Published:Updated:

``நீங்கள் நினைத்தால் புகைப்பதை நிறுத்தலாம்!’’ டாக்டர் அட்வைஸ் #WorldNoTobaccoDay

World No Tobacco Day
World No Tobacco Day

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார அமைப்பு ஒரு கருவை மையப்படுத்தி புகையிலை உபயோகத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அப்படி இந்த வருட தீம், புகையிலை விளம்பரங்களுக்கு எதிராக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது.

செர்ரி, பஞ்சு மிட்டாய், பபுள் கம் என்று இளைஞர்களுக்குப் பிடித்த வாசனைகள்... வழக்கமான உருண்டையல்லாத வேறு வடிவங்கள்... ஆபத்து குறைவான சிகரெட் வகையிது போன்ற சமூகவலைதள விளம்பரங்கள்... இளைஞர்கள் அதிகம் புழங்குகிற பள்ளி, கல்லூரி அருகே நடக்கும் விற்பனைகள் என இளைஞர்களைத்தான் புகையிலை விளம்பரங்கள் அதிகம் குறி வைத்துக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் சிகரெட்டுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்படிக் கண்டறிவது, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதுபற்றி புற்றுநோய் மருத்துவர் கங்காதரனிடம் பேசினோம்.

புற்றுநோய் மருத்துவர் கங்காதரன்
புற்றுநோய் மருத்துவர் கங்காதரன்

``புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் புகையிலையில் இருக்கின்றன என்று காலங்காலமாக மருத்துவர்கள் நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எங்கள் அறிவுரைகளை புகையிலை தொடர்பான விளம்பரங்கள் விஞ்சி நிற்கின்றன. மற்ற புற்றுநோய்களை ஆரம்பகட்டத்தில் சிகிச்சை அளித்து, நோயாளியைக் காப்பாற்ற முடியும். ஆனால், புகைபிடிப்பதால் வருகிற நுரையீரல் புற்றுநோயை, அதன் ஆரம்பத்தில் கண்டுபிடித்தாலும் குணப்படுத்துவது கடினம்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? வெளிநாடுகளில் நுரையீரல் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வந்துவிட்டதால், புகைபிடிக்கிற பழக்கம் குறைந்துகொண்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டில் இந்தப் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

சிகரெட் புகையில் இருக்கிற புற்றுநோய் காரணிகள் கணையம் மற்றும் சிறுநீர்ப்பையில் புற்றை ஏற்படுத்திவிடும். சிலருக்கு புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்தப் புற்றுநோய்கூட வரலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. புகையிலை மெல்லுகிற பழக்கம் இருப்பவர்களுக்கோ தொண்டையில் ஆரம்பித்து, உணவுக்குழாய், இரைப்பை, சிறுநீர்ப்பை வரைக்கும் புற்றுநோய் வரும்.

85 சதவிகித நுரையீரல் புற்றுநோய் புகைப்பழக்கம் காரணமாகத்தான் வருகிறது. மீதமுள்ள 15 சதவிகிதம் அருகில் இருப்பவர்கள் புகைபிடிப்பதாலும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் வருகிறது. அப்படியென்றால், 85 சதவிகிதம் நம்மால் நுரையீரல் புற்றை வராமல் தடுக்க முடியும்தானே?’’ என்று கேள்வி எழுப்புகிற டாக்டர் கங்காதரன் தொடர்ந்தார்.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்! - அறிகுறிகள் என்ன? #VikatanInforgraphic

``தற்போது பெண்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால், மாதவிடாய் பிரச்னை, கருமுட்டை வெளிப்படுவதில் பிரச்னை, குழந்தை பிறப்பதில் பிரச்னை ஆகியவற்றுடன் புற்றுநோய் ஆபத்தும் இருக்கிறது.

ஃபில்டர் வைத்த சிகரெட், இ சிகரெட் குடித்தால் கேன்சர் வராது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை கிடையாது.

இப்போது சிகரெட் பிடித்தே ஆக வேண்டுமென்று தோன்றினாலோ, சிகரெட் பிடித்தாலல்தான் வேலை செய்ய முடிகிறது என்று நினைத்தாலோ, சிகரெட் பிடிக்க முடியாத நேரத்தில் கோபம், சோர்வு வந்தாலோ நீங்கள் புகைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் இந்த நிலையில் இருக்கிறீர்கள் என்றால், டீ அடிக்‌ஷன் மையத்துக்குச் சென்று கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகள் எடுத்து சரி செய்துகொள்ளலாம். `நான் சிகரெட் பிடிக்கிறதை விடணும்னு பார்க்கிறேன். முடியல’ என்பவர்கள் டீ அடிக்‌ஷன் மையத்துக்குச் சென்றால் உடனே மீண்டு விடுவார்கள். ஆனால், குடும்பத்தினரால் வற்புறுத்தி அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீள்வது சற்றுக் கடினம்தான். புகைக்கு அடிமையானவர்கள் இதன் அவசரத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தால் மீண்டுவிடலாம்.

World No Tobacco Day
World No Tobacco Day
`மருத்துவமனை க்வாரன்டீனைவிட வீடு பெட்டர்!' - கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா

புகைப்பழக்கம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தீராத துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதால், அதைப் படிப்படியாக விட்டுவிடுவதே நல்லது’’ என்று முடித்தார் புற்றுநோய் மருத்துவர் கங்காதரன்.

அடுத்த கட்டுரைக்கு