Published:Updated:

பிள்ளைகளை அச்சுறுத்தும் போதை வலை: பெற்றோராக உங்கள் கடமை என்ன? - நான் அடிமை இல்லை - 15

ஆரோக்கியத்தின் அவசியம் குறித்த உரையாடல்கள் உங்கள் குடும்பத்தில், குறிப்பாக பிள்ளைகளுக்கு மத்தியில் அடிக்கடி இடம்பெற வேண்டும். தூக்க மாத்திரை சாப்பிடுவது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது எனப் பிள்ளைகளுக்கு முன் பெற்றோர் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

உங்கள் குழந்தை போதையின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறீர்களா..? எந்தக் காலத்திலும் போதையின் பக்கம் அவர்களது கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா? இந்த நிலையில் பெற்றோராக உங்கள் அணுகுமுறை மிகவும் முக்கியம். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் கடுமையாகப் பேசுவதோ, கண்டிப்பதோ எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். தவிர, இந்த விஷயத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் என்பது வயதுக்கேற்பவும் நிகழ்த்தப்பட வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். வயதுக்கேற்ற உரையாடல் மாதிரியையும் வலியுறுத்துகிறார்கள்... அதன்படி...

Parenting
Parenting
Photo by Daiga Ellaby on Unsplash

10 - 12 வயது

இந்த வயதுப் பிள்ளைகள் மிகச் சுலபமாக நண்பர்கள், சக வயதினரின் வற்புறுத்தலுக்குப் பணிந்து, போதை உள்ளிட்ட அனைத்து தகாத பழக்கங்களுக்கும் இலக்காவார்கள். இவர்களிடம் பேசும்போது, `எந்த விஷயமாக இருந்தாலும் அம்மா-அப்பா மேல பழியைப் போடு. அம்மா திட்டுவாங்க... அப்பா கோபப்படுவாரு'னு சொல்லி அவங்களுக்கு நோ சொல்லு' எனக் கற்றுக் கொடுக்கலாம்.

13 - 15 வயது

விரும்பாத அல்லது பெற்றோர் அனுமதிக்காத, சட்டத்துக்குப் புறம்பான எந்த விஷயத்துக்கும் `நோ' சொல்லத் தயங்கக் கூடாது என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பழக்க வேண்டும். `நோ' சொல்வதால் அடுத்தவர்களுக்கு தங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணம் உருவாகிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை என்றும் புரிய வைக்க வேண்டும்.

say No
say No

போதை, மது போன்ற விஷயங்கள், உங்கள் குழந்தைகளின் தோற்றத்தில் எத்தகைய பாதிப்புகளை, மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எடுத்துச் சொல்லலாம். இந்த வயதில் பெரும்பாலான பிள்ளைகளுக்கும் தம் தோற்றம் குறித்த அக்கறை அதிகமிருக்கும் என்பதால் பெற்றோரின் இந்த அலர்ட் அவர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

16 - 18 வயது

யார், எதற்கு வற்புறுத்தினாலும் தம் கொள்கையில் உறுதியாக இருப்பதிலிருந்து தவறக் கூடாது என்பதை இந்த வயதினருக்குச் சொல்லலாம். எதிர்காலத்தைப் பற்றி கனவுகள் காணும் வயது என்பதால் பிள்ளைகளின் போதைப் பழக்கமானது அவர்களது மேல்படிப்பு, வேலை உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என்பதையும் புரிய வைக்கலாம்.

Parenting
Parenting
Image by Free-Photos from Pixabay
தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! - நான் அடிமை இல்லை 11

19 ப்ளஸ்

எந்த வயதில் எதைச் செய்ய அனுமதி என்பதைப் பிள்ளைகளுக்குக் கறாராக உணர்த்த வேண்டும். உதாரணத்துக்கு 18 வயதுக்குப் பிறகுதான் டூ வீலர் ஓட்ட அனுமதி என்பதுபோல உங்கள் குடும்ப விதிமுறைகளை அடிக்கடி பிள்ளைகளுக்கு நினைவுபடுத்துங்கள்.

ஆரோக்கியத்தின் அவசியம் குறித்த உரையாடல்கள் உங்கள் குடும்பத்தில், குறிப்பாக பிள்ளைகளுக்கு மத்தியில் அடிக்கடி இடம்பெற வேண்டும். தூக்க மாத்திரை சாப்பிடுவது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது எனப் பிள்ளைகளுக்கு முன் பெற்றோர் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இவற்றைப் பார்த்து வளரும் பிள்ளைகள் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் போதைப் பொருள்களைத் தேடிப் போய் வாங்கிப் பயன்படுத்தக்கூடும்.

Don't Judge
Don't Judge
போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் - நான் அடிமை இல்லை - 13

அனைத்து வயதினருக்கும்

குழந்தைகளை எந்த விஷயத்திலும் மட்டம் தட்டிப் பேசவோ, மற்றவர்களுடன் ஒப்பிடவோ வேண்டாம். படிப்பு, விளையாட்டு என எல்லா விஷயங்களிலும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்குங்கள். தோற்றுவிட்டால் பெற்றோர் விமர்சிப்பார்கள், கண்டிப்பார்கள் என்ற பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

என்னதான் கண்டிப்பான பெற்றோராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு உங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்துங்கள். பிள்ளைகளை ஜட்ஜ் செய்யாதீர்கள்... குறை சொல்லாதீர்கள்... அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும்விதமாகப் பேசாதீர்கள்.

வாழ்க்கையில் ஒருமுறைகூட போதைப் பொருளை அனுபவித்திராத இளைஞர்கள் அதற்குக் காரணமாகச் சொல்வது அவர்களின் பெற்றோரின் நல்லொழுக்கத்தை. பெற்றோருக்கு அந்தப் பழக்கங்கள் இல்லாததைப் பார்த்து வளர்ந்ததால் தாங்களும் போதைப் பொருள்களின் பக்கம் திரும்பவில்லை என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Ramille Soares on Unsplash
போதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி? - நான் அடிமை இல்லை - 14

டிரக் டேட்டா

பெற்றோரின் பங்களிப்பும் அக்கறையும் அதிகமிருக்கும்பட்சத்தில் அவர்களின் பிள்ளைகள் போதையின் பாதையை நாடுவதில்லை என்பது உலகளவிலான உண்மையான ஆய்வு முடிவு.

குடும்ப விதிமுறைகளில் கண்டிப்பாக இருக்கும் பெற்றோரை மீறியும் எதிர்த்தும் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்குள் செல்வதில்லை. பெற்றோரால் கண்காணிக்கப்படாத பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்குள் செல்ல மற்றவர்களைவிட 4 மடங்கு வாய்ப்புகள் அதிகம்.

புகை, மது அல்லது போதைப் பழக்கமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட நபர் உள்ள வீட்டுச் சூழலில் 46 சதவிகித குழந்தைகள் வளர்கிறார்கள்.

12 முதல் 25 வயதில் அளவுக்கதிக போதைப் பயன்பாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

சட்டங்களையும் தடைகளையும் மீறி ஆன்லைனில் நடக்கும் போதை விற்பனை... அது பற்றி அடுத்த அத்தியாயத்தில்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு