Published:Updated:

பத்தில் இரண்டாகக் குறைந்த மாரடைப்பு... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்!

Heart attack (Representational Image)
Heart attack (Representational Image)

பொதுவாக நோய்கள் என்றால் மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே அவற்றைத் தடுக்க முடியும் என்று எண்ணிய நமக்கு, வாழ்வியல் முறை மாற்றங்களால் அவற்றைப் பெருமளவு தடுக்கலாம் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்த லாக்டௌன்.

கொரோனாவால் உடல்நல நன்மையா? இது ஒரு நகைமுரணாக இருந்தாலும், ஊரடங்கின் உதவியுடன் அது உண்மையாகியிருக்கிறது. கொரோனா ஊரடங்கால் சில நோய்களின் தாக்கம் குறைந்துள்ளது.

குறிப்பாக, இதயநோயான மாரடைப்பின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா லாக்டௌனுக்கு முன், பின் என்று எடுத்துக்கொண்டால் பத்தில் இரண்டு என்ற அளவிலேயே இப்போது மாரடைப்பு தாக்குகிறது. இது ஆச்சர்யமான செய்தி என்றாலும், இதற்கான சில காரணங்களை நம்மால் யூகிக்க முடிகிறது.

ஒப்பீட்டளவில் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறது. குடும்பத்துக்காகப் பொருளீட்டும் பொருட்டு அதிகம் அலைந்து மனஉளைச்சலுக்கு உள்ளாவது, புகைபிடித்தல், மது அருந்துதல், குறைவான தூக்கம் மற்றும் வெளியில் உணவு உண்ணுதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

கொரோனாவுக்குப் பின் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வெளியில் செல்வது குறைந்தது. மது கிடைக்காமல் இருந்ததால் அதிகம் மது அருந்தும் வாய்ப்பு இல்லாமல் போனது. குழந்தைகளுடனும் குடும்பத்தாருடனும் இருக்கும்போது மனதுக்கு இதமான சூழல் அமைந்து, தேவையற்ற மனஅழுத்தம் தவிர்க்கப்படுகிறது.

குறைந்த விபத்துகள்

கொரோனாவின் வரவுக்குப் பின் விபத்துகள் குறைந்துள்ளன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பொது முடக்கத்தால் வாகனப் போக்குவரத்து குறைந்துவிட்டது. இரண்டாவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் மக்கள் ஏற்படுத்தி வந்த சாலை விபத்துகள், மது கிடைக்காத லாக்டௌனில் குறைந்துள்ளன. இதனால் மண்டை உடைவது, எலும்பு முறிவது மற்றும் பிற தீவிரக் காயங்கள், உயிரிழப்புகள் அதிகம் தவிர்க்கப்பட்டுள்ளன.

Road Accident
Road Accident

அடுத்து, பக்கவாதம். இது வயதானவர்களையும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களையும்தான் பெரும்பாலும் தாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும் அதிக கோபம் மற்றும் மனஉளைச்சல் ஏற்படும்போதுதான் பக்கவாதம் வரும். இந்த லாக்டௌனில் குடும்பத்தினருடன் இருக்கும்போது கோபம், மன உளைச்சல் ஏற்படுவது குறைந்திருக்கிறது. எனவே, பக்கவாதமும்.

இருமுனைத் தாக்குதல் ஏற்பட்டிருந்தால்...?

ஒருவேளை எப்போதும் இருக்கும் அளவுக்கே மாரடைப்பு, விபத்துகள், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்திருந்தால், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் கிடைக்காமல் போயிருப்பர். ஏன்... படுக்கை வசதிகூட இல்லாமல் போயிருக்கும். இந்த நோய்கள் குறைந்ததால்தான் கொரோனாவை எதிர்கொள்ள அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள், படுக்கைகள் மற்றும் அவசர ஊர்திகளை ஒதுக்க முடிகிறது.

கொரோனா பொதுமுடக்கத்தால் நிறைய பேருக்கு மன அமைதியும் ஆரோக்கியமும் ஏற்பட்டிருக்கிறது.
இதயநோய் மருத்துவர் திலீபன் செல்வராஜன்

ஒருவர் குடிபோதையில் சாலைவிபத்தில் அடிபட்டு எலும்பு முறிவுடனும், மற்றொருவர் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறலுடனும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டால் யாரை முதலில் பார்ப்பது என்ற பதற்றம் ஏற்படும். இவையெல்லாம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளன. லாக்டௌனால் மற்ற சிகிச்சைகளுக்கான நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இந்தியாவின் தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைக் கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக மாற்றியிருப்பதே இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

நமக்கான பாடம்!

பொதுவாக நோய்கள் என்றால் மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே அவற்றைத் தடுக்க முடியும் என்று எண்ணிய நமக்கு, வாழ்வியல் முறை மாற்றங்களால் அவற்றைப் பெருமளவு தடுக்கலாம் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்த லாக்டௌன். நோய் உருவாவதன் காரணங்களை மீள் ஆய்வு செய்யவேண்டியதன் அவசியமும் ஏற்படுகிறது.

Family (Representational Image)
Family (Representational Image)

ஒரு சில மாற்றங்களைச் செய்தால் பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை நம்பிக்கை தருகிறது. உதாரணமாக, வீட்டிலிருந்தே வேலைசெய்தால், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் விபத்துகளைப் பெருமளவு தவிர்க்கலாம். மதுக்கடைகளை மூடுவதால் எந்தளவுக்குச் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என்றும் அறிகிறோம்.

வீட்டிலிருக்கும்போது, பிறரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று தவிர்த்ததால் பலருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. வேலைக்குச் செல்லும் அலைச்சல் குறைந்து போதுமான அளவு துாங்க நேரம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் தரமான, ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடும் கிடைக்கிறது. பம்பரம் போன்று சுற்றிக்கொண்டிருந்த நம் வாழ்வியல் முறையே தற்போது ஆரோக்கியமாக மாறிப்போயிருக்கிறது. இவையே கொரோனா ஊரடங்கில் மக்கள் மத்தியில் மாரடைப்பு குறைந்ததற்குக் காரணங்களாக இருக்கலாம்.

Happy family (Representational Image)
Happy family (Representational Image)
கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?

இந்த நேரத்தில் சிலருக்குப் பொருளாதாரப் பிரச்னைகளால் சில சிக்கல்கள் ஏற்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு மன அமைதியும் ஆரோக்கியமும் ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா நமக்கு ஒரு நல்ல பாடத்தைத் தந்துள்ளது. அந்தப் படிப்பினைகளிலிருந்து புதிய மருத்துவ உலகையும் மருத்துவக் கட்டமைப்புகளையும் உருவாக்குவோம்.

அடுத்த கட்டுரைக்கு