பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுள் முதன்மையானதாகத் திகழ்வது மார்பகப் புற்றுநோய். `உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கே மார்பகப் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது' என ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பற்றிய கூடுதல் தகவல்களையும் ஆலோசனைகளையும் அளிக்கிறார் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை.
``மார்பகப் புற்றுநோய் இது யார் யாருக்கெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.இது மரபு வழியில் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே குடும்பத்தில் அம்மா, சித்தி, பாட்டி போன்ற யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் இது அடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் ஏற்படலாம். மிகவும் இளம் வயதில் பருவமடைந்தவர்கள், மிக தாமதமான மெனோபாஸ், தாமதமாகக் குழந்தை பெற்றவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். உடல் பருமன் என்றால் உடலின் எடை மற்றும் உயரத்தை வைத்துக் கணக்கிடப்படும் BMI 25-ஐ விட அதிகமாக இருப்பது. கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு, அதாவது இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஹார்மோன், மாதவிடாய் சுழற்சிக்கு அவசியமான ஒன்று. ஆனால், தேவைப்படும் அளவைவிட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் அது புற்றுநோய் செல்களை உருவாக்குவதிலும் பெருக வைப்பதிலும் பங்கு வகிக்கும். பருமனாக இருப்பவர்களின் உடலில் இருக்கும் கொழுப்பு செல்களில் (Fat cells) இருந்து டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன் உற்பத்தியாகி அது ஈஸ்ட்ரோஜெனாக மாறும். சினைப்பையில் உற்பத்தி ஆவது தவிர, கூடுதலாக இப்படி ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாவது புற்றுநோய் செல்கள் வளர உதவியாக அமையும்.

இதனால்தான் பருமனாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். மார்பகப் புற்றுநோய் அதிகம் காணப்படுவது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான். மெனோபாஸ் ஆன பின்பு உடல்பருமனாக இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு மார்பகத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஏதேனும் சிறிய கட்டி, மார்பகத்தின் உருவத்தில் வித்தியாசம், மார்பகக் காம்பு உள்ளிழுக்கப்பட்டிருப்பது, காம்பில் ரத்தம் அல்லது திரவக் கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அல்ட்ராசவுண்ட் (Ultrasound), மேமோகிராம் (Mammogram) அல்லது பயாப்ஸி (Biopsy) போன்ற பரிசோதனைகளின் மூலம் புற்றுநோயா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். பருமனாக இருப்பவர்களுக்கு தசைகள் அதிகமாக இருப்பதால் சிறு கட்டிகள் ஆரம்ப நிலையில் தென்படாமல் போகலாம். மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை சிகிச்சையில் புற்றுநோய் ஏற்பட்ட இடத்தை மட்டும் நீக்கிவிடலாம். நோய் முற்றி இருந்தால் முழு மார்பகத்தையும் நீக்க வேண்டிவரும்.

அதன்பின் கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். பருமனான பெண்களுக்கு அதிக தசை இருப்பதால் கீமோதெரபியின் தாக்கத்தைத் தசைகள் எடுத்துக்கொள்வது குறையும்.
தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம்!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவது குறைவு. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பு அதற்குரிய பணியை 24 மணிநேரமும் செய்துகொண்டே இருக்கிறது. அதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல தாய்ப்பால் தரும்போது அவ்வளவாக மாதவிடாய் வராது. மாதவிடாய் வரவில்லை என்றால் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியும் குறையும். மேலும், சத்தான உணவுகளையே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் சாப்பிடுவோம். இவையெல்லாம் சேர்ந்தே மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன.
கருவுற்றிருக்கும் சமயத்திலும், தாய்ப்பால் தரும் சமயத்திலும் ஒரு பெண்ணின் மார்பிலிருந்து தேவையற்ற செல்கள் நீங்குகின்றன என ஆராய்ச்சி கூறுகிறது. தேவையற்ற செல்கள் நீங்கும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான செல்களும் தானாகவே நீங்கிவிடும். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு மட்டும் நன்மை இல்லை, குழந்தை வளர்ந்த பின் உடல்பருமன், புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஒரு பெண் பிரசவத்தின்போது பத்து முதல் பன்னிரண்டு கிலோ வரை எடை கூடியிருப்பார். முறையாகத் தாய்ப்பால் கொடுத்தால் எடை குறைவதோடு, பருமனாவதையும் தடுக்கும்.
பொதுவாகவே பெண்கள் குழந்தை வளர்ப்பில் தங்கள் உடல்நலம் குறித்து மறந்து விடுகிறார்கள். சத்தான சாப்பாடு, உடற்பயிற்சிகளின் மூலம் உடலை பருமனாகவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாகவே உள்ளது. வேலைக்குச் செல்பவர்கள்கூட பிரெஸ்ட் பம்ப் (Breast pump) மூலம் தாய்ப்பாலை எடுத்து, முறையாகச் சேமித்து வைத்து குழந்தைக்குப் புகட்ட முடியும்.
பல நிறுவனங்களில் பேறுகால விடுப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் பாலூட்டும் அறைகள் உள்ளன. குறைந்தது ஒரு வருடம் வரையிலும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது" என்கிறார்.
மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து கூறுகையில், ``துரித உணவுகள், அதிகம் சர்க்கரை உள்ள பொருள்களைத் தவிர்த்துவிட்டு சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடலை ஆரோக்கியமாகப் பருமனாகவிடாமல் வைத்திருக்கும்.

உடல்பருமனாக இருந்தால் வயது அதிகரிக்கும்போது சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுமே பாதிக்கும் என நினைக்கிறோம். ஆனால், பருமனாக இருந்தால் கிட்டத்தட்ட 13 வகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாமதமாகக் குழந்தை பெறுவதைத் தவிர்க்கலாம். இவை அனைத்தும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் காக்கும் வழிகள் ஆகும்" என்கிறார்.