Published:Updated:

போதைக்கு அடிமையாகும் பிள்ளைகள்; இந்த 3 அறிகுறிகளும் தென்பட்டால் அலெர்ட் பெற்றோர்களே! - 5

Drug (Representational Image)
Drug (Representational Image) ( Photo by MART PRODUCTION from Pexels )

போதைப்பழக்கம் என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நான் இப்போது நினைத்தாலும் உடனே இதை நிறுத்திவிட முடியும் என்று நினைப்பார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது போன்று அதை நிறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது.

``உங்க பொண்ணு ஸ்கூலுக்கு வந்து பல நாளாச்சு. என்ன, ஏதுன்னு தகவலும் இல்லை. அவளுக்கு உடம்பு சரியில்லையா... வேற ஏதாவது பிரச்னையா..?'' தமிழகத்தின் மிகப்பெரிய பிசினஸ்மேன் கிரிதரனுக்கு அவரின் மகள் படிக்கும் பணக்காரப் பள்ளியிலிருந்து ஒருநாள் இப்படி போன் வந்தது. கிரிதரனின் மகள் அபிநயா, பத்தாவது படிக்கிறாள். அம்மா இல்லை. ஓர் அண்ணன் மட்டுமே. 24 மணி நேரமும் பிசினஸ் வெற்றியை மட்டுமே யோசிக்கும் கிரிதரனுக்கு தன் வீடு, பிள்ளைகள் பற்றியெல்லாம் நினைவே இல்லை. பாசத்துக்குப் பதிலாகப் பணத்தை வாரி இறைத்தார்.

தனக்கான கவனிப்பு இல்லாத நிலையில் பள்ளியில் நண்பர்களையே அதிகம் சார்ந்து வாழத் தொடங்கினாள் அபி. பள்ளியில் பணக்கார நண்பர்கள் சவகாசம், அந்த மாணவிக்கு கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்துகிறது. சிகரெட் ரோலுக்குள் கஞ்சாவை வைத்துப் புகைக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஆரம்ப நாள்களில் பள்ளியில் நண்பர்கள் உடனிருக்கும்போது மட்டுமே இதைப் பயன்படுத்துகிறார். நாள்கள் செல்லச் செல்ல வீட்டில் அதிகம் தனித்து இருப்பதால் வீட்டிலும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினாள்.

ஒரு கட்டத்தில் போதைப்பொருள் இல்லாமல் அவளால் இயங்க முடியவில்லை. முழுக்க அதன் பிடிக்கு ஆளாகிறார். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. முதலில் வீட்டுப்பாடங்கள் செய்வது குறைகிறது. ஆசிரியர்கள் அடிக்கடி எச்சரிக்கின்றனர். பள்ளியில் ஆசிரியர்கள் வீட்டுப்பாடத்தைக் கேட்கிறார்கள் என்பதால் பள்ளிக்குச் செல்வதையும் குறைத்தாள். இந்த நிலையில்தான் பள்ளியிலிருந்து அபியின் அப்பாவுக்கு போன் வந்தது.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Ramille Soares on Unsplash

அப்பாவுக்கு ஒரே அதிர்ச்சி. தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பிச் செல்லும் மகள், பள்ளிக்கு வருவதில்லை என்று புகார் வருகிறதே என்று குழம்புகிறார். அன்றைய தினம் காலையில் மகள் பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிக் கிளம்பிச் செல்கிறார். அவர் கிளம்பியதும் மகளின் அறையை அப்பா சோதிக்கிறார். சோதித்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தன் மகளின் பாடப்புத்தகம், துணிகள் அடுக்கும் அலமாரி, தலையணை என பல இடங்களில் சிறிய சிறிய பொட்டலங்களில் போதைப்பொருளை ஒளித்து வைத்திருக்கிறாள்.

தன் மகள் இப்படி இருப்பது வெளியில் தெரிந்தால் சமூகத்தில் தன் அந்தஸ்து என்னவாகும், பிசினஸ் வளர்ச்சி என்னவாகும் என்றெல்லாம் யோசிக்கிறார். மகளை ஒரு புனர்வாழ்வு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அபிக்கு குறைந்தது 3 மாதங்களாவது சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார்கள். அம்மா இல்லாத பெண்... தனக்கும் நேரமில்லை என்ற நிலையில் நண்பர் சொல்லி என்னைச் சந்திக்க வந்தார் கிரிதரன்..." என்கிறார் உளவியல் ஆலோசகர் சமிதா ஜெயின்.

