Published:Updated:

மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி? - நான் அடிமை இல்லை - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image) ( Photo by Mishal Ibrahim on Unsplash )

சில மருத்துவப் பிரச்னைகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால் போதைப்பொருள் பயன்படுத்தும்போது கிடைக்கும் அதே விளைவுகள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் மக்களுக்கு சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதுதான் சிரமம். சட்டத்தை ஏமாற்றுவது பலருக்கும் கைவந்த கலை. அதிலும் குற்றச் செயல்களில் ஈடுபட, சட்டத்தை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் அஸ்திரங்கள் பல நேரம் வியக்க வைக்கும். போதைப் பொருள் பயன்பாடு அதற்கோர் உதாரணம். அதைப் பற்றிதான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப்போகிறோம். போதையும் வேண்டும்... மாட்டிக் கொள்ளாமலும் பயன்படுத்த வேண்டும்... என்ற நிலையில் அதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் போதை அடிமைகள் என விளக்குகிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு.

IRS officer Venkatesh Babu
IRS officer Venkatesh Babu

``கொகைன், ஹெராயின், கஞ்சா என சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விளைவைக் கொடுக்கும். போதை, பரவச நிலை, அதிக விழிப்பு, தூக்கம் என ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப உடலில் விளைவு ஏற்படும். இந்த விளைவுகளை சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமலே பெற முடியும்.

குறிப்பிட்ட சில மருத்துவப் பிரச்னைகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால் போதைப்பொருள் பயன்படுத்தும்போது கிடைக்கும் அதே விளைவுகள் கிடைக்கும். இதைத்தான் 'காக்டெயில் ஆஃப் டிரக்ஸ்' (Cocktail of drugs) என்கிறார்கள்.

கோவிட் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டபோது பலரும் போதைக்காக ஆல்கஹால் கலந்த சானிடைசரைக் குடித்ததாக பல செய்திகளைக் கேள்விப்பட்டோம். அதே போன்று போதைப்பொருள் கிடைக்காதபோது எப்படியாவது எதையாவது எடுத்து அந்த போதை கிடைத்துவிடாதா என்ற தேடலிலேயே இருப்பார்கள். அப்படிக் கண்டறிந்தது தான் இதுபோன்ற மருந்துகளின் பயன்பாடு.

உலகம் முழுவதும்படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண், பெண் என எந்த பேதமும் இல்லாமல் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது.
ஐ.ஆர்.எஸ். அதிகாரி வெங்கடேஷ் பாபு

எந்தெந்த மாத்திரைகளை எந்த அளவு எடுக்க வேண்டும் என்பது இதில் தொடர்ந்து இயங்குபவர்களுக்குத் தெரியும். இவர்கள் ஒரு குழுவாக இயங்குவார்கள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தனித்தனியாக ஒவ்வொரு மருந்துக்கடைக்குச் சென்று குறிப்பிட்ட மாத்திரைகளை வாங்கி வருவார்கள். எல்லாவற்றையும் சேகரித்த பிறகு, அதிலிருந்து குறிப்பிட்ட அளவை எடுத்து போதைக்காகப் பயன்படுத்துவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணத்துக்கு மூன்று வகையான மாத்திரைகள் வாங்கி வருகிறார்கள் என்றால், அவற்றில் ஒவ்வொன்றிலும் சிறு சிறு அளவு உடைத்தெடுப்பார்கள். உடைத்து எடுத்தவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வார்கள். மருந்து ரத்தத்தில் கலந்த உடன் போதைப்பொருள் சாப்பிட்டதால் கிடைக்கும் விளைவு ஏற்படும்.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3

இதில் என்ன கொடுமை தெரியுமா..? மக்களின் உயிரிலும் ஆரோக்கியத்திலும் மருத்துவர்களுக்கு இணையான தார்மீக பொறுப்பு கொண்ட மருந்தாளுநர்களேகூட இதைத் தயார்செய்து கொடுத்து, காசு பார்க்கும் அவலமும் நடக்கிறது. தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை வாங்குவதற்கு பயந்து, ஒளிந்து வாங்க வேண்டாம். மிகவும் எளிதாக மருந்தகங்களிலேயே வாங்கிவிடலாம். இதனால் சட்டரீதியாக எந்தப் பிரச்னையும் வராது.

விலை அதிகமா?

சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பணம் படைத்தவர்களால்தான் அவ்வளவு பணம் செலவழித்து வாங்க முடியும். ஆனால், இந்த மருந்துகளின் விலை குறைவாகவே இருக்கும். சில மருந்துக் கடைக்காரர்களால் இப்படி போதைக்காகப் பல்வேறு மருந்துகளை வாங்குபவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

உதாரணத்துக்கு, ஒருவர் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கான மாத்திரைகள் வாங்குகிறார் என்றால் அவருக்கு உண்மையிலேயே அந்தப் பிரச்னை இருக்கிறதா என்பதை அவரைப் பார்த்தாலே தெரியும். அப்படியிருக்கும்போது ஒருவர் தனக்கு சம்பந்தமில்லாத மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி அதிக அளவில் வாங்குகிறார் என்றாலே அது தவறான பயன்பாட்டுக்குத்தான் செல்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அந்த மருந்துகளை விற்பார்கள்.

Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Colin Davis on Unsplash

தென்னிந்தியாவில் மதுவின் பயன்பாடுதான் அதிகமாக இருக்கிறது. மது தாராளமாகக் கிடைப்பதால் இந்த `காக்டெயில் ஆஃப் டிரக்ஸ்' போன்ற போதைப்பொருள் பயன்பாட்டுக்கான தேவை எழவில்லை. ஆனால், டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் இவற்றின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதுபோன்று மருந்துகளைக் கலவையாக எடுக்கும்போது மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். உடலில் இருக்கும் ஒவ்வோர் உறுப்புக்கும் ஓர் ஆயுள் இருக்கிறது, அது வேலை செய்யும் வேகம் என்ற ஒன்றும் இருக்கிறது. இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் ஆயுள் குறையும். 20 வயது நபர் போதைக்கான மருந்துகளை எடுக்கும்போது அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு 50, 60 வயது நபருக்கான நரம்பு மண்டலத்தின் செயல்திறனே இருக்கும் அளவுக்கு பாதிக்கப்படும். நாளடைவில் நரம்புகள் தளர்ந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும்.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
Image by Daniel Reche from Pixabay
பார்ட்டி கலாசாரத்துக்குப் பழகும் இளம் தலைமுறை; மறைந்திருக்கும் போதை அரக்கன்; பெற்றோர்களே அலர்ட்! - 8

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்து என்பதால் படித்தவர்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று நினைக்கலாம். டெல்லியில் சாலையோரத்திலிருக்கும் பதின்பருவக் குழந்தைகள் மத்தியில்கூட இதன் பயன்பாடு இருக்கிறது. பெற்றோர் கவனிப்பு இல்லாதது, பெற்றோர் இருவரும் போதைக்கு அடிமையாவது, பள்ளியில் இடைநிற்றல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பழக்கம் இவர்களுக்கு ஏற்படுகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண், பெண் என எந்த பேதமும் இல்லாமல் இதைப் பயன்படுத்துகின்றனர்" என்கிறார்.

சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர்களே போதைக்கு அடிமையாகும் அவலம் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பேசுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு