Election bannerElection banner
Published:Updated:

``அதிகமாகத் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? கவனம் தேவை!’’ - மருத்துவரின் எச்சரிக்கை

தண்ணீர்
தண்ணீர்

ஒருவர், தன் உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது. இதுவே, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சிறுநீர்ப் பை பழுதாக நேரலாம்.

"நீரின்றி அமையாது உலகு"- என்று 'தண்ணீரின் அவசியத்தைப்' பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஒரே வரியில் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார், பட்டம் வாங்காத மருத்துவரான ஐயன் வள்ளுவர்!

சரி, அது இருக்கட்டும். முதலில் உங்களுக்கு ஒரு கேள்வி!

"ஒரு நாளைக்கு நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு என்று சரியாகச் சொல்லத் தெரியுமா? அது உங்கள் உடல் இயக்கத்துக்குப் போதுமானதாக உள்ளதா?" - பதிலை யோசித்து தான் சொல்ல வேண்டுமா? கவலை வேண்டாம்! நீங்கள் மட்டுமல்ல... உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுதான் இது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் செலுத்தும் அக்கறையை குடிக்கும் தண்ணீரில் வைப்பதில்லை.

தண்ணீர்
தண்ணீர்

உணவின்றி சில நாள்கள்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நீரின்றி ஒரு நாள் தாக்குப்பிடிப்பதே சிரமம். இதிலிருந்தே நீரின் முக்கியத்துவத்தை அறியலாம்.

தற்போது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில், சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுவருகிறது. இதற்கான ஒரு சான்றுதான், இந்தியப் பள்ளிகளில் நடைமுறைக்கு வரும் 'வாட்டர் பெல்' முறை. அதாவது, பள்ளிகளில் சீரான இடைவெளியில் மணி ஒலிக்கப்படும். அப்போது ஆசிரியர்கள், குழந்தைகளைத் தண்ணீர் குடிக்கச்செய்ய வேண்டும். பள்ளிக்குழந்தைகள் மட்டும் அல்ல, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவருமே சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கத்தில் கொள்ள வேண்டும்.

தண்ணீர்
தண்ணீர்

போதுமான தண்ணீர் குடிக்காததால் வரும் பிரச்னைகள் என்னவென்று தெரியுமா? வாங்களேன்... மருத்துவரிடமே கேட்டுவிடுவோம். அதற்கு முன், மனித உடலுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துகொள்வோம்.

"அனைத்து பாலூட்டிகளின் உடலிலும் நீர் ஒரு முக்கிய அங்கம். உடலில் கொழுப்பின் அளவை நீக்கிவிட்டுப் பார்த்தால், மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளிலும் நீரின் அளவு 71-78 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உடலில் நீரின் அளவு, வயது, பால், உடல் எடை போன்ற காரணிகளால் மாறுபடும். பிறந்த குழந்தையின் உடல் எடையில் 85-90 சதவிகிதம் நீர் மிகுந்திருக்கும். இளைஞர்கள் உடலில் 55-60 சதவிகிதம் நீர் உள்ளது.

தண்ணீர்
தண்ணீர்

உடலினுள் நுழையும் நீருக்கும், வெளியேறும் நீருக்கும் இடையே உள்ள சமன்பாட்டால், உடல் நீரின் அளவு பாதுகாக்கப்படுகிறது. நீர் அருந்துதல், பிற திரவப் பொருள்களை அருந்துதல், உணவுடன் நுழைதல் ஆகிய வழிகளில் உடலினுள் நீர் நுழைகிறது. உணவுப் பொருள்களின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளிலும் நீர் உற்பத்தியாகும். அன்றாடம் நமக்குத் தேவைப்படும் நீரின் பொதுவான அளவு, இரண்டு முதல் மூன்று லிட்டர்.

உடலில் நீரிழப்பு சிறுநீர், வெளிச் சுவாசம், சருமத்தின் வழியே வியர்வையாக, மலப்பொருள்களுடன் என நான்கு வழிகளில் ஏற்படுகிறது.

உடலில் நீரின் பயன்கள்:

தண்ணீர்
தண்ணீர்

உடலில் அனைத்து செல்களின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது. உணவு மற்றும் கழிவுப்பொருள்களைக் கடத்த உதவுகிறது. உடலில் வேதியல் மாற்றங்கள் நடைபெறுதலுக்கான தடமாக உள்ளது. என்சைம்கள், ஹார்மோன்கள், வைட்டமின்கள், எலக்டிரோலைட்டுகளின் கரைப்பானாக உள்ளது. உடல் வெப்பத்தைப் பாதுகாப்பதிலும், திசுக்களின் அமைப்பை உறுதி செய்வதிலும் பெரும் பங்காற்றுகிறது.

தண்ணீரின் அவசியமும் பயனும் இவ்வாறு இருக்கின்ற நிலையில், நம்மில் பலர் பலவிதக் காரணங்களால் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. சிலரோ, போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறேன் என அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறார்கள். இதுவும் ஆபத்தில்தான் முடியும்.

Vikatan

எனவே, இதுபற்றி சிறுநீரக அறுவைசிகிச்சை மருத்துவர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.

"ஒருவர், தன் உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது. இதுவே, அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீர்ப் பை பழுதாக நேரலாம். இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவர் வசிக்கின்ற சூழ்நிலை மற்றும் செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்றவாறு தண்ணீர் அருந்த வேண்டும். தம் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய நீரின் அளவும் மாறுபடும்.

சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ரவிச்சந்திரன்
சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ரவிச்சந்திரன்

உதாரணத்திற்கு, வெயிலில் கடின வேலை செய்பவர்களுக்கு அதிக வியர்வை வெளியாகும். இதனால், அவர்களின் நீரின் தேவை அதிகமாக இருக்கும். குளிர்ந்த இடங்களில் வேலை செய்பவராக இருந்தால் வியர்வை வெளியேறாது, நீரிழப்பும் இருக்காது. அவர்களுக்கு நீரின் தேவை குறைவாக இருக்கும். ஆக, உடலிலிருந்து வெளிப்படும் நீரின் அளவைவிட, எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு சற்று அதிகமாக இருக்க வேண்டும்.

Vikatan

சரியான இடைவெளியில் தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை சிறுநீரின் நிறத்தை வைத்துக்கூட அளவிடலாம். சிறுநீரின் நிறம் வெள்ளையாக இருந்தால், நாம் சரியாக தண்ணீரின் அருந்துகிறோம். மஞ்சளாக இருந்தால், போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்று அர்த்தம். சில நேரங்களில் சிறுநீரகத் தொற்று இருந்தாலும் சிறுநீரின் நிறம் மாறிக் காணப்படும்.

தண்ணீர்
தண்ணீர்

இன்று வேலைக்குச் செல்லும் பலர், குறிப்பாக பெண்கள் அதிக தண்ணீர் குடித்தால், அடிக்கடி கழிவறை செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும், வெளியில் உள்ள சுத்தமில்லாத கழிவறைகளைக் கருத்தில் கொண்டும், தண்ணீர் குடிப்பதையும் கழிவறை செல்வதையும் தவிர்க்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இதனால் சிறுநீரகத்தில் இயற்கையாகவே இருக்கும் நுண்ணுயிரிகள் அங்கேயே தங்கி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவரவருக்கு ஏற்றவாறு சரியான அளவு தண்ணீர் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

"எல்லாம் சரிதான். ஆனால், எங்களுக்கு இருக்கிற வேலை டென்ஷன்ல தண்ணீர் குடிக்கவே மறந்து போயிடுறோமே!"என்கிறீர்களா?

தண்ணீர் குடிக்கவேண்டிய நேரத்தை நினைவுபடுத்தத்தான் "Drink Water Remainder" App-கள் இருக்கின்றனவே. இதை உங்கள் மொபைலில் டவுண்லோடு செய்துகொண்டு உங்களின் உயரம், எடை, வயதைப் பதிவுசெய்துவிட்டால், எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கணக்கு வந்துவிடும்.

"Drink Water Remainder" App
"Drink Water Remainder" App

பிறகு, உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல நேரத்தை செட் செய்து கொண்டால், அலாரம் அடித்து நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டியதை நினைவுபடுத்தும். உதாரணத்திற்கு, ஆப்பில் நேர இடைவெளி ஒரு மணி நேரம் என்று கொடுத்தால், ஒவ்வொரு ஒரு மணி நேர இடைவெளியிலும் அலாரம் அடிக்கும்.

ஆக, 'சுவர் இருந்தால்தான் சித்திரம்'. அதனால், என்ன வேலையாக இருந்தாலும் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தத் தவறாதீர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு