளுக்கு அதிர்ச்சி. அங்கே கிட்டத்தட்ட அரை டஜன் இருமல் மருந்து பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. வீட்டில் இருப்பதோ அம்மா, அப்பா இருவர் மட்டும்தான். இருவருக்கும் இருமலோ, காய்ச்சலோ இல்லை. அப்படியிருக்க எதற்கு இத்தனை பாட்டில்கள் இருமல் மருந்து? சுமதியிடம் மெள்ள விசாரித்திருக்கிறார் அவரின் மகள். சுமதி சொன்ன உண்மைகளில் உறைந்துபோனது அவர் மட்டுமல்ல, இதை வாசிக்கிற நீங்களும் அதிர்ச்சியில் உறையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பல வருஷமா அதுதான் எனக்கு நிம்மதியைக் கொடுத்திட்டிருக்கு. நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டுப் போனதும் வீடு வெறிச்சோடிப் போச்சு. உங்கப்பாவை பத்திதான் உனக்குத் தெரியுமே... வெளிய, வாசல்ல கூட்டிட்டுப் போக மாட்டாரு. அன்பா, அக்கறையா நாலு வார்த்தை பேச மாட்டாரு. நாலு சுவத்துக்குள்ளே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு எவ்ளோ நேரம்தான் உட்கார்ந்திருக்கிறது? மனசு பாரமா, வெறுமையா உணரும்போதெல்லாம் கொஞ்சம் இருமல் மருந்தைக் குடிச்சிட்டுப் படுத்துடுவேன்.

உலகமே மறந்த மாதிரி இருக்கும். ராத்திரியும் அதைக் குடிச்சாதான் தூக்கமே வரும். அது இல்லாட்டி நான் என்னிக்கோ பைத்தியமாயிருப்பேன்...'' என்று சுமதி சொல்லச் சொல்ல, அவரின் மகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சுமதி மயங்கி விழுந்தது, அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு என எல்லாவற்றுக்கும் பல வருட இருமல் மருந்துப் பழக்கமே காரணம் என்பதும் தெரியவந்திருக்கிறது.

Alcohol Addiction
Alcohol Addiction
Representational image

அதாவது சுமதி கிட்டத்தட்ட போதை அடிமையாக மாறியிருந்தார். பல வருடங்களாக அவர் குடிப்பது ஆல்கஹால் மற்றும் பல பயங்கர கெமிக்கல்கள் கலந்த இருமல் மருந்து. அதைக் குடித்ததும் உண்டாகிற மயக்கநிலையும் தூக்கமும் அவருக்கு ஏதோ ஒரு நிம்மதியைத் தர, அதையே நிரந்தரமாகத் தொடரவும் ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் அந்த மருந்தைக் குடிக்காவிட்டாலும் பதற்றமாகிவிடுவார். அதனால்தான் முன்கூட்டியே அத்தனை பாட்டில்களை வாங்கி ஸ்டாக் செய்து வைத்திருக்கிறார். இந்த விஷயம் தன் கணவருக்குக்கூட தெரியாமல் வைத்திருக்கிறார்.

முதல் வேலையாக சுமதியின் மகள் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று இது பற்றி சொல்லி, இருமல் மருந்து போதையிலிருந்தும், சுமதிக்கு ஏற்பட்டிருக்கும் வெறுமை (Empty nest syndrome ) உணர்விலிருந்தும் விடுபட சிகிச்சைகளை ஆரம்பித்திருக்கிறார். சுமதியின் கணவருக்கும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. சுமதியை பிசியாக வைத்திருக்கும் வழிகளை யோசித்ததில் அவருக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் ஆர்வம் இருப்பது தெரிந்து, ஆன்லைனில் அந்தப் பயிற்சியிலும் அவரை சேர்த்துவிட்டிருக்கிறார் அவரின் மகள்.

இரண்டே மாதங்களில் சுமதியிடம் மிகப்பெரிய மாற்றம். இப்போதெல்லாம் இருமல் மருந்தின் உதவியில்லாமலேயே தூங்குகிறார். பகல் முழுவதும் ஆன்லைன் வகுப்பு, ஆங்கிலப் படங்கள் பார்ப்பது எனத் தன்னை என்கேஜ்டாக வைத்திருக்கப் பழகியிருக்கிறார். பிடிக்கிறதோ இல்லையோ, தன்னையும் இதில் ஈடுபடுத்தப் பழகிக்கொண்டிருக்கிறார் சுமதியின் கணவர்.

சுமதியைப் பொறுத்தவரை தனக்கு இருந்தது ஒரு பழக்கம்... அது அவரை பதற்றத்திலிருந்து மீட்கும் ஒரு மருந்து. ஆனால், மருத்துவர்களின் பார்வையில் அது போதை அடிமைத்தனம். `இருமல் மருந்தையெல்லாம் போதைப் பொருள் லிஸ்ட்டுல சேர்க்க முடியுமா' என்று கேட்கிறீர்களா?

addiction
addiction

இருமல் மருந்து மட்டுமல்ல, இன்னும் இப்படி போதைப் பொருள் பட்டியலில் உள்ளவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டால் உங்களுக்குத் தலை சுற்றலாம்.

``போதை மருந்துகள் எனத் தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகளின் பயன்பாடு சட்டவிரோதமானது. ஆனால், சட்டவிரோதமல்லாத அன்றாட பயன்பாட்டிலிருக்கும் பல பொருள்கள் போதைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார் சுங்கத்துறையில் பணியாற்றி வரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வெங்கடேஷ் பாபு.

``சுங்கத்துறை அதிகாரி என்பதைவிட இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக உருவாக்கப் போராடும் போராளி என்று அறியப்படுவதே எனக்குப் பெருமை'' என்பவர் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக நீண்ட நேரம் வகுப்பெடுத்து கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார்.

அன்றாட பயன்பாட்டிலிருக்கும் பொருள்களை போதைக்காகப் பயன்படுத்துவதைப் பற்றித் தொடர்ந்து பேசினார்.

``New Psychoactive Substances (NPS) என்ற பட்டியலில் இந்தப் பொருள்கள் வரும். சட்டத்துக்கு விரோதமான போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைவிட இதற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. உலக அளவில் எதிர்கொள்ளப்படும் மிக முக்கியமான சவால் இதுதான். காரணம், இந்தப் பட்டியலில் உள்ளவற்றைப் பயன்படுத்துபவர்களை சட்டத்தால் தண்டிக்க முடியாது. அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் எந்த போதைப் பொருள் பட்டியலிலும் வராது.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
Image by Daniel Reche from Pixabay
போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! - 1

பிளாஸ்டிக் பட்டன்!

நெயில் பாலிஷ், எழுதியதை அழிக்கப் பயன்படும் வொயிட்னருடன் கலக்கப்படும் நிறமில்லாத ஒருவகை திரவம், பெயின்ட், ஒட்டுவதற்குப் பயன்படும் பசை போன்றவை குழந்தைகளால் போதைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் வாசனை கூட சிலருக்கு போதை உண்டாக்கும். பிளாஸ்டிக் பட்டனிலிருந்து ஒருவகை மணம் வருகிறது என்பதாலும், அழிக்கப் பயன்படுத்தும் ரப்பர், செருப்புத் தைக்கப் பயன்படுத்தும் பசை இவற்றையெல்லாம் சிறுவயது மாணவர்கள் போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். 9 - 12 வயது மாணவர்கள் இதுபோன்ற பொருள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பு ஒரு கார்ப்பென்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். தன் தச்சு வேலைக்காக ஒரு டப்பா நிறைய பசை வாங்கி வைத்திருக்கிறார். அவர் கண்ணசந்த நேரத்தில் அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் அந்த டப்பாவை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். தேடிப் பிடித்துப் போய் பார்த்தால் அவர்கள் அதைப் போதைக்காகப் பயன்படுத்துவதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இதுபோன்ற பொருள்களை ஆரம்பத்தில் அவற்றின் மணத்தால் ஈர்க்கப்பட்டு அடிக்கடி மோர்வார்கள். காலப்போக்கில் அவற்றை உட்கொள்ளவும் தொடங்கிவிடுவார்கள்.

IRS officer Venkatesh Babu
IRS officer Venkatesh Babu

ஒருவரின் தாக்கத்தால் அடுத்தவருக்கும் இந்தப் பழக்கம் வருவது குறைவு. அவரவருக்கு என்ன வாசனை பிடிக்கிறதோ, எந்தப் பொருள் கிடைக்கிறதோ அதன் அடிப்படையில் அடிமைத்தனம் ஏற்படுகிறது. முதலில் சில நாள்கள் அதை எடுத்து மோந்து பார்ப்பார்கள். அதற்குப் பிறகு அதற்கு முழுவதுமாக அடிமையாகி விடுவார்கள். அதை மோராமல், உட்கொள்ளாமல் அவர்களால் இருக்க முடியாது. NPS வகை பொருள்களை போதைக்காகப் பயன்படுத்துவதை எளிதில் பெற்றோரோ ஆசிரியரோ கண்டுபிடிக்க முடியாது. இவற்றைப் பயன்படுத்துபவர்களை சட்டரீதியாகத் தண்டிக்கவும் முடியாது என்பதாலும் இதற்கு அதிகமானோர் அடிமையாகிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு பொருளை சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள் பட்டியலில் கொண்டு வர வேண்டுமானால் ஐ.நா-வின் உறுப்பு நாடுகள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் ரசாயன சூத்திரங்கள், உடல் சார்ந்த பாதிப்புகள், உளவியல் சார்ந்த பாதிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டறிந்து இது போதைப்பொருள் என்று சான்றளித்த பிறகுதான் அதைத் தடைசெய்யப்பட்ட அட்டவணை மருந்துகள் (Scheduled Drug) பட்டியலில் கொண்டு வர முடியும்.

Button
Button
`உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2

உதாரணமாக, நெயில் பாலிஷ் போதைக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதை எல்லா நாடுகளும் ஏற்காது. தங்கள் நாடுகளில் அதைப் போதைக்காகப் பயன்படுத்தவில்லை என்பார்கள். அப்படி ஒருவேளை ஒரு மருந்தை அட்டவணை மருந்துகள் பட்டியலில் கொண்டு வந்தால், அதன் விற்பனையால் பயனடையக்கூடிய நிறுவனங்கள், மாஃபியாக்கள் அதிலிருக்கும் ஒரு மூலக்கூற்றை மட்டும் மாற்றிவிடுவார்கள். அதற்குப் பிறகு, போதைப்பொருள் என்று கோரக்கூடிய விஷயம் அதில் இல்லை என்று நிரூபித்து என்று அதைப் பட்டியலிலிருந்து நீக்கும்படி செய்துவிடுவார்கள். அப்படியானால் இது சட்டத்துக்குப் புறம்பான மருந்தாக வராது. அதன் பயன்பாட்டையும் தடுக்க முடியாது" என்கிறார்.

போதைப் பொருள்களின் வகைகள் எத்தனை?

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

(- மீட்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு