Published:Updated:

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் A3i கொரோனா வைரஸ்... தமிழகத்தின் நிலை என்னவாகும்? #ExpertOpinion

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இதுவரை பரவி வந்த வீரியமில்லாத கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, வீரியம் அதிகமுள்ள வைரஸ் வகை பரவி வருவதாகத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து இந்த வகை வைரஸ் தமிழகத்துக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தீவிர பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

corona spread
corona spread

தமிழகத்தில் இதுவரை 31,667 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையில் மட்டும் 22,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 85 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு மட்டுமே காணப்பட்டு வந்தது. இறப்பு விகிதமும் 0.6 சதவிகிதமாகவே உள்ளது. அதற்குக் காரணம் வீரியமில்லா A2a என்ற வகை கொரோனா வைரஸ் பரவியதுதான்.

ஆனால், கடந்த சில நாள்களாக A3i வகை வைரஸ் பரவி வருகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பலருக்கு இந்த வகை வைரஸ் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியது போன்ற காரணங்களால் இந்த வகை வைரஸின் தாக்கம் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பேசிய வைராலஜிஸ்ட் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா, ``A3 என்ற வகை வைரஸ்தான் உலகம் முழுவதும் பெரும்பாலும் பரவியிருக்கிறது. அதிலிருந்து நான்கு வகையாக வைரஸ் கிருமிகள் மாற்றமடைந்துள்ளன. நான்கில் மூன்று வகை மிகவும் வீரியம் குறைந்தவை. நான்காவது வகையான A3i அதிக வீரியமானது. இந்த வைரஸானது மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும். அதன் பாதிப்பு தீவிரமாகவும் இருக்கும்.

வீரியம் குறைந்த வகை வைரஸ் பரவியபோது தொண்டைவலி, சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, அதன் பிறகு நுரையீரல் தொற்று ஏற்படும். ஆனால், இந்த வகை வைரஸ் நேரடியாக நுரையீரலைத் தாக்கி தொற்றை ஏற்படுத்தும். அதனால் எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்லி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை, சென்னை போன்ற இடங்களில் A3i வகை வைரஸ் பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை ஒருகட்டத்தில் சுற்றுச்சூழலே கட்டுப்படுத்தும். அதனால் மேற்கொண்டு வைரஸால் பெருக முடியாது. கொரோனா வைரஸானது சுற்றுச்சூழலுக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்வதால் அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், இந்த வைரஸை எதிர்க்கும் வகையில் நம் உடலில் உருவாகும் நோய்எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) முறையாக உருவாவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

Virologist Dr.Jayashree Sharma
Virologist Dr.Jayashree Sharma

ஒருவரது உடலிலிருந்து ஆன்டிபாடியை எடுத்துதான் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அந்த ஆன்டிபாடியே சரியாக உருவாகவில்லையென்றால் தடுப்பு மருந்து கண்டறிவதிலும் தடுமாற்றம் ஏற்படும். ஒரு நபருக்கு மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கக்கூடும். ஹெர்டு இம்யூனிட்டி என்ற குழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதிலும் சிக்கல் ஏற்படும்.

தற்போது பரவி வரும் A3i வகை மேலும் மாற்றமடையும்போது சில நேரங்களில் மேலும் வீரியமாவதற்கோ வீரியம் குறைவதற்கோ வாய்ப்புள்ளது. அது எவ்வாறு மாற்றமடையும் என்பதை சுற்றுச்சூழல்தான் தீர்மானிக்கும். அதனால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் வைரஸ் மேலும் மாற்றமடையாமல் தடுக்க முடியும்" என்றார் அவர்.

புதிய வகை வைரஸால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்குமா என்ற கேள்வியை தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் முன்வைத்தோம்.

``சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் வகை `O'. அதிலிருந்து பல்வேறு வகையான வைரஸ்கள் மாற்றமடைந்து வருகின்றன. தற்போது தெலங்கானா, மகாராஷ்டிரா, சென்னை போன்ற இடங்களில் A3i வகை பரவியிருக்கிறது. சென்னையில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிக்கப்படுவதற்கு இந்த வைரஸ்கூட காரணமாக இருக்கலாம்.

Pregnant lady
Pregnant lady

இந்தியாவைப் பொறுத்தவரை நடுத்தர வயதினர்தான் அதிகம் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குழந்தைகள், வயதானவர்களை அதிகம் வெளியில் விடாமல் வீட்டிலேயே வைத்திருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போது வீரியம் அதிகமுள்ள வைரஸ் பரவுவதால், வெளியில் சென்று வரும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் மூலம் வீட்டிலிருப்பவர்களுக்கும் பரவலாம். அதனால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளை இது எளிதில் பாதிக்கலாம். அதிக வீரியமுள்ளது என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பும் அதிகரிக்கலாம். கை கழுவுவது, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பழக்கங்களைக் கூடுதலாகக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

Infectious Disease expet Dr.Chitra
Infectious Disease expet Dr.Chitra

கைகழுவுவது, முக்கவசம் போன்ற பழக்கங்கள் சற்று அதிகரித்தாலும் எச்சில் துப்பும் பழக்கம் இன்னும் மாறவேயில்லை. சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வேறு நாட்டிலிருந்து அல்லது பிற மாநிலத்திலிருந்து இந்த வகை வைரஸ் தமிழகத்துக்கு வந்திருக்கலாம். அதனால் நாமும் தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பயணத்தின் மூலம் வீரியமுள்ள வகை வைரஸ் தமிழகத்தின் பிற இடங்களுக்கும் பரவலாம்" என்று எச்சரிக்கிறார்.

`பம்பையில் குளிக்கத் தடை; கொரோனா சான்றிதழ் அவசியம்!’- வரும் 14 முதல் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு