Published:Updated:

ஊரடங்குத் தளர்வு... முதியோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

முதியோர்
முதியோர் ( Representational Image )

மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றில் முதியோர்களுக்கென நேர ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு செய்தால் வசதியாக, சிறப்பாக இருக்கும்.

லாக்டௌன் விரைவில் தளர்த்தப்படவுள்ளது. `கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறது அரசு. ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு, வீட்டைவிட்டு வெளியே வரும் குடும்ப நபர்களிடமிருந்து முதியோர்கள் விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,002. அதில் 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை 552 (212 பெண்கள், 340 ஆண்கள்) ஊரடங்குத் தளர்வு, முதியோர்களின் வாழ்வில் என்ன வகையான பிரச்னைகளை ஏற்படுத்தலாம், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி முதியோர்நல மருத்துவர். வி.எஸ்.நடராஜனிடம் பேசினோம்.

V.S.Natarajan
V.S.Natarajan

``இந்த லாக்டௌன் நாள்களில் உடல்நலம், மனநலம் இரண்டுமே முதியோர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. டாக்டரைப் பார்க்க முடியவில்லை, பரிசோதனைகள் செய்துகொள்ள முடியவில்லை, மருந்து கிடைக்கவில்லை... இப்படி அவர்களின் பிரச்னைகள் பல.

முதியோர்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமலும், உடற்பயிற்சி செய்ய முடியாமலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியோர்களைப் பொறுத்தவரை உடல்நலமும் மனநலமும்தான் பெரிய அளவிலான பிரச்னைகள்.

காலையில் எழுந்ததும் காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவது, பாடல்கள் கேட்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது, மதிய நேரத்தில் தூங்குவது, மாலையில் பூங்காவுக்குச் சென்று சக நண்பர்களோடு உரையாடுவது, இரவு சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வது... இப்படித்தான் முதியோர்களின் வாழ்க்கை இருக்கும்.

Old Man
Old Man
Representational Image

இந்த லாக்டௌனில் முதியோர்கள், தங்களின் சர்க்கரை அளவு, பி.பி அளவு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியாமல் மிகவும் பயத்துடன் வீடுகளில் பொழுதுகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். தினமும் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. `வீட்டில்தானே சார் இருக்கீங்க? வாசல்லயே கன்சல்டேஷன் பாத்துட்டுப் போயிடுறேனே' என்று கேட்கிறார்கள். `இப்போதுள்ள சூழ்நிலையில் அது சரியானது அல்ல' என்பதை எடுத்துரைத்து, அவர்களுக்கு போனிலேயே ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டால், முதியோர்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கடைகளுக்கும், பரிசோதனைக் கூடங்களுக்கும் புறப்பட்டுச் செல்வார்கள். கண்புரை நோய், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை போன்றவற்றுக்காகக் காத்திருப்பவர்கள் தங்களின் அறுவைசிகிச்சை நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். குழந்தையைப்போல் தாங்கள் நினைத்ததை மட்டுமே பிடிவாதத்துடன் செய்ய நினைப்பார்கள்.

old man
old man
Representational Image

இப்படி, ஒரே நேரத்தில் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பரிசோதனைக் கூடங்களில் முதியோர்கள் குழுமுவதால், பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடலளவிலும் மனதளவிலும் இவர்களுக்குப் பெரும் பாதிப்பை அது ஏற்படுத்தும். குறிப்பாக கொரோனாவைப் போன்ற தொற்றுநோய் முதியோர்களை எளிதில் தாக்கிவிடும். அவர்கள் அவற்றிலிருந்து மீள்வது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம், கவனம்கொள்ள வேண்டிய விஷயம்.

இவற்றுக்குத் தீர்வாக, மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றில் முதியோர்களுக்கென நேர ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு செய்தால் வசதியாக, சிறப்பாக இருக்கும். டாக்டர்கள், நோயாளிகள் இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை இதன் வாயிலாக நம்மால் தவிர்க்க முடியும். ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோருக்கே சிறப்பான மரியாதை தருவார்கள். தொடக்கத்தில், `முதியோர் மருத்துவம்' என்று நான் கொண்டுவந்தபோது, சக மருத்துவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். பிற்காலத்தில் அவர்களே தங்களின் தாய், தந்தையரை என்னிடம் அழைத்து வந்தார்கள்.

Doctor V.S.Natarajan
Doctor V.S.Natarajan

கொரோனாவைப் பொறுத்தவரையில், மனதளவில் இரண்டு விஷயங்களில் முதியோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். மரணம் குறித்த பயம் அவர்களுக்கு இருக்கும். என்னிடம் பேசுபவர்கள்கூட, `எத்தனை பேர் இன்று இறந்து போனார்கள்' என்பதைத்தான் கேட்கிறார்கள். `எத்தனை பேர் குணமடைந்தார்கள்' என்பதை விசாரிப்பதில்லை. தனக்கு வந்துவிடுமோ என்ற மரண பயம் அவர்களுக்கு இருக்கிறது.

இரண்டாவது பயம், தனிமை. தன் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திவிட்டார்கள் என்பது அவர்களின் பெரும் ஆதங்கமாக இருக்கிறது. மகன், மகள், தன் நலனில் அக்கறையுடன் இருக்கிறார்களா, வாஞ்சையாக விசாரிப்பார்களா எனக் காத்திருப்பார்கள். ஊரடங்கு தளர்த்தப்படும்போது, பால் வாங்க, பேப்பர் வாங்க, கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய, பூங்காக்களுக்குச் செல்ல என, தன் தனிமைச் சிறையிலிருந்து விடுபட நினைப்பார்கள். இதனால் அவர்களின் மனச்சோர்வு நீங்கி, உற்சாகமும் தெம்பும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், பாதுகாப்பு கிடைக்குமா?

முதியோர்களில் ஏற்கெனவே உடல்நல பாதிப்புகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இனி வரப்போகும் நாள்களில் இன்னும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவைத் தாமாகவே அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடாது.

பார்க்கின்சன், மறதிநோய் போன்றவை பாதித்தவர்களுக்கு மனதில் நினைக்கும் விஷயங்களை வெளிப்படுத்துவதிலும் சிக்கல் இருக்கும். தண்ணீர் வேண்டுமென்றால்கூட எடுத்துக் குடிக்க முடியாது. எழுதிக் காட்டவும் முடியாது. கண்களில் கண்ணீரோடு இருப்பார்கள். அதைப் பார்த்துத்தான் மகனோ, மகளோ, மருமகளோ தேவையறிந்து கொடுப்பார்கள். முதுமை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு மனக்குழப்பம், விரக்தி தோன்றும். அப்போது தாமதிக்காமல் தங்களின் மருத்துவரிடம் போனில் தொடர்புகொள்ள வேண்டும். ``நான் மருந்துகளை வழக்கம்போல் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், இப்போது மிகவும் சிரமப்படுகிறேன்'' என்பதை அவரிடம் சொல்லி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ ஆலோசனை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

மூட்டுவலி, மூட்டுத் தேய்மான குறைபாடுகளுக்காக மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்குப் பெரும்பாலும் பிரச்னைகள் வராது. சில வேளைகளில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது செரிமானக் கோளாறுகள் வாயுக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. டாக்டர்களின் ஆலோசனைப்படி அவற்றுக்குத் தகுந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அவற்றிலிருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

Old Age People
Old Age People
Representational Image

இதுபோன்ற தருணங்களில் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பது, கூட்டத்தை விட்டு ஒதுங்கியிருப்பது போன்றவை, இவர்களுக்கு நலம் பயப்பதாக இருக்கும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் நம்மைவிட்டுச் சென்றுவிடவில்லை என்பதை முதியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது அவர்களின் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. அத்தியாவசியத் தேவையைத் தவிர வேறு எதற்காகவும் அவர்கள் வெளியில் வராமல் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யலாம். காலையிலும் மாலையிலும் சூரிய ஒளியைப் பெறுவதன் மூலம் வைட்டமின்-டி அவர்களுக்குக் கிடைக்கும்.

Old age People
Old age People
Representational Image

கூட்டுக் குடும்பத்தில், பெரியவர் தனி அறையில் இருந்தால், மருமகள் சாப்பாடு கொடுப்பார். மகன், மகன், `அப்பா சாப்பிட்டீர்களா? வெளியில் போகிறேன்... மாத்திரை எதுவும் வாங்கிக்கொண்டு வர வேண்டுமா?' என்று ஒரு வார்த்தை கேட்கலாம். ஆனால், கேட்க மாட்டார்கள். இதைத்தான் பெரும்பாலானவர்கள், என்னிடம் ஆதங்கமாகச் சொல்லி வருத்தப்படுகிறார்கள். முதியோர்களுக்கு அன்பும் வெளிப்படைத்தன்மையும்தான் தேவை. அதை உணர்ந்து மற்றவர்கள் நடந்துகொண்டால் அவர்கள் கவலையில்லாமல் இருப்பார்கள்'' என்று ஊக்கம் தருகிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.

அடுத்த கட்டுரைக்கு