Published:Updated:

50 நாள்கள் மட்டுமே நீடிக்கும் கொரோனா ஆன்டிபாடிகள்... அதற்குப் பின் மறுதொற்று அபாயம் உள்ளதா?

Health Worker in Delhi
Health Worker in Delhi ( AP Photo / Manish Swarup )

இன்னும் சிலர், ஒருமுறை கொரோனா தொற்றினால் சில நாள்கள் மட்டுமே எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டால் நாம் தடுப்பூசி கண்டறியும்போது சில மாதங்களுக்கு ஒரு முறை பூஸ்ட்டர் டோஸ்களாகத் தடுப்பூசியை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலில் அதிக கவனம் பெறும் வார்த்தையாக இருப்பது `எதிர்ப்பு சக்தி.' நோய்த்தொற்றை எதிர்த்து நம் உடலைப் பாதுகாப்பதில் சுற்றுப்புறச் சூழல், சிறப்பாகச் செயல்படும் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நாம் உண்ணும் உணவு என்று பல காரணிகள் முக்கியமானவை.

ஆனாலும் இதுநாள் வரை கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவல்ல ஊட்டச்சத்து, மருந்து, உணவு எதுவென்பதில் ஒருமித்த கருத்து எதுவும் வந்தபாடில்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பல விஷயங்களை நாம் முயற்சி செய்து பார்த்தாலும் எதற்கும் அறிவியல்பூர்வமான விளக்கமோ, ஆதாரமோ இன்னும் முழுமையாக வரவில்லை

Fight against Covid-19
Fight against Covid-19

ஒருமுறை நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றொரு முறை ஏற்படாத வண்ணம் நமக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி விடுமா என்பது குறித்த ஆய்வுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் நோய்த்தொற்றுக்கு உள்ளான ராணுவ வீரர்களிடையே செய்யப்பட்ட எதிர்ப்பு சக்திக்கான பரிசோதனையில் 60% பேரிடம் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அளவிட உதவும் `ஆன்டிபாடிகள்' கண்டறியப்பட்டன.

ஆன்டிபாடிகள் என்றால் என்ன?

நோயை உண்டாக்கும் ஒரு கிருமி நமது உடலுக்குள் ஊடுருவும் வேளையில் அந்தக் கிருமிக்கு எதிராக நமது உடல் உருவாக்கும் ராணுவ வீரர்கள் போன்றவைதான் இந்த ஆன்டிபாடிகள். தொற்று ஏற்பட்ட முதல் சில நாள்களில் உருவாகும் ஆன்டிபாடிகளுக்கு IgM என்றும், சில வாரங்களுக்குப் பிறகு தோன்றும் ஆன்டிபாடிகளுக்கு IgG என்றும் பெயர்.

கோவிட் நோயைப் பொறுத்தவரை தொற்று உள்ளே வந்த ஒரு வாரத்துக்கு பின்புதான் IgM தோன்றுகிறது. 28 நாள்களில் மறைந்துவிடுகிறது. IgG எனும் ஆன்டிபாடி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தோன்றி சில மாதங்கள் இருக்கிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்த ஆன்டிபாடிகள் 50 நாள்கள்கூட தாக்குப்பிடிப்பதில்லை. இதன் விளைவாக ஒருமுறை தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி, அது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹாங்காங்கில் உலகின் முதல் அதிகாரபூர்வமான கொரோனா மறுதொற்று பதிவு செய்யப்பட்ட தகவலும் இதையே பறைசாற்றுவது போல உள்ளது.

இருப்பினும் அறிவியலாளர்கள் தரும் நம்பிக்கை என்னவெனில், முதல்முறை கொரோனா தொற்று ஏற்படும்போது அறிகுறிகள் இல்லாத வகையில் ஏசிம்டமடிக் நிலையில் வந்து செல்லும் தொற்று அல்லது மிகக் குறைவான நாள்களில் சரியாகும் நிலையில் ஆன்டிபாடிகள் தேவையான அளவு தோன்றுவதில்லை. அதுவே அதிகமான அறிகுறிகளுடன், நுரையீரல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆன்டிபாடிகள் ஐந்து மாதங்கள்வரைகூட காணப்படுகின்றன.

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

மேலும், முதல்முறை கொரோனா தொற்று ஏற்படும்போது நோய்க்கிருமியை எதிர்க்கும் ஆன்டிபாடிகளும் (Neutralising antibodies) மற்றும் கிருமியை நினைவு வைத்துக்கொண்டு தாக்கும் (T-memory cell) நினைவாற்றல் பொருந்திய எதிர்ப்பு சக்தியும் நிச்சயம் கிடைக்கின்றன

ஆனால், மேற்சொன்ன இரண்டையும் நாம் அளவிடுவதில்லை. இவையிரண்டும் நம்மை எதிர்கால கொரோனா தொற்றில் இருந்து நிச்சயம் காக்கின்றன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர், ஒருமுறை கொரோனா தொற்றினால் சில நாள்கள் மட்டுமே எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டால் நாம் தடுப்பூசி கண்டறியும்போது சில மாதங்களுக்கு ஒரு முறை பூஸ்ட்டர் டோஸ்களாகத் தடுப்பூசியை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர்.

எது எப்படியோ... நமக்கு விரைவில் இந்த வருட இறுதிக்குள் முழு முதல் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். கொரோனா தொற்றுக்கு எதிரான வலிமை மிகுந்த ஆயுதமாக அது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

vaccine
vaccine
COVID-19: தடுப்பூசியை 130 கோடி பேருக்கு எப்படிச் செலுத்த முடியும்? - ஓர் அலசல்

அது வரை முகக்கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியும், கைகளை சோப் கொண்டு தேய்த்துக் கழுவுவதும் மட்டுமே நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கான அரண்கள்.

அடுத்த கட்டுரைக்கு