``ஆரம்பத்தில் கவுன்சலிங்குக்கு சரியாக வந்துகொண்டிருந்தார். மெள்ள மெள்ள அபியிடம் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அப்பா மீண்டும் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கியதும் அபி என்னைச் சந்திக்க வருவதைத் தொடங்கினாள். போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில், ஒரு கட்டத்தில் வீட்டில் மிகவும் ஆவேசமாக நடந்துகொள்ளத் தொடங்கினாள். வேறு வழியின்றி மகளை மருத்துவமனையில் அனுமதித்தார் அப்பா. தீவிர சிகிச்சையுடன் போதை மீட்புக்கான கவுன்சலிங் உள்ளிட்ட விஷயங்களும் கொடுக்கப்பட்டு இறுதியாக அந்த அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக மீண்டாள் அபி" என்கிறார்.

என்னங்க சொல்றீங்க... ஒரு மகள் போதைக்கு அடிமையாகி தீவிர நிலைக்குப் போயிருக்கா... அதைக்கூட அவங்க வீட்டுல உள்ளவங்களால கண்டுபிடிக்க முடியாதா... என்று உங்களில் சிலர் கேட்கலாம். பிள்ளைகளின் மீது அக்கறையும் குடும்பத்தின் மீது பொறுப்பும் இருக்கும் பெற்றோரால் நிச்சயம் கண்டுபிடித்து விட முடியும்தான். வளர்ந்துவிட்டால் பிள்ளைகளின் உலகம் வேறு... என விலகி இருந்தால் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் பெற்றோரின் கவனிப்பு சரியாக இல்லாததால் அவள் போதைக்கு அடிமையானதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியவில்லை. அறிகுறிகள் தீவிரமாகி பள்ளியிலிருந்து புகார் வந்த பிறகுதான் எல்லாமே வெளியில் வந்திருக்கிறது.

பயன்படுத்தும் போதைப்பொருளின் தன்மை, அவர்களின் பொருளாதார பின்புலம், குடும்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக, உடல் ரீதியான அறிகுறிகள், மனரீதியான அறிகுறிகள், சமூக ரீதியான அறிகுறிகள் என அறிகுறிகள் மூன்று விதமாகத் தென்படும்.

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels
`உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2

உடல் ரீதியான அறிகுறிகள்

சிலருக்கு ஆரம்பத்தில் தான் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். எனவே, பெற்றோரின் கண்பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பார்கள், மணம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக சூயிங்கம் மெல்லுவது போன்ற புதிய பழக்கங்களைச் செய்வார்கள். சாப்பிடுவதில், தூங்குவதில் நிச்சயம் மாற்றம் தென்படும். ஒரு நபர் வழக்கமாக 2 சப்பாத்தி சாப்பிட்டால் போதைக்கு அடிமையானதும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். சிலர் சாப்பிடும் அளவை தடாலடியாகக் குறைத்துவிடுவார்கள். தூக்கத்திலும் மிகப்பெரிய மாறுதல் இருக்கும். அதாவது, சில போதைப்பொருள்களை எடுத்தால் மூளை தூண்டப்பட்டு, உற்சாகமாகவே இருப்பார்கள். தூங்கவும் மாட்டார்கள். சில போதைப்பொருள்கள் அளவுக்கு மீறிய தூக்கத்தைக் கொடுக்கும். அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவு சோர்வாகக் காணப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனரீதியான அறிகுறிகள்

போதைப்பொருள்களுக்கு மிகவும் தீவிரமாக அடிமையாகிவிட்டார்கள் என்றால், அந்தப் பொருள் கிடைக்காத நிலையில் பதற்றம், மனச்சோர்வு, மாயத்தோற்றம், மாயக்குரல் கேட்பது போன்ற உணர்வுகள் ஏற்படும். அதனுடன் வலிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படலாம். வீட்டில் ஆவேசப்படுவது, வன்முறையில் ஈடுபடுவது, அதீத அழுகை போன்றவை ஏற்படலாம். இதை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்று கூறுவார்கள்.

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels
இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3

போதைப்பழக்கம் என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நான் இப்போது நினைத்தாலும் உடனே இதை நிறுத்திவிட முடியும் என்று நினைப்பார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது போன்று அதை நிறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது. இன்றைக்கு அந்தப் பொருளை பயன்படுத்தவே கூடவே என்று முடிவெடுப்பார்கள். பிறகு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம் என்று நினைப்பார்கள். பிறகு, இரண்டு முறையாக அது அதிகரிக்கும். பின்பு கணக்கே இல்லாமல் சென்றுவிடும். ஏதாவது பிரச்னை வந்தால் அந்தப் போதைப்பொருளை நோக்கி ஓடுவார்கள். அதை எடுத்தால்தான் இந்தச் சூழலை என்னால் கையாள முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சமூக அறிகுறிகள்

தினமும் அம்மா, அப்பாவுடன் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள் என்றால் திடீரென ஒதுங்கி தன் அறையிலேயே சாப்பிடுகிறேன் என்பார்கள். வீட்டில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் இருக்குமிடத்தில் உட்காருவது, பேசுவதைத் தவிர்ப்பது, நண்பர்களுடன் தங்கப் போவதாகக் கூறி வீட்டில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்ப்பது, போதைப் பொருளை வாங்குவதற்கு அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்வது அல்லது திருடுவது, நண்பர்களிடம் கடன் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். தங்களுக்குப் பிடித்த விளையாட்டு, ஆன்லைன் கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள்.

 சமிதா ஜெயின்
சமிதா ஜெயின்

ஒருவேளை உடனிருக்கும் நண்பர்கள் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால் அவர்கள் நட்பைத் தவிர்ப்பார்கள். இவர்களுக்கு போதையின் அடுத்தடுத்த எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். மாறாக, நண்பர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டினால் அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள்.

ஆரம்பத்தில் நடத்தையில் மாற்றம் இருக்கும். பெற்றோருக்குப் பயந்து, அவர்களைத் தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பெற்றோரால் கண்டறிய முடியாத பட்சத்தில் நாள்கள் செல்லச் செல்ல மிகவும் தைரியம் வந்துவிடும். போதைப்பொருளை பயன்படுத்தினால் சீக்கிரமே தூங்கிவிட்டால் பெற்றோருக்குத் தெரியாது, அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டால் பெற்றோர் கண்டுபிடிக்க முடியாது என்று தைரியமான செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள்.

ஹெராயின், கோகைன், கஞ்சா இவற்றுக்கெல்லாம் என்ன வித்தியாசம் தெரியுமா? - நான் அடிமை இல்லை - 4

பதின்பருவத்தினர், பெரியவர்கள் என எல்லோருக்கும் இதுபோன்ற அறிகுறிகள்தான் தென்படும். குடும்பத்தினர், பொறுப்புள்ள நண்பர்கள் என யாராக இருந்தாலும் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வீட்டிலிருக்கும் குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள் மீதும் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவர்கள் நடத்தையில் சின்ன மாறுதல் தெரிந்தாலும் அதுபற்றி விசாரிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் கவுன்சலிங் அளவிலேயே எளிதில் சரிசெய்துவிட முடியும்" என்கிறார் சமிதா ஜெயின்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ் வழங்கும் அலர்ட் டிப்ஸ்

போதைக்கு அடிமையான ஆரம்ப நிலையில் குற்றஉணர்ச்சி காரணமாகப் பெற்றோருடன் கண்பார்த்துப் பேசமாட்டார்கள், யாராவது எதையாவது சொன்னால் அமைதியாக இருப்பார்கள்.

தனிமையை விரும்புவது, ஒதுங்குவது, பபுள் கம் மெல்லுவது, மவுத் ஃபிரெஷ்னர் பயன்படுத்துவது, வாயை அடிக்கடி கொப்பளிப்பது போன்ற புதிய பழக்கங்கள் வரலாம்.

`எனக்கு நீங்கள் வேண்டாம். என் நண்பர்கள் இருக்கிறார்கள். என் வழியை நான் பார்த்துக்கொள்கிறேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்கலாம்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

நேரடியாகக் கேளுங்கள்!

ஒருவேளை போதைக்கு அடிமையாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் நேரடியாக அதைக் கேளுங்கள். பலர் அதை ஒரு வாய்ப்பாகக் கருதி மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் உங்களின் அன்பான, அக்கறையான அணுகுமுறை அவர்களுக்கு உதவலாம்.

போதை மருந்துகள்... எப்படியெல்லாம் கிடைக்கின்றன? திடுக்கிடும் பின்னணி.... அடுத்த வாரம்!

- மீள்வோம்
அடுத்த கட்டுரைக்கு