Election bannerElection banner
Published:Updated:

கொன்றெடுக்கும் கொரோனாவை வென்றிடுமா ரெம்டெசிவர்..?

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2 ( Photo: AP )

இதுவரை கொரோனாவுக்கு எதிராக HCQS, குளோரோக்வின், அசித்ரோமைசின் போன்ற பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், சமீப காலமாக ரெம்டெசிவர் கொரோனாவுக்கு எதிராகப் புதிதாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு மிகச்சிறிய எதிரி, தனது நுண்ணிய கரங்கள் கொண்டு மொத்த மனித இனத்தையே கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்தையுமே வென்று தன் வசமாக்கிக்கொண்டுள்ள இந்த வைரஸைக் கொல்ல, ரெம்டெசிவர் எனும் மருந்தை உலக நாடுகள் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கின்றன. உண்மையிலேயே வலிமை மிக்க கொரோனாவை அழித்துவிடுமா இந்த ரெம்டெசிவர் எனும் புதுவரவு என்பதற்கு முன், அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

கோவிட் 19 நோயைப் பரவச் செய்யும் `சார்ஸ் கோவிட்-2' என்ற கொரோனா வைரஸ், ஆர்.என்.ஏ வகையான வைரஸ் என்பது ஏற்கெனவே நமக்கு தெரியும். அது என்ன ஆர்.என்.ஏ வைரஸ் என்பவர்களுக்காக, பள்ளியில் படித்த அறிவியலைச் சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம்...

மரபணு
மரபணு

நமது உடலில் இருக்கும் செல்கள் அனைத்திலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ என இரண்டு வகையான நியூக்ளிக் அமிலங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் செல்லின் மத்தியில் டி.என்.ஏ.வும் அதைச் சுற்றிலும் நீள்வட்டப் பாதைகளில் ஆர்.என்.ஏ-வும் ஓடிக்கொண்டிருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தது நினைவில் வருகிறதல்லவா..?

இந்த டி.என்.ஏ உட்கார்ந்திருக்கும் நியூக்கிளியஸ் என்ற உட்கருவில்தான் அனைத்து மரபணுக்களின் கெமிஸ்ட்ரியும், அவற்றின் புரத கோட்பாடுகளும் அடங்கியுள்ளன என்பதை மறுபடி ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம்.

இந்த டி.என்.ஏ, ஒரு நிறுவனத்தின் மேலதிகாரிபோல என்றால், அந்த அதிகாரி இடும் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள்தான் ஆர்.என்.ஏ-க்கள். ஓரிடத்தில் உட்கார்ந்தபடி டி.என்.ஏ நம் செல்களுக்குத் தேவைப்படும் புரதத்தைத் தயாரிக்கும் கட்டளைகளைப் பிறப்பிக்க, அந்தக் கட்டளைகளை ஓடியோடி நிறைவு செய்கின்றன செல்களின் சைட்டோபிளாஸம் பகுதியில் உள்ள ஆர்.என்.ஏ-க்கள். கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் எப்படி மெக்கானிக், ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன் எனப் பல பணியாளர்கள் தேவையோ அதேபோல... இந்த ஆர்.என்.ஏ-க்களும் tRNA, mRNA, rRNA என்று தேவைக்குத் தகுந்தவாறு தம்மைத் தாமே மாற்றிக்கொண்டு செல்களுக்குத் தேவையானதைச் செய்துகொடுக்கின்றன.

எளிமையாகச் சொல்வதென்றால் ஒரு முழுமையான செல் என்பது வேலை செய்யும் ஆர்.என்.ஏ-க்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சூப்பர்வைசரான டி.என்.ஏ இரண்டும் சேர்ந்தது. அவ்வளவுதான்...

Corona Virus
Corona Virus

இப்போது பள்ளிப் பாடத்திலிருந்து கொரோனாவுக்குச் செல்வோம் வாருங்கள்.

பொதுவாக இந்த வைரஸ்கள், மற்ற செல்கள்போல முழுமையானதாக இல்லாமல், டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ என ஏதாவது ஒன்றை மட்டுமே கொண்டிருக்கும்... அவை எதை வைத்துள்ளதோ அவற்றின் பேரில் ஆர்.என்.ஏ. வைரஸ் அல்லது டி.என்.ஏ வைரஸ் என்று வகைப்படுத்தவும் படுகின்றன.

இதில் நமது கொரோனா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் என்பதும், இந்த ஆர்.என்.ஏ வைரஸ்கள் வேலையாட்கள் வகையைச் சேர்ந்தது என்பதால், சாதகமான இடத்தில் வளர்வதோடு, புதிய சாதகமற்ற இடத்திலும் சூழ்நிலையிலும்கூட தம்மை மாற்றிக்கொண்டு (மியூடேஷன்) எப்படியாவது தமது வேலையைச் செய்து முடிக்கும் என்பதும்தான் கொரோனாவில் நமக்கு இருக்கும் சிக்கல்...

ஆனால், இதில் இருக்கும் ஒரு சாதகத்தைப் பயன்படுத்தி இதை வெல்ல முடியாதா என்று யோசிக்கையில் வந்ததுதான் இந்த ரெம்டெசிவர் ஐடியா.

செல்களில் ஆர்.என்.ஏ-க்களைக் கட்டுப்படுத்த டி.என்.ஏ சூப்பர்வைசர் தேவை என்று பார்த்தோமல்லவா..? அப்படியென்றால், இந்த ஆர்.என்.ஏ வைரஸ்களைக் கட்டுப்படுத்த ஒரு டி.என்.ஏ.வை ஏன் மருந்தாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்விக்கு விடையாக வந்ததுதான் ரெம்டெசிவர்...

கொரோனா போன்ற ஆர்.என்.ஏ வைரஸ்கள் தங்களது பெருக்கத்துக்கு பெரிதும் நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமரேஸ் (RNA polymerase) என்ற நொதியைத்தான்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

டி.என்.ஏ நியூக்ளிக் அமிலம் போன்ற கட்டமைப்பு கொண்ட புதிய மருந்தான ரெம்டெசிவர், ஆர்.என்.ஏ பாலிமரேஸை செயலிழக்கச் செய்து, அதன் மூலமாக வைரஸ்களின் பெருக்கத்தைக் குறைத்தோ, வீரியம் குறைந்த வைரஸ்களை உருவாக்கியோ நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், செழித்து வளரும் ஒரு செடியில் இலைவெட்டுத் தாக்குதல் ஏற்படும்போது, உருவாகும் காய்கனிகளும் நோய்வாய்ப்பட்டிருப்பதுபோல, ரெம்டெசிவர் தாக்கத்தால் உருவாகும் வைரஸ்கள் தங்களது வீரியத்தன்மையை இழந்துவிடுகின்றன...

இதுவரை கொரோனாவுக்கு எதிராக HCQS, குளோரோக்வின், அசித்ரோமைசின் போன்ற பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், சமீப காலமாக ரெம்டெசிவர் கொரோனாவுக்கு எதிராகப் புதிதாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ரெம்டெசிவர் மருந்து, இன்றைய கொரோனா காலத்தில் கண்டறியப்பட்ட புதிய மருந்தொன்றும் அல்ல. பல வருடங்கள் முன்பு எபோலாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, கைவிடப்பட்டு... பிறகு சார்ஸ், மெர்ஸ் போன்ற கோவிட் நோய்க்கு முந்தைய ஆர்.என்.ஏ வைரஸ்களுக்கு எதிராக ஆய்வகங்களில் வழங்கப்பட்டு, அதில் நல்ல முன்னேற்றம் இருந்ததால், தற்போது கொரோனாவுக்கு எதிராகவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவர் மருந்தை முதன்முதலாகத் தயாரித்த அமெரிக்க மருந்து நிறுவனமான `கில்லியட் சயின்சஸ்', யூஎஸ் எஃப்.டி.ஏ. உடன் இணைந்து நடத்திய ஆரம்பகட்ட சோதனையில், கோவிட் நோய்க்கு எதிரான முழுமையான தீர்வாக இந்த மருந்து இல்லாவிட்டாலும், கோவிட் நோயின் தீவிரத்தை இது நன்கு குறைக்கிறது என்று கூறியுள்ளது.

கொரோனா
கொரோனா

நரம்புகளின் மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தை கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்ட ஆரம்ப நாள்களிலேயே, ஐந்து முதல் பத்து நாள்களுக்குச் செலுத்தினால் விரைவில் குணமடைகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

மேலும், கடுமையான நோய் அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் வழங்கப்பட்டு, அவற்றின் நேர்மறை முடிவுகளுக்காக மருத்துவ உலகம் தற்சமயம் காத்துக்கொண்டிருக்கிறது...

ஆனால், இதுவரை வந்த முடிவுகள் பாசிடிவ்வாக இருப்பதால் கொரோனாவுக்கான மருந்தாக ரெம்டெசிவரை அமெரிக்கா பரிந்துரை செய்வதுடன், ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி உட்பட பல நாடுகளும் இந்த ரெம்டெசிவரை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வரும் சூழலில், நமது ஐசிஎம்ஆர் ரெம்டெசிவர் மருந்தினை சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.

மேலும், இந்த ரெம்டெசிவர் விலை விவரங்கள் சரியாகத் தெரியாத போதிலும், நிச்சயமாக எந்தவொரு புதிய மருந்து சிகிச்சை போல, ரெம்டெசிவர் அதிகமாக இருக்கும் என்பதால், விலையைக் குறைத்து எளியவருக்கும் கிடைக்கும் வழியில் இந்தியாவிலேயே இந்த மருந்தைத் தயாரிக்கும் செயல்முறைகளும் முடுக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதற்கிடையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் என்.ஐ.ஹெச் ஆகியவை ரெம்டெசிவர் நோயாளிகளிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளன.

மேலும் கொரோனாவுக்கு எதிரான இந்தப் புதிய மருந்திலும் ஒவ்வாமை, ரத்த அணுக்கள் குறைபாடு, குடல் அழற்சி, கல்லீரல் பாதிப்புகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளன.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

என்றாலும் கொரோனாவின் பாதிப்புகளுக்கு முன்பு இது பெரிதாக இருக்காது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கொன்றெடுக்கும் கொரோனாவை வென்றெடுக்குமா ரெம்டெசிவர் என்ற கேள்விக்கான பதில் இதுதான்.

`ரெம்டெசிவர்...' என்ற பெயரில் இருக்கும் `டெசிவர்' என்பதற்கு வைரஸ்களுக்கு எதிரான அமிலம் என்ற பொருள்தான் என்றாலும், தொடக்கத்தில் இருக்கும் `ரெம்' என்பது தீர்மானமற்ற தொடக்கம் என்பதைக் குறிக்கும் சொல் என்கிறார்கள்.

ஆக...

பிறப்பில் மட்டுமன்றி, அதன் செயல்பாட்டிலும் இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத இந்த மருந்தின் நன்மை தீமைகள் பற்றிய முழுமையான முடிவுகளுக்கு இன்னும் சில காலம் பொறுத்திருக்கத்தான் வேண்டியுள்ளது...

அதுவரை, கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்த மூன்று முக்கிய பாடங்களான...

`Washing'

`Masking'

`Distancing'

அதாவது, முறையாகக் கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை மறவாமல் கடைப்பிடிப்போம்...

கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்...!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு